வாய்க்கு வந்தபடி பேசும் மந்திரிகளால் முதல்வர், 'அப்செட்': ஜெ., மரணத்தை பகிரங்கமாக விமர்சிப்பதால் அதிர்ச்சி
ஜெ., மரணம் தொடர்பாக, அமைச்சர்கள், வாய்க்கு வந்தபடி பேசுவதால், முதல்வர் பழனிசாமி, 'அப்செட்' ஆகி உள்ளார். 'இந்த விவகாரத்தில், அனைவரும் ரகசியம் காக்க வேண்டும்' என, அமைச்சர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், 2016 செப்., 22ல், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, ஜெ., அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவரை, மக்கள் பார்க்கவில்லை. சிகிச்சைப் பலனின்றி, டிச., 5ல் இறந்தார்.
மருத்துவமனையில் ஜெ., இருந்தபோது, 'அவரை பார்த்தோம்; நலமாக உள்ளார்; விரைவில் வீடு திரும்புவார்.இட்லி சாப்பிட்டார்; அதிகாரிகளுடன் ஆலோசித்தார்' என, தினமும் ஒரு செய்தியை, மருத்துவமனை வாசலில், அ.தி.மு.க.,வைசேர்ந்ததலைவர்களும், அமைச்சர்களும் தெரிவித்தனர்.
மாறுபட்ட கருத்து
அதே தலைவர்களும், அமைச்சர்களும், இப்போது மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர்.ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் கூறும் கருத்து, அரசுக்கு சிக்கலை யும், பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில், அமைச்சர் சீனிவாசன் பேசுகையில், 'மருத்துவமனையில், ஜெ., அனுமதிக்கப்பட்ட பின், அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் கூறியதைநம்பி, ஜெ., இட்லி சாப்பிட்டார்; சட்னி சாப்பிட்டார் என, பொய் கூறினோம். அதற்காக, மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' என்றார்.
பயம்
அதேபோல, அமைச்சர் வீரமணி, நேற்று வேலுார் மாவட்டம், சோளிங்கரில் நடந்த பொது கூட்டத்தில் பேசுகையில், ''ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, யாரும் அவரை பார்க்கவில்லை. அவர் குணமாகி வந்ததும், சசிகலா குடும்பத்தினர், ஏதேனும், 'போட்டு' கொடுத்து விடுவர் என பயந்து, அவர்கள் கூறிய பொய்யை வெளியில் தெரிவித்தோம்,'' என்றார்.
சென்னையில், அமைச்சர் ராஜு கூறுகையில், ''மருத்துவமனையில், ஜெ.,யை அனைத்து அமைச்சர்களும் பார்த்தோம். தாயை இழந்த துக்கத்தில் இருக்கிறோம் என்பதால், அவர் இறப்பு குறித்து, விமர்சிக்க தயாரில்லை,'' என்றார்.
விசாரணை கமிஷன்
அமைச்சர் நிலோபர் கபில்,டில்லியில், நேற்று அளித்த பேட்டியில், ''ஜெ., மருத்துவமனையில் இருந்த போது, அமைச்சர்கள் குழுவாக சென்று பார்த்தோம். அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து, வார்டுக்கு மாற்றும் போது, ஜெ.,யை பார்த்தேன், 'என்றார்.இதற்கிடையில், சென்னையில், அமைச்சர் உதயகுமார் கூறுகையில், ''விசாரணை கமிஷன்அமைக்கப்பட்டு, நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். எனவே, எவ்வித கருத்தும் கூறக்கூடாது. எதுவும் கூற வேண்டியதிருந்தால், விசாரணை கமிஷனிடம் தெரிவிப்போம். அமைச்சர்கள் கூறுவது, அவர்களின் தனிப்பட்ட கருத்து,'' என்றார்.
முற்றுப்புள்ளி
இவ்வாறு அமைச்சர்கள், ஆளாளுக்கு ஒரு கருத்து தெரிவிப்பது, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், அமைச்சர்கள் இடையே உள்ள மோதலையும் வெளிப்படுத்தி வருகிறது. ஜெ.,மரணத்தில் உள்ள விஷயங்களை, அமைச்சர்களே மறைக்க முயல்வதும் தெளிவாகி உள்ளது. இது, முதல்வர் பழனிசாமிக்கு, தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, 'விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதால், அமைச்சர்கள் யாரும், ஜெ., மரணம் குறித்து, இனி பேச வேண்டாம்; ரகசியம் காக்க வேண்டும்' என, முதல்வர் உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment