Tuesday, September 5, 2017

நாளைக்குள் முடிவு; இல்லையேல், 'ஸ்டிரைக்'

பதிவு செய்த நாள்05செப்
2017
00:03

'நாளைக்குள் அரசிடமிருந்து சாதகமான பதில் வராவிட்டால், வரும், ௭ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்' என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' அறிவித்துள்ளது.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து, எட்டாவது ஊதிய மாற்றத்தை, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ, பல கட்ட போராட்டங்களை அறிவித்தது. ஜூலை, 18ல், மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆக., 5ல், சென்னையில், கோட்டையை நோக்கி பேரணி, 22ல், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக, வரும், 7ம் தேதி முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில், ஈடுபடப் போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில், நேற்று பகல், 12:30 மணிக்கு, சென்னை, தலைமை செயலகத்தில், ஜாக்டோ - ஜியோ அமைப்புடன், அரசு தரப்பில், பேச்சு நடத்தப்பட்டது. இதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், உதயகுமார், நிதித்துறை செயலர் சண்முகம் பங்கேற்றனர். ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், இளங்கோ தலைமையில், கூட்டமைப்பு நிர்வாகிகள், 35 பேர் பங்கேற்றனர். மாலை, 3:30 மணிக்கு, பேச்சு நிறைவடைந்தது. பேச்சு விபரத்தை, முதல்வரிடம் தெரிவிக்க உள்ளதாக, அமைச்சர்கள் கூறினர். ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளோ, 'நாளைக்குள் சாதகமான முடிவு வராவிட்டால், வரும், 7ம் தேதி முதல், திட்டமிட்டபடி காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கும்' என, அறிவித்துள்ளனர்.

போராட்டத்தை கைவிட முதல்வர் வேண்டுகோள்

முதல்வர் பழனிசாமி, நேற்று விடுத்த அறிக்கை: ஜாக்டோ - ஜியோ பிரதிநிதிகளோடு, அமைச்சர்கள் குழு பேச்சு நடத்தியது. பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கை, நவம்பர், இறுதிக்குள் கிடைக்கும். அதன்படி, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். ஊதிய விகிதத்தை திருத்தி அமைத்தல், இடைக்கால நிவாரணம் வழங்குதல், முறையான காலமுறை ஊதியம் வழங்குதல் போன்ற கோரிக்கைகளை, இதற்கென அமைக்கப்பட்ட, ஊதியக்குழு பரிசீலித்து வருகிறது. அந்தக் குழு, இம்மாத இறுதிக்குள் அறிக்கையை சமர்பிக்கும். அதன் மீது, அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அவசியம் ஏற்பட்டால், இடைக்கால நிவாரணம் குறித்த அறிவிப்பு, உரிய நேரத்தில் வெளியிடப்படும். பொதுமக்கள் நலன் கருதி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு, காலவரையற்ற போராட்டத்தை கைவிட்டு, தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

‘High oxytocin doses one of the reasons for mom death’

‘High oxytocin doses one of the reasons for mom death’  Three Still In Critical Condition  Sarthak Ganguly & Sujoy Khanra  TNN  15.01.20...