Wednesday, September 27, 2017

எல்லாவற்றிலும் அரசியல்


By ஆர். வேல்முருகன்  |   Published on : 26th September 2017 01:16 AM  
தமிழகத்தில் எந்த நல்ல காரியம் நடைபெற்றாலும் அதற்கு அரசியல் சாயம் பூசாத, அரசியல்வாதியே இல்லை என்றாகிவிட்டது.
பிற மாநிலங்களில் நிலை இவ்வாறு இல்லை. அவர்களுக்குள் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் மாநில நலன் என்று வரும்போது அது உச்சநீதிமன்றமாக இருந்தாலும் கவலையில்லை, கூட்டாக எதிர்க்கின்றனர். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.
சுதந்திரத்துக்குப் பின்னர் வந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில்தான் அதிக அளவில் அணைகள் கட்டப்பட்டன. ஆனால் குறிப்பிட்ட ஆண்டுகளில் அண்டை மாநிலங்களுடனான நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தத்தைக்கூட திராவிடக் கட்சிகளால் புதுப்பிக்க முடியவில்லை என்பது வேதனை தரும் உண்மை. 
தமிழகத்தைப் பொருத்தவரையில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தன. மத்திய அரசிடம் அப்போது மிரட்டிக் கேட்டிருந்தால் தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களைப் பெற்றிருக்க முடியும். 
தேவையான அமைச்சகத்தைக் கேட்டு மிரட்டிய அரசியல் கட்சிகள் தேவையான மக்கள் நலத் திட்டங்களைக் கேட்டு மிரட்டாததன் காரணம் தெரியவில்லை.
காமராஜர் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட அணைகளைத் தான் இப்போதும் பெற்றிருக்கிறோம். அதன்பின் எத்தனை அணைகளைக் கட்டியிருக்கிறோம்? என்னென்ன மத்திய அரசின் திட்டங்களைப் புதிதாகக் கொண்டுவந்திருக்கிறோம்? நாட்டிலுள்ள பல்வேறு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வரையில் எத்தனை முறை பள்ளிப் பாடத் திட்டங்களில் மாற்றம் கொண்டு வந்திருக்கிறோம்? புதிதாகத் தொழில் தொடங்க எத்தனை பேருக்கு அனுமதி தந்திருக்கிறோம்? எத்தனை கோடி அந்நிய முதலீட்டை ஈர்த்திருக்கிறோம்? எத்தனை பேருக்கான வேலைவாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம் - இவையெல்லாம் விடை காண முடியாத கேள்விகள்?
பட்டுப் புழு கூட தான் வாழும் நாளில் பட்டுக் கூடு கட்டி வாழ்ந்து தன் பெயரைக் காலம் முழுவதும் நிலைத்து நிற்கச் செய்கிறது. வாழும் காலத்தில் தேனீ தேனைச் சேகரிக்கிறது. 
ஆனால் வாழும் காலத்தில் தன்னுடைய சொந்த மாநிலத்துக்கு நல்லது செய்யாவிட்டாலும் கெட்ட பெயரை உருவாக்காமல் இருந்திருக்கலாம் அரசியல்வாதிகளான அமைச்சர்கள்.
ஆட்சியைப் பிடிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு அரசியல்வாதிகள் வந்துவிட்டதன் வெளிப்பாடுதான் எம்.எல்.ஏ.க்கள் சொகுசு விடுதிகளில் தங்கி சுகங்களை அனுபவிப்பது. இவர்கள் சொந்தக் காசு செலவு செய்து அங்கு செல்வார்களா?
இப்போதைய நிலையில் தமிழகத்தின் தலையாய பிரச்னை தண்ணீர். இதற்காகத் தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்கலாம். இதற்கு முன்னுரிமை கொடுத்துத் திட்டங்களைத் தீட்டலாம். அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றலாம். சிறுவாணி மற்றும் பவானி அணை நீர், பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம், முல்லைப் பெரியாறு பாசனத் திட்டங்களில் கேரளத்துடனான கருத்து வேறுபாடுகளைக் களையப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்க்க முயற்சிக்கலாம். 
காவிரிப் பிரச்னை தொடர்பாக கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். இவற்றில் எல்லாம் உடனடியாக முடிவு எட்டப்படாது. ஆனால் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு அவர்கள் கேட்பதைக் கொடுத்து நமக்குத் தேவையானதைப் பெறலாம்.
கேரளத்துக்குத் தேவை மின்சாரமும் காய்கறிகளும். அவற்றைக் கூடுதலாகக் கொடுத்துத் தேவையான தண்ணீரைப் பெற முயற்சிக்கலாம். இதேபோல கர்நாடகம், ஆந்திரத்தின் தேவை என்ன என்பதைக் கேட்டறிந்து அதற்குத் தகுந்தாற்போல முயற்சிக்கலாம்.
மத்திய அரசில் பங்கேற்ற தமிழக அமைச்சர்கள் இதற்கான முயற்சிகளை மாநில நலன் கருதி மேற்கொண்டிருந்தால் ஒரு வேளை இந்தப் பிரச்னைகளே இல்லாமல் போயிருக்கலாம். 
ஆனால் யாருமே மாநில நலனைக் கருத்தில் கொள்ளவில்லை என்பது வேதனை தரும் உண்மை. அனைத்து அமைச்சர்களுமே தத்தமது கட்சி, தங்களது சொந்த நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்பட்டனர் என்பது கண்கூடு.
இதுவரை தமிழகத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த மிகப் பெரிய ஆளுமையான ஜெயலலிதா மறைந்துவிட்டார். பொதுவாழ்வில் பொன்விழா கண்ட கருணாநிதியால் தீவிர அரசியலில் ஈடுபட முடியவில்லை. 
ஜெயலலிதா மறைந்தபோது மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியதும், கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரிக்க அ.தி.மு.க.வின் தம்பிதுரை சென்றதும் தமிழகத்திலும் ஆரோக்கிய அரசியல் வளரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ஆனால் அந்த எதிர்பார்ப்புப் பொய்த்துவிட்டது.
எப்படியாவது தாங்கள் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துத்தான் அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள். அவ்வாறு செயல்படும் அரசியல்வாதிகளின் பெயர் வரலாற்றில் என்றும் நன்றாக நிலைத்து நிற்பதில்லை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
கேரள மீனவர்களை இத்தாலியக் கப்பலில் வந்தவர்கள் சுட்டுக் கொன்றபோது அம்மாநிலமே கொதித்தது. இத்தாலியர்கள் கைது செய்யப்பட்டனர். இதில் அங்குள்ள அரசியல் கட்சியினர் பாரபட்சமின்றித் தங்கள் மீனவர்களுக்கு ஆதரவாக நின்றனர்.
அரசியல்வாதிகளே நீங்கள் அரசியலில் ஈடுபடுங்கள். ஆனால் மாநில நலன் என்று வரும்போது அதற்கு முக்கியத்துவம் தாருங்கள். அப்போதுதான் வருங்காலம் உங்களை வாழ்த்தும். இல்லையேல் பத்தோடு பதினொன்று என்ற நிலையில்தான் உங்களைப் பற்றிய பதிவுகளும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Diwali surprise: 4% hike in DA for govt employees

Diwali surprise: 4% hike in DA for govt employees  TIMES NEWS NETWORK 31.10.2024  Chandigarh : Calling it a Diwali bonanza for the families ...