Friday, September 15, 2017

உனக்கு மட்டும்: ஒருநாள் கூத்து!

Published : 10 Sep 2017 09:42 IST




மூன்று முறை பஜ்ஜி, சொஜ்ஜி பரிமாறியது எதிர்பார்த்த முடிவைத் தரவில்லை. ஆனால், நான்காவதாக வந்தவர்களைப் பிடித்துப்போகவே ஒருவழியாக என் திருமணம் உறுதியானது. அதுவரை சும்மா சும்மா திட்டிக்கொண்டிருந்த அம்மா, ஒளித்துவைத்திருந்த அன்பையெல்லாம் என் மீது காட்டினார். டாமும் ஜெர்ரியுமாக இருந்த நானும் தங்கையும் உற்ற தோழிகள் ஆனோம். அப்பாவோ பட்ஜெட் பார்க்காமல் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தார். தோழிகளுடன் ஷாப்பிங், வருங்காலக் கணவருடன் போனில் அரட்டை என்று நாட்கள் இனிமையாகக் கடந்தன.

ஊர்ப் பெருமைக்காகத் தன் சக்திக்கு மீறிச் செலவு செய்வதால், அப்பாவுக்குப் பணக் கஷ்டம் இருந்திருக்கும்போல. அடிக்கடி அம்மாவும் அப்பாவும் என்னைத் தவிர்த்துத் தனியாகப் பேச ஆரம்பித்தது கொஞ்சம் புதிதாக இருந்தது. தங்கள் கஷ்டங்களை என்னிடம் மறைக்க முயல்வது புரிந்தது. திடீரென்று என் வீட்டிலேயே நான் அந்நியப்பட்டதுபோல் தோன்றியது.பினேன்.

தங்கை என்னை இறுக அணைத்தவாறு தூங்கினாள். திருமண நாள் நெருங்க நெருங்க அவளது இறுக்கத்தின் அளவு கூடியது. அம்மா எப்போதும் இல்லாத வகையில் தன் இல்லற வாழ்வைப் பற்றி என்னிடம் அதிகம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். அந்தரங்க விஷயங்களும் அதில் உண்டு.

திருமணத்துக்கு முந்தைய நாளே உறவினர்கள் வர ஆரம்பித்தனர். வீடு களைகட்ட ஆரம்பித்தது. ஆனால், அப்பா முகம் மட்டும் கொஞ்சம் வாடியே இருந்தது. ஏதோவொன்று என் மனதை அழுத்தியது. முந்தைய நாள் இரவு முழுவதும் அறிவுரைகள் அள்ளி வீசப்பட்டன. தூக்கம் கண்ணை அழுத்தும் நேரத்தில், ‘மணப்பெண்ணைச் சீக்கிரம் ரெடியாகச் சொல்லுங்க’ என்ற குரல் கேட்டது.

அதிகாலை நான்கு மணிக்குக் குளிக்கச் சொன்னார்கள். குளித்துவிட்டு வந்த பிறகு, பியூட்டி பார்லரிலிருந்து வந்த பெண்கள், ஒப்பனை என்ற பெயரில் இரண்டு மணிநேரம் பாடாய்ப்படுத்தினார்கள். ஒரு வழியாக ஒப்பனை முடிந்ததும் கண்ணாடியைப் பார்த்து அதிர்ந்துபோனேன். அடையாளம் தெரியாத அளவு உருமாறி இருந்தேன்!

அழுகை அழுகையாக வந்தது. கண்ணில் நீர்கோத்ததைப் பார்த்த அம்மா, “அழக் கூடாது கண்ணு. நாங்கள் அடிக்கடி வந்து உன்னைப் பார்ப்போம், தைரியமா இருக்கணும்” என்று அடுக்கிக்கொண்டே போனார். அம்மாவைப் பார்த்துக் கோபத்தில் கத்த வாய் திறக்கும் நேரத்தில், “மேடம் ஸ்மைல் ப்ளீஸ்” என்று போட்டோகிராபர் சொன்னார்.

அவருக்கு மனதில் பி.சி.ஸ்ரீராம் கனவு இருக்கும்போல. தலைகீழான நிலையைத் தவிர அனைத்து நிலைகளிலும் என்னைப் படம் எடுத்துத் தள்ளினார். சாம்பார் மணம் மூக்கைத் துளைத்தது. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது. தாலி கட்டி முடிக்கும்வரை எதுவும் சாப்பிடக் கூடாது என்று பசியில் மண்ணள்ளிப் போட்டாள் பாட்டி. மணமேடைக்குச் செல்லும்போது தெரியாமல் மிதிப்பதுபோல், பாட்டியின் காலை மிதித்துவிட்டுச் சென்றேன்.

மேடைக்கு அருகில் செல்லச் செல்ல கூச்சம் அதிகரித்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், விஜய் சேதுபதியைப்போல், மாப்பிள்ளை என்னைப் பார்த்து “ப்ப்பா… யாருடா இந்தப் பொண்ணு” என்று சொல்லி முகத்தைத் திருப்பிக்கொள்வாரோ என்ற பயம் வேறு இருந்தது. ஆனால் நான் ‘ப்ப்ப்பா’ என்று சொல்லும் அளவுக்கு (லிப்ஸ்டிக் மட்டும்தான் பாக்கி) அவர் மணமேடையில் இருந்ததைப் பார்த்ததும், சரி நாமே பரவாயில்லை என்கிற நிலைக்குத் திரும்பினேன்.


மேடையில் நான் அருகில் அமர்ந்ததும், மாப்பிள்ளை வெட்கத்தில் சற்று நெளிந்தார். அதைக் கவனித்த என் தங்கை, என்னைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள். மேடையில் பெரிய புகை மண்டலம் உருவாகியிருந்தது. கண் மை முகத்தில் பரவிவிடும் என்பதால் கண்ணைக் கசக்கவும் முடியவில்லை. கழுத்தில் தொங்கிய மாலை வேறு மிகவும் பாரமாக இருந்தது. தலை நிமிரக்கூட முடியாமல் குனிந்தே இருந்தேன். ஒருவழியாக என் கணவர், எனக்குத் தாலிகட்டி முடித்துவிட்டார். அப்பாடா இனி சாப்பிடப் போகலாம் என்று நினைத்தால், வாழ்த்துச் சொல்வதற்காக நின்ற நீண்ட வரிசையைப் பார்த்ததும் தலைசுற்றியது.

பசியும் தூக்கமும் வாட்ட, அப்போது பார்த்து முதுகு அரித்தது. இங்கிதம் கருதி சொரிந்துகொள்ள முடியாமல் தவித்தேன். இந்தக் கடுப்பில் பி.சி.ஸ்ரீராம் கனவுக்காரர் வேறு, வாழ்த்த வந்தவர்களைப் போகவிடாமல், “இப்படிப் பாருங்க, கொஞ்சம் திரும்பி நில்லுங்க, முகத்தைத் திருப்புங்க” என்று என் டென்ஷனைக் கூட்டினார். சிறிது நேரத்தில் நான் ரோபோட் மாதிரி, அவர் சொல்லாமலேயே வாழ்த்த வந்தவர் கையைப் பிடித்து, அவரைப் பார்த்துத் திரும்பி, முகத்தைச் சற்றுத் தாழ்த்தி, கேமரா பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தேன்.

வாழ்த்துப் படலம் முடிந்தபின், சாப்பிட அழைத்துச் சென்றார்கள். சாப்பிடும்போது அப்பா, அம்மாவைத் தேடினேன். அவர்கள் அங்கு இல்லை. தங்கையிடம் அவள் சாப்பிட்டுவிட்டாளா என்று கேட்டேன். அந்தப் பொழுதில்தான் நான் முதன்முறையாகப் பெரிய மனுஷி (ஆன்ட்டி!) போல உணர்ந்தேன். “நீ சாப்பிடுக்கா, நான் அம்மாவுடன் சாப்பிடுகிறேன்” என்றவளை, அதட்டி என்னுடன் அமர்ந்து சாப்பிடவைத்தேன். தங்கையைத் தவிர என்னைச் சுற்றி இருந்தவர்கள் எல்லாம், எனக்குப் புதியவர்களாக இருந்தனர்.

இனிமையாகப் பேசினாலும், நன்றாகவே கவனித்தாலும், இன்று காலைவரை எனக்கென்று இருந்த அந்த பந்தம், கண்முன்னே விலகிச் செல்வது தெரிந்தது. தங்கை கையை அழுத்தமாகப் பிடித்துக்கொண்டேன். கண்ணில் நீர் மல்க, என்னைப் பார்த்தவண்ணம், அவளும் என் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள்.

கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது. என் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்க்கும் வகையில், ஏதோ முக்கிய வேலை இருப்பதுபோல் அப்பா அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தார். அம்மா அழுகையை அடக்கியவாறு ‘பொறுமை’ பற்றிய கடைசி நிமிட அறிவுரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். ‘நேரமாச்சு போலாமா’ என்று அத்தை வந்து அழைக்க, விடைபெறும் முன் அம்மாவைக் கட்டிப்பிடித்தேன். அம்மாவின் விசும்பல் கேட்டதும், நானும் அழ ஆரம்பித்தேன். என் தங்கை ஓடிவந்து எங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். என் காதில், “அழாதே, கண் மை கலைந்துவிடும்” என்று அழுதபடியே சொன்னாள். அப்பா கண்ணைத் துடைத்தவாறு தள்ளி நின்றுகொண்டிருந்தார். அவரை இப்படிப் பார்ப்பது எனக்கு இதுதான் முதல் முறை.

எல்லோரிடமும் விடைபெற்று, காரில் ஏறும்பொழுது, வேரோடு பிடுங்கப்பட்ட மரத்தின் மனநிலைதான் இருந்தது. “காரின் ஏசியை அணைத்து ஜன்னலைத் திறக்கலாமா? எனக்கு மூச்சுமுட்டுகிறது” என்று கேட்டேன். சரி என்று சொல்லி ஜன்னலைத் திறந்துவிட்டார். முகத்தை வருடிய குளிர்ந்த காற்று, சற்று இதமாக இருந்தது. என் கணவர் ஆறுதலாக என் கையை மென்மையாகப் பற்றினார். அப்பாவுடனான என் முதல் பயணம் நினைவுக்குவர, கண்ணை மூடியவண்ணம் கணவரின் தோளில் சாய்ந்தேன்.

- திவ்யா, சென்னை.


நீங்களும் பகிர்ந்துகொள்ளுங்கள்

தோழிகளே, நெருங்கிய நண்பர்களிடம்கூடப் பகிர்ந்துகொள்ள முடியாமல் இப்படி எத்தனையோ விஷயங்கள் உங்கள் மனதை ஆக்கிரமித்து இருக்கலாம். அவற்றையெல்லாம் இறக்கிவைக்கத் தோள் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். அவற்றை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உற்ற தோழியிடம் மனச் சுமையை இறக்கிவைத்த நிம்மதி உங்களுக்கும், உங்கள் அனுபவத்தில் இருந்து பாடம் கற்கும் வாய்ப்பு அடுத்தவர்களுக்கும் வாய்க்கலாம் அல்லவா? தயங்காமல் எழுதுங்கள், அனைத்தையும் பேசுவோம்.

முகவரி

பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600002.

மின்னஞ்சல்: penindru@thehindutamil.co.in

No comments:

Post a Comment

Granting of Minimum remuneration to the Practical External Examiner even if none of the registered candidates have reported for the Practical/Viva-voce examinations

KERALA UNIVERSITY OF HEALTH SCIENCES  ABSTRACT KUHS –  Exam General A – Granting of Minimum remuneration to the Practical External Examiner ...