Thursday, September 7, 2017

'மருத்துவ துறையில் சிறந்து விளங்குது தமிழகம்'
பதிவு செய்த நாள்  07செப்
2017
00:03




சென்னை: ''மருத்துவத் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது; ஆனால், மருத்துவ ஆராய்ச்சியில் பின்தங்கி உள்ளது,'' என, தமிழ்நாடு, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின், 29வது பட்டமளிப்பு விழாவில், மத்திய சுகாதாரத் துறை செயலர், சவுமியா சுவாமிநாதன் பேசினார்.

நிதியுதவி : தமிழ்நாடு, டாக்டர்எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், 29வது பட்டமளிப்பு விழா, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவ் தலைமை வகித்து, மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

இதில், மத்திய சுகாதாரத் துறை செயலர்,சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது: தமிழகம் மருத்துவத் துறையில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தின் வளர்ச்சியை, மற்ற மாநிலங்களும் உற்று நோக்குகின்றன. இருப்பினும், மருத்துவ ஆராய்ச்சியில், தமிழகம்மிகவும் பின்தங்கி உள்ளது; நாடு முழுவதும் இதே நிலையே உள்ளது. தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், மனிதவளம், தரவுகள் அனைத்தும் இருந்தும், ஆய்வில் கவனம் செலுத்த தயங்குகிறோம்.

நம்மை விட சிறிய நாடான இலங்கை, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தரத்திலும் முன்னோடியாக திகழ்கிறது. சர்வதேச அளவில், தீர்வுகளை கண்டறியும் வகையில், நாம், ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மூன்று முதல், ஆறு மாதங்கள் வரையிலான குறுகிய ஆய்வுகளுக்கு, நிதியுதவி அளிக்கிறது. இதை, தமிழக மாணவர்கள், சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எதிர்பார்ப்பு : முதுநிலை மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளை படிப்போர், ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வசதியாக, நாடு முழுவதும் இருந்து, 20 மருத்துவ கல்லுாரிகள், சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட உள்ளன. இதில், தமிழகத்தில்இருந்து, இரண்டுகல்லுாரிகளாவது இடம்பெறும் என, எதிர்பார்க்கப் படுகிறது.ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், மருத்துவ கல்லுாரிகள் மற்றும் செவிலியர் கல்லுாரிகளில், ஆராய்ச்சிக்காக தனி துணை முதல்வர்களைநியமிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024