Monday, September 4, 2017


“அதிகார வர்க்கத்தின் செவிட்டில் அறைந்திருக்கிறார் அனிதா!” குமுறும் ஊடகவியலாளர்கள் #RIPAnitha
சே.த.இளங்கோவன்

கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டி சிகிச்சைப் பார்க்க வேண்டிய மலரின் கழுத்தை தூக்குக் கயிறு சுருக்கியுள்ளது. ‘அனிதா’-வின் மரணம் ஒட்டுமொத்த ஈர நெஞ்சங்களின் இதயங்களையும் நொறுக்கிவிட்டது. வசதியானவர்களால் எளிதில் நிரப்பக்கூடிய மேற்படிப்பை, தனது சிந்தனையைப் பட்டை தீட்டியதன் மூலம் எட்டத் துணிந்த ஏழை கூலித் தொழிலாளியின் மகள் அனிதா. வானத்தை ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. வீட்டிலிருந்து அண்ணாந்து பார்த்தாலே போதும், ஆங்காங்கே உடைந்த ஓடுகளின் வழியாக வானம், நட்சத்திரங்களாய் சுடும். இரவிலோ, அதிலும் குறிப்பாக மழைக் காலத்தில் ஒழுகும் ஓடுகள் வழியாக வீட்டுக்குள் நுழையும் மழைக்கீற்றுகள், வீட்டையே குளமாக மாற்றிவிடும்.



இந்த இடர்பாட்டுக்கு மத்தியிலும் தனது போராட்டப் பயணத்தின் மூலம் கல்வித் தாமரையாக மலர்ந்தார் அனிதா. ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். அனிதாவுக்கு மட்டும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருந்தால் அவர் பிறந்த குழுமூர் குக்கிராமத்தின் முதல் மருத்துவராக மலர்ந்திருப்பார். ஆனால், இந்தச் சமூக நீதியெல்லாம், ஒரே கொள்கை, ஒரே தேர்வு என்ற 'நீட் '-டின் பார்வையில் படுமா என்ன? இதோ நீட்-டால் தன் மருத்துவக் கனவு நிறைவேறவில்லை என்று தன்னையே சுருக்குக் கயிற்றில் இறுக்கிக் கொண்டுவிட்டார் ஏழை மாணவி அனிதா.

'தாமரை இலை'-களின் தந்திர திணிப்பால், எங்கள் கிராமத்து மலரின் கனவு சிதைக்கப்பட்டுவிட்டதே' என்று உணர்வாளர்கள் கொந்தளிக்கின்றனர். தமிழ்நாடெங்கும் ஆங்காங்கே அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்கும்விதமாக, நீட்-டுக்கு விலக்குக் கேட்டு களமாடிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், வீதிக்கு வர இயலாதவர்கள், தமக்கான தளங்களில் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில், செய்திகளை மக்களுக்குக் கடத்தும் பாலமாக இருக்கும் பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் செய்தியைக் கடந்தும் தங்களின் உணர்வுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

மூத்த ஊடகவியலாளரான கவிதா முரளிதரன் மற்றும் சோனியா அருண்குமார் குரலைக் கேளுங்கள்..

கவிதா முரளிதரன் :

"தமிழகத்தின் மீது திணிக்கப்படும் ஒரு சமூக அநீதிக்கு அனிதா பலியாகியிருக்கிறார். எளிய பின்னணிகளிலிருந்து வரும் கிராமப்புற மாணவர்களை மருத்துவக் கல்லூரி வளாகங்களுக்குள் நுழைய விடாமல் தடுக்கும் பேரவலமும் ஆகப்பெரிய அநீதியும்தான் நீட் என்பதை தனது உயிரைக்கொடுத்து உணர்த்தியிருக்கிறார். கழிப்பறை இல்லாத ஒரு வீட்டில் பிறந்து மருத்துவராகும் கனவை எட்டிப்பிடிக்க அவர் எவ்வளவு தூரம் போராடியிருக்க வேண்டும்? கைக்கெட்டும் தூரத்தில் அந்தக் கனவு நிற்கும்போது இன்னொரு போராட்டம் அனிதா மீது திணிக்கப்படுகிறது.

போராளி என்று விகடன் அவரை அடையாளம் காட்டுகிறது. குழுமூரிலிருந்து உச்ச நீதிமன்றம் வரை நீள்கிறது அவரது போராட்டம். ஆனால், அதிகார மையங்களுக்கு எதிரான போராட்டத்தில் அந்தச் சின்னப் பெண் என்ன வெற்றியை பெற்றுவிட முடியும்? அவர் இன்னும் இரண்டுமுறை தேர்வு எழுதியிருக்கலாம், இன்னும் தன்னம்பிக்கையோடு அணுகியிருக்கலாம் என்றெல்லாம் சொல்பவர்கள், இந்த அரசுகள் இவ்வளவு பெரிய அநீதியை அவர் மீதும் அவர் போன்ற எண்ணற்ற எளிய மாணவர்கள் மீதும் திணிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் அனிதா ஒரு போராளியாகதான் இறந்திருக்கிறார். அவரது மரணம், சமூக நீதிக்கு விடப்பட்ட சவால். எந்த சமத்துவமின்மைக்கு எதிராக அனிதா போராடி வந்தாரோ அந்த சமத்துவமின்மையை ஒன்றுமே செய்ய முடியாது என்று உணர்ந்து அதன் மீது தனது குருதியை சிந்திச் சென்றிருக்கிறார். ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய நாம், நீட் பற்றி மௌனமாக இருப்பதன் கையாலாகாதனத்தின் மீது காறி உமிழ்ந்திருக்கிறார்.

அவரது மரணம், ஒரு சமூகமாக நமக்கு மிகப்பெரிய அவமானம்".

சோனியா அருண்குமார்:

" 'ஒரு குலத்துக்கு ஒரு நீதி' என்ற ஒடுக்குமுறைக்கு எதிரான நீண்ட நெடிய போராட்டத்தின் விளைவாகத்தான் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய

கிராமப்புற, ஏழை, எளியவர்கள் கைக்கு, 'கல்வி' கிட்டியது. இன்று அதையும் பறிக்கும் செயலை 'நீட்' செய்கிறது. ஒரு படிப்புக்குத் தேவையான கல்வியை ஏற்கெனவே ப்ளஸ் டூ -வில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள், எதற்காக மீண்டும் இன்னொரு தகுதி தேர்வு எழுத வேண்டும்? அப்படியென்றால் ஏற்கெனவே படித்த ப்ளஸ் டூ-வை படிப்பாக மதிக்கவில்லையா? இந்த நீட் திணிப்புக்குப் பின், வசதியானவர்கள், உயர் வகுப்பினர்கள் நலன் மட்டுமே இருப்பதாக சந்தேகங்கள் எழுகின்றன. ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டுமல்ல, ஒரு பெண்ணாகவும் கல்வியால் உயரப் பறக்க வேண்டிய ஒரு பறவையை, நீட் நிர்மூலமாக்கிவிட்டதே. ஏனெனில், பெண்கள் மீது திணிக்கப்பட்ட அடிமைச் சங்கிலியை உடைக்கும் அற்புதக் கருவிகளில் கல்வி முதன்மையானது. அப்படி, மருத்துவராக அனிதா மலர்ந்து வந்திருந்தால், பெண் குலத்துக்கும் எவ்வளவு பெருமை. அனைத்தையும் பொசுக்கி விட்டார்களே! இதில், மற்றொரு கொடுமை, ஒருசிலர், அனிதா தற்கொலை செய்து கொண்டது சரியா? என்று விவாதிக்கின்றனர். எந்தப் பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. அழுத்திச் சொல்கிறேன், நான் அதை ஏற்கவில்லை. இருந்தாலும் திரும்பத் திரும்ப இதை மட்டுமே பேசுவதன் மூலம் பாதிக்கப்பட்டவரையே குற்றவாளி ஆக்கும் செயலை செய்துவருவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இதன் பின்னுள்ள நுட்பமான அரசியலையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். தற்கொலை சரியா? தவறா? என்ற விவாதத்தின் மூலம், பிரச்னையின் மூல காரணத்திலிருந்து கவனத்தைத் திசை திரும்புகின்றனர். எனவே, அனிதாவை தற்கொலைக்குத் தூண்டிய காரணிகளைக் களைந்து நிரந்தரத் தீர்வுக்காகப் போராட வேண்டும். அனிதாவின் தற்கொலை, ஏனைய ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மாணவ, மாணவிகளின் கல்விக் கனவுகள், நனவாவதற்கான திறவுகோலாக அமையட்டும்." என்கிறார்.

தனது மரணத்தின் மூலம், மருத்துவர் கனவைச் சிதைத்த அதிகார வர்க்கத்தின் செவிட்டில் அறைந்திருக்கிறார் அனிதா! 'நீட்' நிரந்தர விலக்குக்கான போராட்டங்களுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கிறது அனிதாவின் மரணம்.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...