Saturday, September 16, 2017

வெளியூர் செல்லும் முன் ரேஷன் பொருட்களை விட்டு கொடுக்க வாரீகளா! 'கார்டு' ரத்து ஆகாமல் தடுக்கும் செயலி அறிமுகம்!
பதிவு செய்த நாள்
செப் 15,2017 22:52




நீண்ட விடுமுறையில் வெளியூர் செல்ல விரும்புவோர், வழங்கல் துறை இணையதளத்துக்கு சென்று, 'தற்காலிகமாக ரேஷன் பொருட்கள் வேண்டாம்' என்று பதிவு செய்யும், புதிய திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால், நீண்ட நாட்களாக ரேஷன் பொருள் வாங்காததால், கார்டு ரத்தாவதை தவிர்க்கலாம்.
ரேஷன் பொருட்கள் வெளி மார்க்கெட்டில் முறைகேடாக, அதிக விலைக்கு விற்கப்படுவதையும், வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதையும் தடுக்க, 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய அம்சமாக, அனைவரும் தங்கள் ஆதார் மற்றும் மொபைல் போன் எண்களை, ரேஷன் கடைகளில் பதிவு செய்ய வேண்டியது, மிகவும் அவசியமாகும்.

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கினால், அதன் விலை, பொருட்களின் அளவு உள்ளிட்ட விபரங்களை, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிந்து கொள்ளலாம். தற்போது நடைமுறையில் வந்துள்ள இந்த திட்டத்தின் உதவியால், ஒருவரின் கார்டை முறைகேடாக கடை ஊழியரோ, வேறு எவரோ பயன்படுத்தி, பொருள் வாங்குவது முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது. மானியம் விரயமாவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.ஆனாலும், 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் குறித்த, போதுமான விழிப்புணர்வு இல்லாததால், இன்னும் பலர் தங்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் எண்களை, ரேஷன் கடைகளில் இணைக்காமல் உள்ளனர்.

இது குறித்து, மாவட்ட வழங்கல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 9 லட்சத்து 83 ஆயிரம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதை தவிர, முகவரி சான்றுக்காக மட்டும் பயன்படுத்தப்படும் ரேஷன்கார்டுகள், 4500 உள்ளன. ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி, 95 சதவீதம் முடிந்து விட்டது. இன்னும் இது குறித்து அறியாதவர்களே, மீதமுள்ள ஐந்து சதவீதம் பேர். ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாகவும், கடைகளில் அறிவிப்புகள் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.விரைவில், அனைவரும் இத்திட்டத்தில் இணைக்கப்படுவர். மாவட்டத்தில் இதுவரை, 6 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு, 'ஸ்மார்ட் கார்டு'கள் வழங்கப்பட்டு விட்டன. மீதமுள்ளவர்களுக்கான கார்டு, சென்னையில் அச்சிடப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் அச்சிட்டு வந்து விடும். அதன்பின் ரேஷன் பொருட்கள் வினியோகத்தில், எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை. ரேஷன் பொருள் தேவைப்படும் ஏழைகளுக்கு, பொருட்கள் கிடைப்பதில் தடை எதுவும் இருக்காது.

இணையமே துணை!
இந்த இணைய பயன் பாட்டின் மற்றொரு பயனாக, நீண்ட நாட்களாக ரேஷன் பொருள் வாங்க முடியாதவர்கள், அது குறித்து, வழங்கல் துறைக்கு தெரிவிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. www.tnepds.gov.in எனும் வழங்கல் துறையின் இணையதளத்தில், இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. விடுமுறையில் வெளியூர் செல்வோர், இதற்கான பல்வேறு தலைப்புகளில், 'உரிமை விட்டுக்கொடுத்தல்' (Give it up) என்ற தலைப்பை தேர்வு செய்து விட்டால் போதும்.

இதன் வாயிலாக, மீண்டும் திரும்பி வரும் வரை, ரேஷன் பொருட்களை முடக்கி வைக்கலாம். விடுமுறை முடிந்து திரும்பியவுடன், மீண்டும் அந்த தலைப்பை நீக்கி விட்டு, பொருட்கள் வாங்கலாம். விடுமுறை காலத்தில் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்காததால், ரேஷன் கார்டு ரத்து மற்றும் 'ஸ்டாப் சப்ளை' நடவடிக்கைகளை, இதன் வாயிலாக தடுக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

ஆனால், இந்த வழிமுறை குறித்து, யாருக்கும் தெரியாததாலோ என்னவோ, இதுவரை எவரும் விண்ணப்பித்ததாகத் தெரியவில்லை. இதற்கு, ஒரு முறை 'கிவ் இட் அப்' கொடுத்து விட்டால், மீண்டும் திரும்பப் பெற முடியுமா என்ற அச்சம், மக்களிடம் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பயத்தைப் போக்கி, இது ஒரு நல்ல திட்டம் என்று, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய பொறுப்பும், உணவு வழங்கல் துறைக்கு உள்ளது.

யார் மீது தவறு?

கோவை மாவட்டத்தில், 'ஸ்மார்ட் கார்டு' வினியோகிக்கும் பணி தாமதமாகி வருவது, இது கிடைக்காத மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. எல்லா தகவல்களையும் சரியாகக் கொடுத்தும், தவறான புகைப்படம், பிழைகளுடன் பெயர் என 'ஸ்மார்ட் கார்டு'கள் தவறுதலாக வருகின்றன. இந்த தவறுகளை திருத்தம் செய்யவும், 'ஸ்மார்ட் கார்டு' வினியோகப் பணியை வேகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது, மாவட்ட நிர்வாகத்தின் கடமை.-நமது நிருபர்-

No comments:

Post a Comment

‘High oxytocin doses one of the reasons for mom death’

‘High oxytocin doses one of the reasons for mom death’  Three Still In Critical Condition  Sarthak Ganguly & Sujoy Khanra  TNN  15.01.20...