Tuesday, September 5, 2017

தலையங்கம்
அனிதா மரணம் தந்த பாடம்




‘சில மலர்கள் மணம் வீசும் வகையில் அழகாக மலரும்’. ஆனால், மலர்ந்த வேகத்திலேயே வாடிப்போய்விடும். அதேப்போலத்தான் மாணவி அனிதாவின் வாழ்க்கையும் முடிந்துவிட்டது.

செப்டம்பர் 04 2017, 03:00 AM

‘சில மலர்கள் மணம் வீசும் வகையில் அழகாக மலரும்’. ஆனால், மலர்ந்த வேகத்திலேயே வாடிப்போய்விடும். அதேப்போலத்தான் மாணவி அனிதாவின் வாழ்க்கையும் முடிந்து விட்டது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்துவிட்டு, பிளஸ்–2 மதிப்பெண்களின் அடிப்படையில்தான் மருத்துவ மாணவர்களின் சேர்க்கை நடக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஏறி, வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே அவரை உற்றுநோக்க வைத்தது. அரசு முயற்சி செய்தது, அரசியல் கட்சிகள் அறிக்கைகள் வெளியிட்டன. ஆங்காங்கு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதற்கெல்லாம் கிடைக்காத வெற்றி, மாணவி அனிதா தொடுத்த வழக்கில் கிடைத்து விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டில் அனிதாவின் வழக்குக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. ‘நீட்’ தேர்வின் அடிப்படையில்தான் இந்த ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலைமை உருவாகியது. இது அனிதாவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவுக்கும் அனிதா படிப்பில் மிகவும் சுட்டியான ஒரு பெண்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் தந்தை மிகவும் ஏழை. தன் மகளை படிக்கவைப்பதில் மிகவும் ஆர்வமுடையவர். அனிதாவுக்கு சிறுவயதில் இருந்தே, ‘‘தான் ஒரு டாக்டர் ஆகவேண்டும்’’ என்ற கனவு இருந்தது. பிளஸ்–2 தேர்வில் 1,200–க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றார். இவரது கட்–ஆப் மார்க் 200–க்கு 196.75 ஆகும். ஆனால், ‘நீட்’ தேர்வில் அவருக்கு கிடைத்தது 720–க்கு 86 மதிப்பெண்கள்தான். சுப்ரீம் கோர்ட்டில் வந்த தீர்ப்பாலும், ‘நீட்’ தேர்வில் அவர் எடுத்த குறைவான மதிப்பெண்ணாலும் அவருடைய டாக்டர் கனவு தகர்ந்தது என்று சோகமாக காணப்பட்டார். ‘அப்துல்கலாம்’ படித்த சென்னை எம்.ஐ.டி.யில் அவருக்கு பொறியியல் படிப்புக்கான இடம் கிடைத்தது. ஒரத்தநாடு கல்லூரியில் கால்நடை மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்தது. ஆனால், இதில் எல்லாம் அவருக்கு திருப்தி கிடைக்காமல், ‘நான் டாக்டராக முடியவில்லையே’ என்ற கவலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தமிழ்நாடு முழுவதுமே தங்கள் வீட்டில் உள்ள ஒரு பெண்ணை இழந்ததுபோல சோகக்கடலில் மூழ்கியது. கடந்த ஆண்டே சுப்ரீம் கோர்ட்டில் இந்த ஒரு ஆண்டுதான் தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கிறோம் என்று சொன்னபிறகும், மாணவர்களிடம் வீணான நம்பிக்கையை மத்திய, மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் வளர்த்தது நிச்சயமாக ஏற்புடையதல்ல. முதலிலேயே மாணவர்களிடம் தெளிவாக சொல்லியிருக்கவேண்டும். கிடைப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது, கிடைக்காமல் போவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லி, ‘நீட்’ தேர்வுக்கும் அவர்களை தயார்படுத்தி இருக்கவேண்டும்.

மாநில பாடத்திட்டத்தில் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்ற அனிதாவால், ‘நீட்’ தேர்வில் 86 மதிப்பெண்தான் பெறமுடிகிறது என்றால், நமது கல்வியின் தரம் எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிகிறது. இவ்வளவு புத்திசாலியான அனிதாவாலேயே ‘நீட்’ தேர்வில் மதிப்பெண் எடுக்கமுடியவில்லை என்றால், வேறு எந்த கிராமப்புற ஏழை மாணவர்களால் ‘நீட்’ தேர்வில் வெற்றிபெற முடியும்?. உடனடியாக பாடத்தின் தரத்தை உயர்த்தவேண்டும். ‘நீட்’ தேர்வை சந்திக்க சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். ‘இனி ஒரு அனிதாவை இழக்க தமிழ்நாடு தயாராக இல்லை’. அனிதா மரணத்தை ஒரு பாடமாகக்கொண்டு அரசு செயல்படவேண்டும். 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கு தற்கொலை உணர்வு வராத வகையில், வாழ்வில் எதையும் தைரியமாக எதிர்கொள்ள ‘‘வலுவான இதயம், எதையும் தாங்கும் இதயம்’’ கொண்டிருக்க மனநல வகுப்புகள் நடத்தி ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

No comments:

Post a Comment

Shape, size of retina veins can predict stroke risk: Study

Shape, size of retina veins can predict stroke risk: Study DurgeshNandan.Jha@timesofindia.com 15.01.2025 New Delhi : The shape and size of v...