Saturday, September 16, 2017

துணை மருத்துவப் படிப்புகளுக்கு செப்.19 முதல் கலந்தாய்வு: தகுதிப் பட்டியல் வெளியீடு


By DIN  |   Published on : 16th September 2017 03:59 AM  | 
தமிழகத்தில் துணை மருத்துவப் படிப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் (செப்.19) கலந்தாய்வு நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தகுதிப் பட்டியல் வெள்ளிக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிஓடி (இயன்முறை மருத்துவம்), பி.எஸ்சி. கார்டியோ பல்மோனரி பர்ஃபியூஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியா மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரேடியோ தெரபி டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆப்தோமெட்ரி, இளநிலை ஆக்குபேஷனல் தெரபி, பிஏஎஸ்எல்பி (செவித்திறன், பேச்சு, மொழி நோய்க்குறியியல் படிப்பு) ஆகிய 9 துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 7}ஆம் தேதி முதல் 23}ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்தப் படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் 484 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 5,479 இடங்களும் உள்ளன. மொத்தம் 26,460 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 25,293 பேருக்கான தகுதிப் பட்டியல் www.tnhealth.org, www.tnmedicalselcetion.org ஆகிய இணையதங்களில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
தகுதிப் பட்டியலின் அடிப்படையில் முதற்கட்ட கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் செப்டம்பர் 19}ஆம் நாள் தொடங்குகிறது. முதல்நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கான கலந்தாய்வு நடைபெறும். பொதுப்பிரிவு கலந்தாய்வு 20}ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. தொடர்ந்து செப்டம்பர் 21 முதல் 23, 25 முதல் 27, அக்டோபர் 4 முதல் 7 என மொத்தம் 12 நாள்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது என்று மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 10.01.2025