மாவட்டங்களில் மின் தடை: மக்கள் அவதி
சென்னை தவிர்த்த பகுதிகளில், இரவில் தொடரும் மின் தடையால், மக்கள் அவதிக்கு உள்ளாகி வருவது, மின் வாரிய அதிகாரிகளுக்கு தெரியுமா என்ற சந்தேகம் எழுந்துஉள்ளது.
தமிழகத்தில், 2015ல் இருந்து, தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின்சாரம் கிடைக்கிறது. இதனால், மின் பற்றாக்குறை ஏற்படுவதில்லை. இருப்பினும், தேவை அதிகமுள்ள பகுதிகளில், 'ஓவர் லோடு' காரணமாக, மின் தடை தொடர்கிறது. இந் நிலையில், சில தினங்களாக, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், மாலை முதல் இரவு வரை, மின் தடை செய்யப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, மின் நுகர்வோர் கூறியதாவது:
மாலை, 6:00 மணிக்கு, மின் தடை ஏற்படுகிறது. அரைமணி நேரம் கழித்து,மின்சாரம் வருகிறது. இது தொடர்பாக, உதவி பொறியாளர்களிடம் கேட்க முயற்சித்த போது,போனை எடுக்க வில்லை. செயல், மேற்பார்வை பொறியாளர்களிடம் கேட்டால், 'மின்
தேவையை பூர்த்தி செய்வதில், திடீரென சிரமம் ஏற்பட்டுள்ளதால், மின் தடை செய்யப்படுகிறது' என்றனர்.'மீண்டும் மின் தடையா?' என கேட்டதற்கு,
அவர்கள், சுதாரித்து, 'மின் சாதன பழுதால், மின் தடை ஏற்பட்டுள்ளது; விரைவில், வந்து விடும்' என, கூறுகின்றனர். இந்த மின் தடை விபரம், உயர் அதிகாரிகளுக்கு தெரியுமா என, தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைத்து வந்ததால், அனல், நீர் மின் நிலையங்களில் உற்பத்தி அளவுகுறைக்கப்பட்டது. 'சில தினங்களாக,காற்றாலை மின்சாரம் முற்றிலுமாக கைவிரித்து விட்டது. 'இதனால், நெருக்கடி நிலை நிலவினாலும், தடையில்லாமல் மின் சப்ளை செய்யப்படுகிறது. 15 நிமிடத்திற்கு மேல் மின் தடை இருந்தால், மக்கள், உடனேமேற்பார்வை, தலைமை பொறியாளர்களிடம் புகார் தெரிவிக்கலாம்' என்றார்.
24 மணி நேரம்! :
மின் வாரியம், தினசரி மின் உற்பத்தி, மின் தேவை, மின் பற்றாக்குறை உள்ளிட்ட விபரங்களை, இரவு, 7:25 மணி; நள்ளிரவு, 1:50 மணி; மறுநாள் காலை, 7:25 மணி ஆகிய, மூன்று நேரங்களில் மட்டும் தெரிவிக்கிறது. அதில், இரு ஆண்டுகளாக, மின் பற்றாக்குறை பூஜ்ஜியமாக உள்ளது. மேற்கண்ட விபரங்களை, 24 மணி நேரமும் தெரிவித்தால், எப்போது, மின் பற்றாக்குறை ஏற்பட்டாலும் தெரிந்துவிடும். - நமது நிருபர் -
No comments:
Post a Comment