Monday, August 1, 2016

அதிமுகவில் இருந்து மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பா நீக்கம்


அதிமுகவில் இருந்து மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக சசிகலா புஷ்பா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்'' என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

2014-ல் எம்.பி. ஆன சசிகலா புஷ்பாவுக்கு 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பதவிக்காலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவையில் கண்ணீர் மல்க பேச்சு:

இதனிடையே, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அரசு தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மாநிலங்களவை இன்று கூடியதும், அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா, "நான் தமிழ்நாட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாத அளவுக்கு எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. என் பதவியை ராஜினாமா செய்யுமாறு நான் நிர்பந்திக்கப்பட்டேன். ஆனால், எனது பதவியை நான் ராஜினாமா செய்யப்போவதில்லை" என்றார்.

ஆனால், தொடர்ந்து அவர் பேச முடியாத அளவுக்கு அவையில் அமளி நீடித்ததால், அவரால் மேலும் பேச முடியாமல் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்.

சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் பேசிக் கொண்டிருந்த வேளையிலேயே அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

பின்னணி:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்போது திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் வார விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு, மீண்டும் டெல்லி செல்வது வழக்கம். அதன்படி கடந்த சனிக்கிழமை என்பதால் திமுக எம்பி திருச்சி சிவாவும், அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவும் சொந்த ஊர் திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்தனர்.

அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாய்தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆவேசமடைந்த சசிகால புஷ்பா, திருச்சி சிவாவின் கன்னத்தில் அறைந்ததாகவும் சொல்லப்பட்டது.

இது தொடர்பாக திருச்சி சிவா, விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஊடகங்களில் எல்லாம் எனக்கும் அவருக்கும் கைகலப்பு என்று செய்தி வருகின்றன. இருவரும் தாக்கிக் கொண்டால்தான் கைகலப்பு. நான் சசிகலா புஷ்பாவை அடிக்கவே இல்லை. அவர் மட்டும்தான் என்னை அடித்தார். அவர் பெண் என்பதால் நான் எதுவும் செய்யவில்லை.

‘நானும் எம்.பி., திருச்சி சிவாவும் எம்.பி., அப்படி இருக்கும்போது அவருக்கு மட்டும் ஏன் கூடுதல் மரியாதை கொடுக்கிறீர்கள்’ என்று அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் சசிகலா புஷ்பா வாக்குவாதம் செய்தார். அவரது செயல் எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசையும், முதல்வரையும் நான் விமர்சித்ததாக சசிகலா புஷ்பா கூறியுள்ளார். பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் தமிழக அரசு பற்றி குறை கூற வேண்டிய அவசியம் ஏதுமில்லை.

அப்படியே விமர்சனம் செய்திருந்தாலும், பொது இடத்தில் அடிப்பதுதான் மரபா? அரசியல் ரீதியாக விமர்சனங்களை செய்தால் பொது இடத்தில் அடிப்பது என்ற புதிய மரபை அவர் தொடங்கி வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடருவதா அல்லது வேறு நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதியுடன் ஆலோசித்து முடிவெடுப்பேன் என்றார்.

ஜெயலலிதாவிடம் சசிகலா புஷ்பா விளக்கம்

இது தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு சசிகலா புஷ்பா நேற்று அழைக்கப்பட்டிருந்தார். அதன்படி, நேற்று பிற்பகல் போயஸ் தோட்டத்துக்கு சென்ற சசிகலா புஷ்பா, நடந்த சம்பவம் தொடர்பாக கட்சித் தலைமையிடம் விளக்கக் கடிதம் அளித்துவிட்டு சென்றார்.

சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு முன்பு அதிமுக மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார். அதன்பிறகு திருச்சி சிவா எம்.பி.யுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படம் வெளியானது. அது மார்பிங் செய்யப்பட்ட படம் என கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆண் நண்பருடன் சசிகலா புஷ்பா பேசுவது போன்ற ஆடியோ வெளியானது. தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவதால் சசிகலா புஷ்பா மீது கட்சித் தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024