Saturday, September 16, 2017

அநீதிக்கு துணை போகலாமா?


By டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத்  |   Published on : 15th September 2017 01:21 AM 
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு மூலம்தான் மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இளநிலை படிப்புகளுக்கு மட்டுமல்லாது முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாகி உள்ளது.
நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சில கட்சியினர் மத்தியில் ஓங்கி ஒலிக்கிறது. தனியார் கல்லூரிகளை அதிக அளவில் நடத்தும் தலைவர்களின் கோரிக்கை இதில் அடங்கியுள்ளது. நீட்டை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கொள்ளைக்கு துணைபோவதாகும்.
தமிழக அரசின் இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட்டிலிருந்து நிரந்தர விலக்கு வேண்டும். தமிழக அரசின் உயர்கல்வி இடங்கள் எதற்கும் மத்திய அரசு தனது நுழைவுத் தேர்வை திணிக்கக் கூடாது. மாநில அரசின் உயர் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுதான் நடத்த வேண்டும்.இதில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்பதுதான் சரியான கோரிக்கையாகும்.
ஆனால், இதைவிடுத்து நீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. ஏதும் அறியாத மாணவர்களும், இளைஞர்களும் இக்கோரிக்கைக்கு இரையாகின்றனர். இது வருத்தமளிக்கிறது.
மாநில உரிமைகளுக்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் எதிரான நீட்டிலிருந்து தமிழக அரசின் ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்கு நிரந்தர விலக்கு வேண்டும்.அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நீட்டே வேண்டாம் என்பது சரியல்ல.
ஏனெனில், இந்தியாவில் 63,000-த்திற்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் உள்ளன. 462 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.இவற்றில் சரிபாதிக்கும் மேல், தனியாரிடம் உள்ளன. இவை, மாணவர் சேர்க்கையில் மிகப் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. கட்டணக் கொள்ளையில் ஈடுபடுகின்றன. இந்நிறுவனங்கள் தனித்தனியாக நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி வந்தன. இதனால் மாணவர்கள் பாதிப்படைந்தனர்.
நீட் தேர்வு அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை சரியான முறையில் நடைமுறைப்படுத்தினால் இம் முறைகேடுகளுக்கு முடிவு கட்ட முடியும்.
நாடு முழுவதும் உள்ள அரசு சாரா மருத்துவக் கல்வி நிறுவனங்களும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களும் தனித்தனி நுழைவுத் தேர்வுகளை நடத்தின. அகில இந்தியத் தொகுப்பிற்கும், ராணுவ மருத்துவக் கல்லூரிக்கும் தனித்தனி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதனால், மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், 50-க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டிய கட்டாயநிலை இருந்தது. நீட் இதற்கு முடிவு கட்டியுள்ளது. இது வரவேற்புக்குரியது.
நீட், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், நிகர்நிலை மருத்துவக் கல்லூரிகளிலும் நிலவி வந்த பேக்கேஜ் முறையை ஒழித்துள்ளது. அதாவது, ரூ.2 கோடி முதல் 4 கோடி வரை முன் கட்டணமாக செலுத்தி இளநிலை முதல் உயர் சிறப்பு மருத்துவம் வரை படித்துவிட்டு வெளியில் வரும் முறை ஒழிக்கப்பட்டுள்ளது. இதுவும் வரவேற்புக்குரியது.
மத்திய அரசின் நிறுவனங்கள், அகில இந்தியத் தொகுப்பு இடங்கள், தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்கள்,தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு , நுழைவுத் தேர்வு இன்றி மாணவர் சேர்க்கையை நடத்திட முடியாது.
ஏனெனில் மேற்கண்ட நிறுவனங்களில் அனைத்து மாநிலத்தவரும், வெவ்வேறு கல்வி வாரியங்களில் படித்தவரும் சேர முடியும். மத்திய அரசு இந்த இடங்களுக்காக, ஒரு நுழைவுத் தேர்வை நடத்தியே தீரவேண்டும்.
இந்த நீட் தேர்வில் பல குறைபாடுகள் உள்ளன.அவை களையப்பட வேண்டும்.
நீட் நுழைவுத் தேர்வு இப்பொழுது ஒரு தகுதி காண் தேர்வாகவும் (N​a‌t‌i‌o‌n​a‌l E‌l‌i‌g‌i​b‌i‌l‌i‌t‌y c‌u‌m E‌n‌t‌r​a‌n​c‌e T‌e‌s‌t) உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். குறைந்த பட்ச தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். அதை ஒரு பொது நுழைவுத் தேர்வாக (C‌o‌m‌m‌o‌n E‌n‌t‌r​a‌n​c‌e T‌e‌s‌t) மட்டுமே நடத்த வேண்டும்.
எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் நிறுவனங்களையும் நீட்டின் கீழ் கொண்டுவர வேண்டும்.
இத்தேர்வை மத்திய தேர்வாணையம் மூலம் நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் இத்தேர்வுகளை நடத்த அனுமதிக்கக்கூடாது.
நீட் நுழைவுத்தேர்வுக்கான கட்டணங்களை குறைக்க வேண்டும். தேர்வு மையங்களை அதிகப்படுத்த வேண்டும். ஏழை மாணவர்களுக்கான போக்குவரத்து, தங்கும் வசதிகளுக்கு அரசே உதவி செய்ய வேண்டும்.
= அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், ராணுவ மருத்துவக் கல்லூரி, வெளிநாடு வாழ் இந்தியர்கள், தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசே நுழைவுத் தேர்வை நடத்துவதோடு, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
= அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான இடங்கள் நிரம்பிய பிறகே அரசு சாரா மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.
= அரசு சாரா மருத்துவக் கல்லூரிகள் , எந்தக் காரணம் கொண்டும் மாணவர் சேர்க்கையை நேரடியாக நடத்திட அனுமதிக்கக் கூடாது.
= நிகர் நிலை மருத்துவ இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்.
= ஆண்டு குடும்ப வருமானம் ரூ.12 லட்சத்திற்கு கீழ் உள்ள மாணவர்கள் அரசு சாரா கல்லூரிகளில் பயின்றால் ,அவர்களது கட்டணம் முழுவதையும் மத்திய அரசே ஏற்க வேண்டும்.
= நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களும், மாநில அரசின் ஒதுக்கீட்டிற்கு 50 விழுக்காடு இடங்களை வழங்கிட வேண்டும்.
= டிப்ளமோ மருத்துவப் படிப்புகளில் தொலைதூர மற்றும் கடினமான (R‌e‌m‌o‌t‌e a‌n‌d D‌i‌f‌f‌i​c‌u‌l‌t)) பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட இந்திய மருத்துவக் கழக விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன. அதுபோல் கிராமப்புற, அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், உள்ளாட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், அகில இந்திய தொகுப்பு இடங்களிலும் 50 விழுக்காட்டு இடங்களை ஒதுக்கீடு செய்ய திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
= தொலைதூர மற்றும் கடினமான (R‌e‌m‌o‌t‌e a‌n‌d D‌i‌f‌f‌i​c‌u‌l‌t) பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்ணுடன் கூடுதலாக 30 விழுக்காடு வரை மதிப்பெண்கள் வழங்கிட, இந்திய மருத்துவக் கழகத்தின் விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டது.
அதுபோல், கிராமப்புற, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் மதிப்பெண்ணுடன் கூடுதல் மதிப்பெண் வழங்க திருத்தங்களைச் செய்ய வேண்டும். இதன் மூலம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் போன்றவற்றில் இம்மாணவர்கள் அதிக இடங்களைப் பெற முடியும்.
= முதுநிலை மருத்துவக் கல்வியிலும், உயர் சிறப்பு மருத்துவக் கல்வியிலும் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கிட , இந்திய மருத்துவக் கழக விதிமுறைகளில் திருத்தங்களைக் கொண்டுவரவேண்டும்.
இவற்றை மத்திய அரசு செய்தால், மாணவர் சேர்க்கையில் மாபெரும் மாற்றம் ஏற்படும். ஏழை எளிய மாணவர்களுக்கும் அரசு மற்றும் அரசுசாரா மருத்துவக் கல்லூரிகளின் கதவுகள் திறக்கும்.
கல்வித்தரத்தையும், பாடத்திட்டத்தையும் மாநில அரசு மேம்படுத்த வேண்டும். வட்டாரந்தோறும் தங்கும் வசதியுடன் கூடிய இலவச பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும். அனைத்து அரசுப்பள்ளிகளிலும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சியை வழங்க வேண்டும்.
பயிற்சி முறைகளில் மாற்றம் கொண்டுவருதல், ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்குதல் வேண்டும். இவற்றை செய்வதின் மூலம் தமிழக மாணவர்கள், அகில இந்தியத் தொகுப்பு இடங்கள்,மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் சேர முடியும். வேலை வாய்ப்புகளுக்கான போட்டித் தேர்வுகளிலும் வெற்றிக் கொடி நாட்ட முடியும்.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை, ஓரிரு மதிப்பெண்கள் கட் ஆஃப்பில் குறைந்தால் கூட, அடுத்த ஒரு வாய்ப்பையே மறுத்துவிடுகிறது. இது பிளஸ் 2 தேர்வின் போது மாணவர்களுக்குக் கூடுதல் மன அழுத்தத்தை உருவாக்குகிறது. இம்முறை கை
விடப்படவேண்டும். மாநில அரசே மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் நுழைவுத் தேர்வை நடத்திட வேண்டும்.
மத்திய - மாநில அரசுகள், மருத்துவக் கல்லூரிகள் உட்பட, பல்வேறு படிப்புகளுக்கான ,உயர் கல்வி நிறுவனங்களை அதிக அளவில் உருவாக்கிட வேண்டும்.
இவற்றை எல்லாம் முன்னிறுத்திப் போராடாமல், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென முழங்குவது, தனியார் தொழிற்கல்வி நிறுவனங்களின் அநீதிக்கு துணைபோவதாகாதா?

No comments:

Post a Comment

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’ Tamaghna.Banerjee@timesofindia.com  09.01.2025 Kolkata : Three days after she was...