Saturday, September 16, 2017

பெற்றோரைப் பராமரிக்காத அரசு ஊழியர்களுக்கு முழு ஊதியம் கிடையாது


By DIN  |   Published on : 16th September 2017 02:17 AM  |    
oldage
Ads by Kiosked
வயதான பெற்றோர்களைப் பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்ய வகை செய்யும் மசோதா அஸ்ஸாம் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
நாட்டிலேயே முதன்முறையாக இதுபோன்றதொரு மசோதா கொண்டுவரப்பட்டது அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பரவலாக வரவேற்பு கிடைத்தாலும், எதிர்க்கட்சிகள் அதை விமர்சித்துள்ளன. இதனிடையே, இதுபோன்று எம்எல்ஏ, எம்.பி.க்களின் ஊதியத்தை பிடித்தம் செய்வது தொடர்பான புதிய மசோதாவும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அஸ்ஸாம் அரசு தெரிவித்துள்ளது.
சமூகத்தில் பொருளாதாரரீதியாக வசதியாக இருப்பவர்கள்கூட, தங்களது வயதான பெற்றோர்களையும், மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் சகோதர, சகோதரிகளையும் கவனிக்காமல் ஆதரவற்றோர் இல்லங்களில் விட்டுவிடும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இந்நிலையில், அத்தகைய நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான முதல் முயற்சியை அஸ்ஸாம் மாநில அரசு மேற்கொண்டிருக்கிறது. அதுவும், அந்த மாநில அரசு ஊழியர்களிடத்தில் இருந்து அதைத் தொடங்கியிருக்கிறது.
அதன்படி, புதிய சட்ட மசோதா ஒன்று அஸ்ஸாம் பேரவையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. அரசு ஊழியர்கள் தங்களது பெற்றோர்களையும், மாற்றுத்திறனாளிகளாக இருக்கும் உடன்பிறந்தவர்களையும் கைவிட்டுவிட்டால் அவர்களது ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்ய அதில் வகை செய்யப்பட்டுள்ளது. அந்தத் தொகையானது சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோருக்கும், உடன்பிறந்தவர்களுக்கும் வழங்கப்படும்.
மசோதாவை அறிமுகப்படுத்திய மாநில அமைச்சர் ஹேமந்த பிஸ்வா சர்மா இதுதொடர்பாக பேரவையில் பேசியதாவது:
இந்த சட்டத்தின் வாயிலாக அரசு ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல. மாறாக ஆதரவற்று இருக்கும் சில பெற்றோர்களுக்கு உரிய உதவிகள் கிடைப்பதை உறுதி செய்வதே நோக்கம்.இதேபோன்று எம்எல்ஏ, எம்.பி.க்கள், பொதுத் துறை ஊழியர்கள் ஆகியோரது ஊதியங்களைப் பிடித்தம் செய்வது தொடர்பான மசோதாவும் விரைவில் கொண்டுவரப்படும் என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து மாநில முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான தருண் கோகோய், பேசுகையில் "இத்தகைய மசோதாக்களைக் கொண்டுவந்து மாநிலத்தில் உள்ள மக்களை தவறாகச் சித்திரிக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபடுகிறது' என்றார். விவாதத்துக்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேறியது.

No comments:

Post a Comment

Singapore-bound flight turns back due to technical issues

Singapore-bound flight turns back due to technical issues Murali N. Krishnaswamy CHENNAI 11.01.2025 A scheduled Air India flight, AI346, on ...