Monday, September 4, 2017

அனிதாவின் தியாகம்!

By ஆசிரியர்  |   Published on : 04th September 2017 02:21 AM  |  
'நீட்' தேர்வில் மதிப்பெண் பெறாததால் தனது மருத்துவப் படிப்புக் கனவு தகர்ந்ததால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் அனைவரது மனசாட்சியையும் உலுக்கிப்போட்டிருக்கிறது. அவர் இப்படியொரு விபரீதமான முடிவை எடுத்தது ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, நீதித்துறைக்கும் சேர்த்து அவர் அளித்திருக்கும் கடுமையான கண்டனம்.
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு தகுதிகாண் தேர்வு வேண்டுமென்று உச்சநீதிமன்றம் முடிவெடுத்ததற்கு அடிப்படை காரணம், தனியார் கல்லூரிகளில் பெரும் பணத்தை நன்கொடையாகச் செலுத்தி, தகுதியில்லாத மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதுதான். தனியார் கல்லூரிகளுக்குத் தரப்படும் நன்கொடைக் கலாசாரத்துக்கு முடிவு கட்டுவதுடன் நிற்காமல், நீதித்துறை அதிகாரத்துறையின் செயல்பாடுகளில் தலையிடத் தொடங்கியதின் விளைவுதான் இன்றைய நீட் குழப்பம்.
2011-இல் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு பதவியேற்றவுடன் தமிழகத்தில் சமச்சீர் கல்வியை கைவிட்டு தேசிய அளவிலான கல்வி முறைக்கு மாறுவது என்கிற முடிவை எடுத்தது. அதன்மூலம் இந்தியாவின் ஏனைய மாநில மாணவர்களுக்கு நிகராக, தேசிய அளவில் உயர்கல்விக்கான தகுதிகாண் தேர்வுக்கு தமிழக மாணவர்களும் தயாராவார்கள் என்பதுதான் தமிழக அரசின் முடிவுக்குக் காரணம்.
2011 ஜூலை 18-இல் சென்னை உயர்நீதிமன்றம் அந்த முடிவை நிராகரித்தபோது, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டில் இன்றைய சூழலை தொலைநோக்குப் பார்வையுடன் தமிழக அரசு சிந்தித்திருக்கிறது என்பது வியப்பை அளிக்கிறது. அந்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்ததன் விளைவுதான், இன்று மருத்துவக் கனவு காணும் ஆயிரக்கணக்கான அனிதாக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
ஒருபுறம் உச்சநீதிமன்றம். இன்னொருபுறம் நாளும் பொழுதும் "நீட்' பிரச்னையில் எந்தவிதத் தெளிவான நிலைப்பாடும் எடுக்காமல் கண்ணாமூச்சி விளையாடிய மத்திய அரசு. "நீட்' தேர்வுக்கு மாற்றாக புதியதொரு திட்டம் தரப்படாததும், தனது வாதங்களை வலுவாக எடுத்துரைக்காமல் நீதிமன்றத்தில் கோட்டைவிட்டதும் தமிழக அரசின் குற்றம். மத்திய அரசு காப்பாற்றும் என்கிற நம்பிக்கையில் உச்சநீதிமன்றத்திலான வழக்குக்கு போதிய கவனமும் முக்கியத்துவமும் செலுத்தாமல்விட்டது தமிழக அரசின் மிகப்பெரிய தவறு.
மருத்துவக் கல்லூரிச் சேர்க்கை குறித்து சில தவறான புரிதல்கள் நிலவுகின்றன என்பதை அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து புள்ளிவிவரங்களை எல்லாம் கூர்ந்து கவனிக்கும்போது தெரியவருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு "நீட்' தேர்வால்தான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது எனக் கருதுவது மிகப்பெரிய மாயை.
கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளியில் படித்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் வெறும் 314 மட்டுமே. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 74. தமிழகத்தில் மொத்தம் 388 பேர் மட்டுமே கடந்த 10 ஆண்டுகளில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் படித்து, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாயை கல்விக்காக அரசு செலவு செய்து விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரை மட்டுமே மருத்துவப் படிப்புக்கு அரசுப் பள்ளிகளால் அனுப்ப முடிகிறது என்பது பற்றி யாராவது கவலைப்பட்டிருக்கிறோமா?
அப்படியானால், மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் பெரும்பாலானவர்கள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்களா என்று கேட்டால், அதுவும் இல்லை. தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பிராய்லர் கோழிகளைப்போல மதிப்பெண் பெறுவதற்குத் தயாராக்கப்பட்டவர்கள்தான் மருத்துவக் கல்லூரிகளில் அதிக மதிப்பெண் காரணமாக இடம் பிடிப்பவர்கள்.
"நீட்' மதிப்பெண்ணின் அடிப்படையில் இந்தாண்டு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடந்துமுடிந்துவிட்ட நிலையில், இனி மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்பது சாத்தியமில்லை. இனிமேல் தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் தமிழகத்தின் ஒட்டுமொத்த அதிகார வர்க்கமும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டுமே தவிர, இதில் அரசியல் ஆதாயம் தேட முற்படுவது தமிழகத்துக்கும் தமிழக மாணவர்களுக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகமாக இருக்கும்.
"நீட்' என்கிற தகுதிகாண் தேர்வு மட்டுமே மருத்துவப் படிப்புக்கு அடிப்படை என்று சொன்னால் அப்போது பன்னிரெண்டு ஆண்டுகள் ஒரு மாணவன் பள்ளியில் படிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? "நீட்' தேர்வு என்பது பள்ளிகளை முக்கியத்துவம் இல்லாமல் செய்து, தனியார் பயிற்சி மையங்களை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும்.
பிளஸ் 2 மதிப்பெண், தகுதிகாண் தேர்வில் பெறும் மதிப்பெண் இரண்டையும் சேர்த்து அதனடிப்படையில் மருத்துவத் தேர்ச்சி என்பதுதான் இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என்பதை இதற்கு முன்பே நாம் நமது தலையங்கத்தில் தெளிவுபடுத்தியிருந்தோம். அதேபோல அந்தந்தப் பகுதி மாணவர்களுக்கு அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடமளிக்கும் ஒதுக்கீட்டை கொண்டு
வரும் அதிகாரத்தைக் கல்வி பெறும் உரிமைச் சட்டம் தமிழக அரசுக்கு வழங்கியிருக்கிறது. அதை நடைமுறைப்படுத்தாமல்போனது நமது ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் செய்த தவறு.
இந்தப் பிரச்னைக்கு முடிவு காண்பதற்காகத்தான் அந்த ஏழை மாணவி அனிதா உயிர்த்தியாகம் செய்திருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நியாயமான முடிவு எட்டப்பட்டால் மட்டுமே அனிதாவின் ஆன்மா சாந்தியடையும்!

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025