வேலூர் சி.எம்.சி பற்றி தெரியாத 6 விஷயங்கள்!
'மருத்துவர் ஆவதற்கு நீட் மட்டும் தகுதி அல்ல; சேவை மனப்பான்மையும் வேண்டும்' எனக் கூறி மருத்துவ மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்த, வேலூர் சி.எம்.சி மருத்துவமனையின் செயல்பாட்டை சமூக ஆர்வலர்கள் வரவேற்கின்றனர். " இன்று நேற்றல்ல, 100 ஆண்டுகாலமாக மருத்துவப் படிப்பில் தனக்கான சுய அடையாளத்தோடு செயல்படுகிறது வேலூர் சி.எம்.சி" என்கின்றனர் மருத்துவர்கள்.
ஐடா ஸோபியா ஸ்கடர் என்ற அமெரிக்கப் பெண்மணியால் 1900-ம் ஆண்டில் நர்சிங் பள்ளியாகத் தொடங்கப்பட்டது வேலூர் கிறிஸ்துவக் கல்லூரி. 'தன்னைப் போலவே நிறைய பெண்களை மருத்துவப் பணிக்குக் கொண்டு வரவேண்டும்' என்ற நோக்கில் அவர் உருவாக்கியதுதான் இந்தப் பள்ளி. 1918-ம் ஆண்டில் இங்கு எல்.எம்.பி (லைசன்ஸ்டு மெடிக்கல் பிராக்டிஷனர்) என்ற மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டது. 1942-ல் எம்.பி.பி.எஸ் படிப்பை அளித்து வந்தனர். தற்போது எம்.பி.பி.எஸ், நர்சிங் உள்பட 179 வகையான படிப்புகள் இங்கே கற்றுக் கொடுக்கப்படுகின்றன. நீட் தேர்வுக்காக மாணவ சமூகமே கொந்தளித்துக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிராகக் குரல் கொடுத்தது வேலூர் சி.எம்.சி மட்டும்தான்.
இந்தியாவின் டாப் ரேங்கிங் கல்வி நிறுவனங்களில் ஒன்றான, வேலூர் சி.எம்.சி பற்றி வெளியில் தெரியாத சில விஷயங்களைப் பார்ப்போம்.
1. பெண்களுக்காக செயல்பட்ட முதல் மருத்துவக் கல்வி நிறுவனம் என்னும் பெருமையை தன்னகத்தே கொண்டது வேலூர் சி.எம்.சி. தொடக்க காலங்களில் 100 சதவிகித மருத்துவக் கல்வி இடத்தையும் பெண்களுக்கே வழங்கியது சி.எம்.சி. இதற்குக் காரணம், அந்தக் காலகட்டங்களில் ஆண்கள் பிரசவம் பார்ப்பதை சமூகம் அனுமதிக்கவில்லை. இதனால் ஏராளமான பிரசவ மரணங்கள் நிகழ்வதைக் கண்டு வெதும்பி, வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு வேலூர் திரும்பினார் ஐடா. பிரசவ மரணங்களைத் தடுக்க, அதிகளவிலான பெண்கள் மருத்துவர்கள் ஆக வேண்டு ம் என்ற நோக்கத்திலேயே 100 சதவிகித இடங்கள் அவர்களுக்கே ஒதுக்கப்பட்டது.
2. 100 ஆண்டு பாரம்பர்யம் கொண்ட இக்கல்வி நிறுவனத்தில் 1918-47 வரை பெண்களை மட்டுமே மருத்துவ மாணவர்களாக சேர்த்துக்கொண்டிருந்துள்ளனர். 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சதி என்னும் உடன்கட்டை ஏறுதல், அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்பன போன்ற மூட நம்பிக்கைகள் உலவிய காலத்தில், ஏராளமான பெண் மருத்துவர்களை உருவாக்கிக் காட்டியது வேலூர் சி.எம்.சி.
3. இந்திய சுதந்திரத்துக்குப் பின்னரே இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றப்பட்ட போதும், பெண்களுக்கு 50 சதவிகித இடங்களை ஒதுக்கியது இக்கல்லூரி. இன்றளவும் மாணவிகளே இங்கு அதிகம் படிக்கின்றனர்.
4. ’நீட்’ நுழைவுத்தேர்வு முறையை பலவித ஏற்றத்தாழ்வுகளுடன் இன்று அறிமுகப்படுத்திக் கொண்டாலும் இந்தியாவிலேயே முதன்முறையாக 1970-ம் ஆண்டிலேயே அனைவருக்கும் பொதுவான நுழைவுத்தேர்வு முறையையும் நேர்முகத் தேர்வு முறையையும் அறிமுகப்படுத்தியது வேலூர் சி.எம்.சி. இதன் நுழைவுத்தேர்வு வழிமுறைகளைத்தான் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகமும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் கடைபிடித்துவருகின்றன.
5. மருத்துவ மாணவர் சேர்க்கையின்போது, இரண்டரை நாள்கள் சில அடிப்படைத் தேர்வுகளை நடத்துகிறது வேலூர் சி.எம்.சி. மாணவர்களின் தனித்தன்மையை பரிசோதிக்கும் வகையிலும் மருத்துவ சேவைக்கு அவர்கள் தகுதியானவர்கள்தானா என்பதை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்தத் தேர்வு முறை அமைந்திருக்கிறது. இதில் மாணவர்களின் பதிவு எண்ணுக்குப் பதிலாக டம்மி எண்கள் கொடுக்கப்படுகின்றன. எந்த மாணவர் எவ்வளவு மதிப்பெண் எடுத்தார் என்பது யாருக்கும் தெரியாத அளவுக்கு ரகசியம் காக்கப்படுகிறது. உலகின் சிறந்த தேர்வு முறையாக வேலூர் சி.எம்.சி-யின் அணுமுகுறையைச் சொல்கின்றனர். முதன்முதலில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டபோது அதைக் கடுமையாக எதிர்த்த வேலூர் சி.எம்.சிக்கு கடந்த ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களும் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்துவிட்ட நிலையில், வேலூர் கிறிஸ்தவக் கல்லூரி மட்டும் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வரும் வரையில் சேர்க்கையை நிறுத்தி வைக்கும் துணிச்சலான முடிவை அறிவித்துள்ளது.
6. இந்தியாவில் 20 மருத்துவமனைகளை நிர்மானித்து, அந்த மருத்துவமனைகளுக்கான சிறந்த மருத்துவர்களை உருவாக்கி அனுப்பி வைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆண்டுக்கு வெறும் 3,000 ரூபாய் கல்விக் கட்டணம் கொண்ட இந்நிறுவனத்தில் படிக்கத் தேர்வு செய்யப்படும் ஒருவர், 3 ஆண்டுகள் கிராமப்புற சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குகின்றனர். இதுபோன்ற ஒப்பந்த முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பெருமை வேலூர் சி.எம்.சியையே சாரும்.
“அடித்தட்டு மக்களுக்கான மருத்துவர்களை உருவாக்குவதே ஒரே பணி” என்ற கொள்கையுடன் இதுவரையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 100 ஆண்டுகள் பாரம்பர்யம் நிறைந்த இக்கல்வி நிறுவனத்தின் 100-ம் ஆண்டு விழா வருகிற 2018-ம் ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் மாணவர்கள் நிரம்பி வழிவார்களா என்ற கேள்விக்குறியோடு சி.எம்.சி மருத்துவக் கல்லூரி வளாகத்தை வலம் வருகின்றனர் மாணவர்கள்.
No comments:
Post a Comment