Wednesday, September 27, 2017

தலையங்கம்

சந்தேகங்களுக்கு தெளிவு பிறக்கட்டும்



இதுவரையில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த தலைவர்கள் சிகிச்சைபெற்றபோது அவர்களது உடல்நிலை தொடர்பான தகவல்களெல்லாம் மக்களுக்கு தெரியும் வகையில், ஒரு வெளிப்படைத்தன்மை இருந்தது.

செப்டம்பர் 27 2017, 03:00 AM

இதுவரையில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த தலைவர்கள் சிகிச்சைபெற்றபோது அவர்களது உடல்நிலை தொடர்பான தகவல்களெல்லாம் மக்களுக்கு தெரியும் வகையில், ஒரு வெளிப்படைத்தன்மை இருந்தது. எம்.ஜி.ஆர். ‘புரூக்ளின்’ மருத்துவமனையில் இருந்தபோதுகூட, அவர் வழக்கமாக அணியும் தொப்பி, கருப்பு கண்ணாடி இல்லாமல், பெரிய ‘பவர்கிளாஸ்’ அணிந்து ஆஸ்பத்திரி உடையோடு படுக்கையில் அமர்ந்திருக்கும் படங்களும், வீடியோ காட்சிகளும் வெளியே வந்தன. ஆனால், ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22–ந்தேதியிலிருந்து அவர் உயிரைநீத்த டிசம்பர் 5–ந்தேதி வரை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் எப்படி இருந்தார்?, என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது? என்ற விவரங்களெல்லாம் முழுமையாக மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார், கையெழுத்திட்டு பத்திரிகைக்குறிப்பு அனுப்பினார் என்றெல்லாம் வெளிவந்ததேதவிர, அதுதொடர்பான எந்த படமும் வெளியே வரவில்லை. அவ்வப்போது இட்லி சாப்பிட்டார், தயிர்சாதம் சாப்பிட்டார், ஆப்பிளை நசித்து சாப்பிட்டார் என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்தி கசியவிடப்பட்டது.

இந்தநிலையில், அவர் மரணம் அடைந்தபிறகு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் உடல்நலக்குறைவு தொடர்பாக அரசியல் அரங்கில் பல்வேறு சந்தேகங்கள் வெளியிடப்பட்டன. எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என்று 2 அணிகளாக பிரிந்திருந்த நேரத்தில்கூட ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். இந்த 2 அணிகளும் இணைந்தபிறகு அதை நிறைவேற்றும்வகையில், 17.8.2017 அன்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஒரு விசாரணை ஆணையம் அமைக்கப்படும்’ என்று அறிவித்தார். அதற்குப்பிறகும் பல செய்திகள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சந்தேகத்தை கிளப்பி வெளிவந்தன. சிலதினங்களுக்கு முன்பு திடீரென்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில், ஒரு பெரிய அணுகுண்டை தூக்கிப்போட்டார். ‘‘ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார் என்று ஏதேதோ பொய் சொன்னோம். ஆனால், உண்மையிலேயே அதை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. உங்களிடம் எல்லாம் பெரிய மன்னிப்பு கேட்கிறேன். எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரனும், திவாகரன் மகன் ஜெய் ஆனந்தும், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ படம் எங்களிடம் இருக்கின்றன என்று கூறுகிறார்கள். நேற்று முன்தினம் டி.டி.வி.தினகரன், தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து ஜெயலலிதா வார்டுக்கு மாற்றப்பட்டபிறகு நைட்டி அணிந்துகொண்டு டி.வி. பார்க்கும் வீடியோ இருக்கிறது. இந்த வீடியோவை சசிகலாதான் எடுத்தார். தேர்தல் நேரத்தில் பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்று கூறினார். இத்தகைய சூழ்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து எதிர்கட்சிகளும் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்யவேண்டும் என்று கூறுகிறார்கள். தற்போது ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்திட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு விசாரணை கமி‌ஷன் அமைக்கப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக மக்களின் மனதில் உள்ள சந்தேகங்களை போக்கும்வகையில் இந்த கமி‌ஷன் அறிக்கை இருக்கவேண்டும். வழக்கமாக இதுபோன்ற கமி‌ஷனின் பதவிகாலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக்கொண்டு இருக்கும். இந்த விசாரணை கமி‌ஷன் குறிப்பிட்ட காலத்துக்குள், தன் விசாரணையை முடித்து அறிக்கை தருவதற்கு அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் தமிழக அரசும், சம்பந்தப்பட்டவர்களும் வழங்கவேண்டும். முழுமையான அளவில், ஆழமாக விசாரணை செய்து எங்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்று கூறும் மக்களுக்கு, இந்த அறிக்கையே பதிலாக அமையட்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு ஒரு தெளிவுபிறக்கட்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024