போராட்டங்களும், நீதிமன்றங்களும்... ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் என்ன சொல்கிறார்?
இரா.தமிழ்க்கனல்
பணமுடக்கம், ஜிஎஸ்டிக்கு அடுத்து நீட் தேர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமாக நடந்துவருகின்றன. ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் இணைந்த போராட்டமும் இதில் அடக்கம். இந்தப் போராட்டங்களுக்கு எதிராக நீதிமன்றம்வரை சிலர் போக, சில நீதிபதிகளின் அதிரடித் தீர்ப்புகளும்வெளியாகின.
அரசமைப்புச் சட்டத்தின்படி நீதிமன்றங்கள் வழங்கும் உத்தரவுகள், தீர்ப்புகளைத் தவிர, நீதிபதிகள் சிலர் வாய்மொழியாகத் தெரிவிக்கும் கருத்துகள் விவாதத்துக்கு உள்ளாகியுள்ளன. நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்துக்குத் தடைவிதிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றம், சட்டம் ஒழுங்கு பாதிக்காதபடி நடத்தலாம் என்று கூறியது. அதையடுத்து, அரசு ஊழியர் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், அதிக ஊதியம் வாங்கும் அரசு ஊழியர்கள் போராடக்கூடாது என்றெல்லாம் குறிப்பிட, அது சர்ச்சையாகி உள்ளது.
அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான போராடும் உரிமையை கூடாது என நீதிபதி கூறுவதற்கு சட்ட முகாந்திரம் உள்ளதா என்பது எழுத்தாளர்கள், கலைஞர்கள், உரிமை ஆர்வலர்கள் என பல தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது குறித்து உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கேட்டோம். சட்டரீதியான விசயங்களை நம்மிடம் அவர் விவரித்தார்.
“ஜி.எஸ்.மணி என்ற வழக்குரைஞர், நீட் தேர்வை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் நடத்தக்கூடாது என்று ஒரு பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் போட்டார். இந்தப் போராட்டங்கள் சில அரசியல் கட்சிகளின் ஆதாயங்களுக்காக நடத்தப்படுவதாகக் கூறினார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், கடந்த 8ஆம் தேதி ஓர் உத்தரவு பிறப்பித்தது.
முதலில், நீட் தேர்வை எதிர்த்த போராட்டம் வேண்டாம் என்று கூறும் திரு. ஜி.எஸ். மணியின் கோரிக்கையில், அரசியல் ஆதாயம் இல்லையா? மத்திய அரசும் மாநில அரசும் கோருவது அதைத் தானே?
உச்ச நீதிமன்றம், மேற்சொன்ன இடைக்கால உத்தரவில், அமைதியான முறையில் போராடும் உரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டம் வழங்கி இருப்பதால், வன்முறையின்றி போராடலாம் என்று கூறியது. ஆனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாதபடி நீட் தேர்வை எதிர்த்த போராட்டங்கள் நடத்தலாம் என்றும் சட்டம் ஒழுங்கு பாதிக்கையில் அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19, இந்திய மக்களுக்கு சில அடிப்படை உரிமைகளை வழங்குகிறது. குறிப்பாக, பிரிவு 19(1) (ஏ), கருத்துசுதந்திரத்தை வழங்குகிறது. 19(1)(பி), ஆயுதமின்றி அமைதியாகக் கூடுவதற்கான உரிமையை வழங்குகிறது. அதாவது, பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், கண்டனக் கூட்டங்கள், தர்ணாக்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று மக்கள் கூடி கருத்துகளை அமைதியான வழியில் தெரிவிக்கும் உரிமையை, அரசமைப்புச் சட்டம் அடிப்படை உரிமையாக வழங்குகிறது.
ஆனால், அரசமைப்புச் சட்டம் பிரிவு 19(2) கருத்துரிமைக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அத்தகைய கட்டுப்பாடுகளில், அரசமைப்புச் சட்டம் குறிப்பிடுவது என்னவென்றால், பொது ஒழுங்கை (public order) குலைக்கும்வகையில், கருத்துச்சுதந்திரத்தைப் பயன்படுத்தக்கூடாது என்பதுதான்.
அரசமைப்புச் சட்டம், சட்டம் ஒழுங்கை (law and order) பாதிக்கும்நிலை இருந்தால், கருத்துரிமையைப் பயன்படுத்தக்கூடாது என்று ஏதும் கூறவில்லை. அதற்கு மாறாக பொது ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்காமல் கருத்துச்சுதந்திரம் இருக்கவேண்டும் என்கிறது.
சட்டம் ஒழுங்கு என்பது வேறு, பொது ஒழுங்கு என்பது வேறு. சட்ட ஒழுங்குப் பிரச்னை என்பது மிகச் சாதாரணமானது. அதைக் கூறி, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையைப் பறிக்க முடியாது. ஆனால் பொது ஒழுங்குக்கு பாதிப்பை உண்டாக்கும்வகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்த அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை.
பொது ஒழுங்குக்குக் குந்தகம் என்பதை விளங்கிக்கொள்ள, மூன்று உதாரணங்களைப் பார்க்கலாம்.
அரியானாவில் குர்மீத் ராம் ரகிம்சிங் சாமியார் வழக்கில் தீர்ப்பு சொல்வதற்கு நீதிபதி தனி ஹெலிகாப்டரில் செல்லும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமாக இருந்தது. பொதுச்சொத்துக்கு மிகுந்த சேதம் ஏற்படுத்தப்பட்டது. 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. அதாவது பொது ஒழுங்கு (public order) பாதிக்கப்பட்டது. இம்மாதிரி பொது ஒழுங்கு பாதிக்கப்படும்போது, ஒருவர், அரசமைப்புச்சட்டம் கருத்துரிமையை அடிப்படை உரிமையாக வழங்குகிறது என்றும் மேற்சொன்னபடியான பொது ஒழுங்கை பாதிக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வேன் என்றும் கூறமுடியாது. பொது ஒழுங்கை பாதிக்கும் அந்த மாதிரியான கூட்டங்களை, போராட்டங்களைத் தடுக்க அரியானா அரசும் முன்வரவில்லை. எவரும் உயர் நீதிமன்றத்தையோ உச்ச நீதிமன்றத்தையோ அணுகி, இப்படிப்பட்ட பொது ஒழுங்கை பாதிக்கும் கூட்டத்தைத் தடுக்கவேண்டும் என்று கோரவும் இல்லை.
இரண்டாவதாக, முன்னர் கன்னையாகுமார் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நேரில் விசாரிக்கச் சென்ற மூத்த வழக்கறிஞர்களையும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களையும் பேராசிரியர்களையும் உச்ச நீதிமன்றத்திலிருந்து 500 அடி தொலைவே உள்ள பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் இந்துத்துவாவாதிகள் தாக்கியபோது, உச்ச நீதிமன்றமோ டெல்லி உயர் நீதிமன்றமோ ஏதும் செய்யவில்லை. நீதிமன்றத்திலேயே தாக்குதல் நடத்துவது பொது ஒழுங்குக்குக் குந்தகம் இல்லையா?
மூன்றாவதாக, 2002-ல் குஜராத்தில் அப்பாவி இந்துக்கள் கோத்ரா ரயிலில் தீவைத்து எரிக்கப்பட்ட பின், அவர்களின் சடலங்களை ஊர்வலமாக எடுத்துச்சென்றதை அடுத்து, சுமார் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். பொதுச்சொத்துக்களுக்கு இழப்பும் உயிரிழப்பும் ஏற்பட்டது. இது, பொது ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்திய நிகழ்வு. எனவே, கருத்துரிமை எனும் பெயரால் அப்படி ஒரு பிண ஊர்வலத்தை நடத்தமுடியாது.
ஆனால் அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கைப் பற்றி கீழ்வரும் உச்ச நீதிமன்ற வழக்கு தெளிவாக்கும்.
இந்து பத்திரிகைக் குழுமமானது, ‘ஒரே ஒரு கிராமத்திலே’ எனும் தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்தது. அத்திரைப்படம், அரசமைப்புச் சட்டம் வழங்கும் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுகிறது; இது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் என்று காரணம் கூறி, சென்னை உயர் நீதிமன்றம் இத்திரைப்படத்தைத் திரையிடுவதற்கான அனுமதிச் சான்றை ரத்துசெய்து தீர்ப்பளித்தது. இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.
இம்மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. அதில், அரசமைப்புச் சட்டம் இந்திய மக்கள் அனைவருக்கும் கருத்துச்சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக வழங்கியுள்ளது என்றும் அந்த அடிப்படை உரிமையை எந்த அரசும் சட்டம் ஒழுங்கு எனக் காரணம்கூறி பறிக்கமுடியாது என்றும் அப்படிப் பறிக்கமுயன்றால் உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் அரசின் அச்செயலை ரத்துசெய்வதுடன் அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையைத் தூக்கிப்பிடிக்கவேண்டும் என்றும் கூறியது.
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக, நீட் எதிர்ப்புப் போராட்டம் அமைதியாக, வன்முறையின்றி, அறவழியில், காந்திய வழியில் நடைபெறுகிறது. மேற்சொன்ன உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின், தமிழக அரசு அமைதிவழியில் போராடுபவர்களை வழக்குப்போட்டு கைதுசெய்யப் பயன்படுத்திக்கொள்கிறது. தமிழக அரசின் செயல், உச்ச நீதிமன்றம் ‘ஒரே ஒரு கிராமத்திலே’ வழக்கில் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புக்கு விரோதமானது.
ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 01-01-2016 முதல் ஊதியத்தைத் திருத்தி கூடுதல் ஊதியம் அளித்த்தைப் போல, பறிக்கப்பட்ட ஓய்வூதிய உரிமையைத் திருப்பி அளிக்கவேண்டும் என்றும் அமைதியான வழியில் வன்முறையின்றிப் போராடுகின்றனர்.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 19(1) (சி), சங்கம் வைக்கும் உரிமையை அடிப்படை உரிமையாக வழங்குகிறது. சங்கம் வைக்க அடிப்படை உரிமையை அளித்துவிட்டு, அமைதியாகக்கூடப் போராடக்கூடாது என்றால் அது பெரிய மோசடித்தனம், அல்லவா?
போராட்டம் தொடர்பாக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது வேறு. ஒழுங்கு நடவடிக்கை எடுத்து என்ன தண்டனை வேண்டுமானாலும் அளிக்கலாம். தண்டனையை எதிர்த்து ஊழியர்கள் உயர் நீதிமன்றத்துக்குத்தான் வரவேண்டும். எனவே போராட்டத்தைப் பற்றி உயர் நீதிமன்றம் நடுநிலைமை வகிக்கவேண்டும்; போராட்டம் பற்றி கருத்து ஏதும் சொல்வது சரியாகாது.
போராட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் கருத்துக் கூறினால், ஊழியர்களுக்கு நீதிமன்றத்தின் மீது எப்படி நம்பிக்கை உண்டாகும்? ஆனால் ஒரு விசயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். போராட்டத்தில் வன்முறை ஏதும் இருக்கக்கூடாது.
ஒரு முறை, பாரத் பெட்ரோலியம் நிறுவன வேலைநிறுத்தம் நடந்தபோது, நீதிபதி சந்துருவிடம், போராட்டம் சட்டவிரோதம் என அறிவிக்குமாறு வழக்கு வந்தது. அதற்கு உனக்குத் துணையாக வராது என அவர் தீர்ப்பு கூறிவிட்டார். என்னிடம் நெய்வேலி என்.எல்.சி. போராட்டத்தின்போது இப்படியொரு மனு வந்தபோது, போராடும் தொழிற்சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, பதில் கேட்டு உத்தரவிட்டு, இரண்டு வாரத்துக்கு விசாரணையைத் தள்ளிவைத்தேன். ஆனால் அதிகாரிகள் தரப்பில், பெஞ்சுக்குச் சென்று போராட்டத்துக்குத் தடை வாங்கிவிட்டார்கள். அந்த உத்தரவை 10 ஆயிரம் தொழிலாளர்களும் எதிர்த்தார்கள். அவர்கள் அத்தனை பேரையும் அழைத்து அவமதிப்பு வழக்கா போடமுடியும்? எனவே, அரசமைப்புச் சட்டத்தின்படி பொது ஒழுங்கு கெடாதபடி நீதிமன்றங்கள் அக்கறை செலுத்துவது பொருத்தம்” என்று மீண்டும் மீண்டும் அழுத்தமாகச் சொன்னார், நீதிபதி ஹரிபரந்தாமன்.
அவருடைய வார்த்தைகள் அரசமைப்புச் சட்டத்தின் மீதான அக்கறையையும் மரியாதையும் வெளிப்படுத்துகின்றன.
No comments:
Post a Comment