Monday, September 4, 2017


கொடிது கொடிது முதுமையில் தனிமை! - முதியோர் உடல், உள நலம் பேணுவது எப்படி?

இரா.செந்தில் குமார்


மும்பையைச் சேர்ந்தவர் ரித்துராஜ். அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளர். இவரது தாயார் ஆஷா ஷகானி, மும்பையில் அபார்ட்மென்ட் ஒன்றில் தனியாக வசித்து வந்தார். கடந்த ஒரு வருடமாக தனது தாயுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருந்த ரித்துராஜ், கடந்த மாதம் தனது தாயைக் காண்பதற்காகச் சொந்த ஊரான மும்பைக்கு வந்தார். பலமுறை காலிங் பெல் அடித்தும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அதனால், அருகில் இருந்த பூட்டுக்கடைக்காரரின் உதவியோடு கதவைத் திறந்து பார்த்த ரித்துராஜுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. தாய் ஆஷா ஷகானி இறந்த நிலையில் எலும்புக்கூடாகக் கிடந்தார். ரித்துராஜ் உடைந்து போய்க் கதறினார். ‘என் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை... இது என் சொந்த முடிவு’ என்று ஆஷா எழுதியிருந்த கடிதம் அந்த அறையின் ஒரு பக்கம் கிடந்தது.



இது மும்பையில் நடந்த சம்பவம்தானே என்று எளிதாகக் கடந்து போக முடியாது. சில வருடங்களுக்கு முன்னர், இதே மாதிரி ஒரு சம்பவம் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையிலும் நடந்தது. அழுகிய வாடை அடிக்கவே, பக்கத்து வீட்டினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வயதான பாட்டி ஒருவர் இறந்து அழுகிய நிலையில் கிடந்தார்.

‘பங்காளி... பக்கத்து வீட்டுக்கும்

சேர்த்துச் சமைக்கிற அன்பு இங்கு வாழும்...’

என்று `சிவாஜி’ திரைப்படத்தில் `பல்லேலக்கா...’ பாடலில், தமிழர்களின் வாழ்வியலை அழகாகச் சொல்லியிருப்பார் மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் . அப்படிப் பக்கத்து வீட்டுக்காரர்களுடனும் அண்டை வீட்டுக்காரர்களுடனும் கூட்டுக் குடும்பம்போல ஒற்றுமையாக, வாழ்ந்துவந்தவர்கள்தான் நம் மக்கள். ஆனால், இன்று நிலைமை ஏன் இப்படி மாறி இருக்கிறது?

இதற்கு என்ன காரணம் ?

தற்போது உள்ள சூழ்நிலையில், வேலைவாய்ப்புகள் வெளியூரிலும், வெளிநாடுகளிலும்தான் அதிகமாக உள்ளன. அதிலும், குறிப்பாக வெளிநாடுகளில் நல்ல சம்பளம் கிடைப்பதால், ஏராளமானோர் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். கிராமங்களில் இருந்தும், நகரங்களில் இருந்தும், பெருநகரங்களில் இருந்தும் வெளிநாடுகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. கிராமங்களில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள், தங்களின் பெற்றோரை சொந்தக் கிராமத்தில் விட்டுச் செல்கின்றனர். அவர்களை அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள், உற்றார் உறவினர்கள் கவனித்துக்கொள்கின்றனர். ஆனால், சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் தனியாகவிடப்படும் பெற்றோர்களின் நிலைமைதான் மிகவும் பரிதாபம்.

பெரிய பெரிய அபார்ட்மென்ட்கள்தான் முதியவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு என்று நினைத்து, அபார்ட்மென்ட்களில் அவர்களை விட்டுச் செல்கின்றனர். ஆனால், அபார்ட்மென்ட் வாழ்க்கை முறை சில நேரங்களில் அவர்களுக்கு ஆபத்தாகவும் மாறிவிடுகிறது. ஏனென்றால், பெருநகரங்களில் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார் என்பதுகூட தெரியாமல்தான் பலரும் வாழ்ந்து வருகின்றனர். அதைப் பெருமையாகவும், பாதுகாப்பாகவும் கருதுபவர்களும் உண்டு. இதனால்தான் இது போன்ற மரணங்கள் உண்டாகின்றன. அது மட்டும் அல்ல... இது போன்று முதுமையில் தனியாக வாழ்பவர்கள் பல்வேறு மனநலப் பாதிப்புகளுக்கும் உண்டாகிறார்கள் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

இது பற்றி மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கத்திடம் கேட்டோம். “வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வது என்பது அவரவர் விருப்பம் சார்ந்த ஒன்று. தங்களின் குடும்ப முன்னேற்றத்துக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் தேவை உண்டாகியிருக்கிறது. அப்படிச் செல்பவர்களில் சிலர் தங்களின் பெற்றோர்களுக்கு முறையான பாதுகாப்புகளைச் செய்யாமல் தனியாக விட்டுச் செல்கின்றனர். அபார்ட்மென்ட்களில் பக்கத்து வீட்டுக்காரர்களுடன்கூடப் பேசாமல் தனிமையிலேயே பொழுதைக் கழிப்பதால், அவர்களுக்குத் தூக்கமின்மை, மனஅழுத்தம், மனப் பதற்றம் ஆகியவை உண்டாகின்றன. அதேவேளையில் பிள்ளைகள் சில நேரங்களில், அதிகமான வேலைப்பளுவின் காரணமாக தங்களின் பெற்றோர்களுடன் தொடர்பில்லாமல் இருந்துவிடுகிறார்கள். இது மிகவும் தவறான போக்கு.

வயதான பலருக்கு (Fear of falling) கீழே விழுந்து விடுவோமோ என்கிற பயம் இருக்கும். இதற்குப் பயந்து வெளியில் கோயிலுக்கோ, மற்ற இடங்களுக்கோகூடச் செல்ல மாட்டார்கள். ஏன், வீட்டுக்குள் நடப்பதையேகூட விட்டுவிடுவார்கள். இதனால் அவர்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் பல்வேறு பாதிப்புக்கள் உண்டாகும். அவர்களுக்கு நடைப்பயிற்சி மிக அவசியம். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டியது பிள்ளைகளின் கடமை.



வயதானவர்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கிய வியாதி டிமென்ஷியா. அன்றாடம் ஒவ்வொரு வேளையும் சாப்பிடவேண்டிய மாத்திரைகளைக்கூட சில முதியவர்கள் மறந்துவிடுவார்கள். சில நேரங்களில் சாப்பிட மறந்துவிட்டு மாத்திரையை மட்டும் உட்கொள்வார்கள். இதனால், பல்வேறு உடல்நல பாதிப்புக்களுக்கு உள்ளாவார்கள்.

இத்தகைய பெற்றோர்களின் பிள்ளைகள், அடிக்கடி பெற்றோருடன் தொடர்பிலேயே இருக்க வேண்டும். தினமும் ஒரு முறையாவது போனில் அழைத்துப் பேசி விடவேண்டும். மேலும், நண்பர்கள், உறவினர்கள் இப்படி தங்களுக்கு நெருக்கமானவர்களை வாரம் ஒரு முறையாவது, தங்களுடைய பெற்றோர்களைச் சந்திக்கச் சொல்ல வேண்டும். தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களுக்காகவாவது ஊருக்கு வந்து பெற்றோருடன் நேரத்தைச் செலவழிக்கவேண்டும்.

எப்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும் ?

உதவிக்கு யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும், உடல்நிலை சரியில்லாத நேரத்தில் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும், வெளியே செல்வதற்கு ஆட்டோ டிரைவரின் போன் நம்பர்... இப்படி அனைத்தையும் ஒரு டைரியில் எழுதி வைத்து, அவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். அதுபோல அக்கம்பக்கத்து வீட்டினரிடம் பேசி, தங்கள் பெற்றோரைப் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள வேண்டும்.

அபார்ட்மென்ட் என்றால், அதன் செகரெட்டரியிடம் சொல்லிப் பார்த்துக்கொள்ளச் சொல்லலாம். பொருளாதாரரீதியாகவும்,

மருத்துவரீதியாகவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே முதியவர்களின் பாதுகாப்பை ஓரளவுக்கு நாம் உறுதி செய்யமுடியும்’’ என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

மேலும், இதுபற்றி முதியோர் நல மருத்துவர் நடராஜனிடம் பேசினோம்... “பெரும்பாலும் இது மாதிரியான மரணங்கள் ஏற்படுவது இல்லை. ஓரிரு சம்பவங்கள் நடக்கின்றன. அதுவும் நடக்கக் கூடாது என்பதே நம் விருப்பம். வெளிநாடுகளுக்குச் செல்லும் பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குத் தேவையான பொருளாதார வசதிகளையும், மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தந்துவிடவேண்டும்.

நண்பர்களிடம், உறவினர்களிடம் சொல்லி கவனித்துக்கொள்ளச் சொல்லலாம். அதுபோல வீட்டுக்கே சென்று மருத்துவம் செய்யும் பல மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களை நியமித்து, வாரம் ஒரு முறை பெற்றோரின் ஆரோக்யத்தைக் கவனித்துக்கொள்ளச் சொல்ல வேண்டும். வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வரும் பிள்ளைகள், இங்கே இருக்கும்போது நேரம் முழுவதையும் தங்கள் பெற்றோருடனே கழிக்க வேண்டும். வெளியில் எங்காவது சுற்றுலா சென்றால், அவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும்’’ என்கிறார் மருத்துவர் நடராஜன்.

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், தங்களுடன் பெற்றோரையும் உடன் அழைத்துச் செல்வதே சாலச்சிறந்தது. முடியாத பட்சத்தில் அவர்களுடன் தினமும் தொடர்பிலேயே இருப்பது நல்லது. நாம் குழந்தையாக இருந்தபோது ஒவ்வொரு நிமிடத்தையும் நமக்காகச் செலவழித்த நம் பெற்றோர்களை, அவர்களின் வயதான காலத்தில் மிகச் சிறப்பாக பார்த்துக்கொள்வது நம் கடமை.

No comments:

Post a Comment

MUHS chalks out plan to prevent paper leaks

MUHS chalks out plan to prevent paper leaks  Ranjan.Dasgupta@timesofindia.com 12.01.2025 Nashik : The Maharashtra University of Health Scien...