Friday, September 15, 2017

விவாதக் களம்: மறைக்கத் தேவையில்லை மாதவிடாயை!

Published : 10 Sep 2017 09:45 IST





பாளையங்கோட்டை பள்ளி மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து, ‘மாதவிடாயை ஏன் மறைக்க வேண்டும்?’ என்று கடந்த செப்டம்பர் 3-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேட்டிருந்தோம். வீடுகளில் இருந்துதான் மாற்றத்தைத் தொடங்க வேண்டும் என்று பலரும் எழுதியிருந்தார்கள். ஆண்கள், பெண்களைப் போகப் பொருளாக மட்டும் நினைக்காமல் அவர்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்றும் சிலர் எழுதியிருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் உங்கள் பார்வைக்கு...

சமீபத்தில் ஒரு மருந்துகடைக்குச் சென்றபோது நீண்ட நேரமாக ஒரு பெண்பிள்ளை தயங்கியபடியே நின்றுகொண்டிருந்தாள். அங்கிருந்த ஆண்கள் சென்றதும் நாப்கினை ஒரு வித கூச்சத்தோடு கேட்டு வாங்கினாள். “இதற்கு ஏன் இவ்வளவு தயங்கி நிற்கிறாய்” எனக் கேட்டேன். “அப்படிக் கேட்டால் வெட்கமே இல்லாமல் கேட்கிறது என சொல்லிவிடுவார்களோ என்ற பயம்” என்று சொன்னாள். அந்தப் பெண்னை நினைத்து வருத்தப்படுவதா அல்லது இந்தச் சமுதாயத்தைப் பார்த்து வேதனைப்படுவதா எனத் தெரியவில்லை.

இந்தச் சமூகத்தில் புகைப்பிடிக்க எந்த ஆணும் வெட்கப்படுவதில்லை. அடித்துப் பிடித்து மதுவை வாங்கிக் குடித்துவிட்டு விழுந்து கிடக்க வெட்கப்படுவதில்லை. பொது இடம் என நினைத்துச் சிறுநீர் கழிக்க வெட்கப்படுவதில்லை. பெண்களை கேலி செய்யவும், பெண்களை இழிப்படுத்தும் பாடல்களைப் பாடவும், படமாக எடுக்கவும், காசு பண்ணவும் எந்த ஆணும் வெட்கப்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் மற்றவர்கள் முன்னிலையில் நாப்கினை வாங்கினால் வெட்கம் கெட்டவள் அப்படித்தானே? இன்னும் எத்தனை காலம் போராட வேண்டும் நாங்கள்?

கழிவறையே இல்லாத பள்ளியில் சிறுநீர் கழிக்காமல், மாதவிலக்கு நேரங்களில் துணிமாற்றக்கூட முடியாத நிலையில் தொடர்ந்து பத்து மணி நேரம் பளிளியில் என்னைப்போல லட்சகணக்கான பெண்கள் இன்னமும் அவதிப்பட்டுக்கொண்டும், வேதனை அனுபவித்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள். இதை நினைத்து நம் சமுதாயத்தில் இதற்குக் காரணமான துறை அதிகாரிகளும், பள்ளி, கல்லூரி ஆகியவற்றை நடத்தும் நிர்வாகிகளும்தான் வெட்கப்பட வேண்டும். வாழ்வில் தானும் முன்னேற வேண்டும் என நினைக்கும் பெண்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கும் மனிதர்கள் வெட்கப்பட வேண்டும்.

- எஸ். ஆனந்தி, உறையூர்.

பெண்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டும். பெண்ணை மதித்துப் பழக ஆண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 60 வயதிலும் பெண்களுக்குப் புத்திமதி சொல்வதில் ஆர்வம் காட்டும் ஆண் சமூகம் திருந்த வேண்டும். வீட்டுக்கு ஒதுக்குப் புறத்தில் பெண்களை ஒதுக்கி வைப்பவரும் ஒரு பெண் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமே.

- வசந்தி, மதுரை.

மாதவிடாய் குறித்து வளரிளம் பருவப் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பல சந்தேகங்கள் உள்ளன. இது ஒரு சாதாரணமான இயற்கை நிகழ்வு என்பதை இருபாலருக்குமே புரியவைத்து விட்டால் ஆண் குழந்தைகள் இவற்றைத் தவறான வழியில் சென்று அறிந்துகொள்வது தடுக்கப்படும். அதோடு பெண்களின் பிரச்சினைகளையும் அவர்கள் கொஞ்சம் அனுசரனையோடு அணுகுவார்கள்.

- ஜே .லூர்து,மதுரை.

பள்ளிகளில் கழிப்பறைகளும் தண்ணீர் வசதியும் உண்டா என்பதைக்கூடப் பார்க்காமல் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதில் ஆரம்பிக்கிறது நமது அலட்சியம்.

மாதவிடாய் காலத்தை எப்படிக் கடக்க வேண்டும் என்பதுகூடத் தெரியாத ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள் படும் வேதனைதான் மிகவும் கொடுமையானது. அதுவும் அரசுப்பள்ளிகள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய முறையான கழிப்பிடங்கள் உள்ளனவா என்பதனை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும்.

- ஆர்.ஏ. தீபனா, களியனூர்.

இன்றைய நவீன காலகட்டத்திலும் பெண்கள் தங்களது மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள் என்பதே உண்மை. அது மாதாமாதம் இயற்கையாக பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு நிகழ்வு என்பதைப் படித்தவர்கள்கூட ஏற்க மறுக்கிறார்கள் என்பதும் உண்மைதான். பதின்ம வயதுப் பிள்ளைகளிடம் இது குறித்த முறையான புரிதல் இல்லை. அத்தகைய புரிதலை அவர்களிடம் ஏற்படுத்தும் தெளிவு நம்மிடம் இன்னும் ஏற்படவில்லை.

பல பெண்களால் இன்றும் கடைகளில் கூச்சப்படாமல் வெளிப்படையாக நாப்கின் வாங்க முடிவதில்லை. ஏதேனும் விசேஷங்களுக்கு ‘இந்தக் காரணத்தால்’ வரக் கூடாது என்று சொல்லும்போது அந்தப் பெண்ணின் உணர்வைப் பெண்களே புரிந்துகொள்வதில்லை. முதலில் பெண்கள் இந்த விஷயத்தை இயல்பாகக் கடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களது ஆண் குழந்தைகளுக்கும் சிறு வயதிலிருந்தே மாதவிடாய் நேர சிரமங்களை எடுத்துச் சொல்லி வளர்க்க வேண்டும். அந்த நாட்களில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அவர்களை எப்படிப் புரிந்து கொண்டு உதவ வேண்டும் என்பதையும் அம்மாதான் சொல்லித் தரவேண்டும்.

பள்ளிகளில் வளரிளம் பருவ பெண்களுக்கு மாதவிடாய், நாப்கின் உபயோகிப்பது, அந்த நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் போன்றவற்றைக் கற்றுத்தர வேண்டும். உபயோகித்த நாப்கின்களை எவ்வாறு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் அகற்றுவது என்பதையும் அவசியம் கற்றுத்தர வேண்டும்.

ஆடைகளில் கறைபடுவது பெரிய குற்றம் இல்லை. இதை இனியாவது அனைவரும் உணர வேண்டும். ஆனால் இந்தப் பாடத்தை எல்லோரும் கற்றுக்கொள்ள ஒரு இளந்தளிர் அநியாயமாக உதிர்ந்து விட்டதுதான் வேதனை.

- தேஜஸ்,கோவை.

No comments:

Post a Comment

‘High oxytocin doses one of the reasons for mom death’

‘High oxytocin doses one of the reasons for mom death’  Three Still In Critical Condition  Sarthak Ganguly & Sujoy Khanra  TNN  15.01.20...