மாற்றத்தின் ஆரம்பம்!
By ஆசிரியர் | Published on : 04th January 2017 01:36 AM |
கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறுவது என்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை என்றாலும்கூட, அவ்வளவு சுலபத்தில் இந்தியாவில் யாருக்கும் கடவுச்சீட்டு கிடைத்து விடுவதில்லை. உலகத்திலேயே கடவுச்சீட்டைப் பெறுவதற்கு இந்த அளவுக்கு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டு, கால அவகாசமும் தேவைப்படும் நாடு இந்தியாவாகத்தான் இருந்து வருகிறது. அந்த நிலைமை இனியும் தொடராத விதத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது
மத்திய அரசு.
வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பின்படி கடந்த 2015-ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1 கோடி கடவுச்சீட்டுகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 24.3% அதிகம். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும். வெளிநாடுகளுக்கு பயணம் போவோர், வேலைக்குப் போவோர், உயர்கல்வி கற்பதற்குப் போகிறவர்கள் என்று ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில், கடவுச்சீட்டுப் பெறுவதில் அனாவசியச் சிக்கல்கள் அகற்றப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய முடிவு.
கடவுச்சீட்டு வழங்குதல் குறித்த அரசின் முடிவு பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்திருக்க வேண்டிய ஒன்று. எழுத்து வேலையைக் குறைப்பது, ஆவண இணைப்புகளைக் குறைப்பது என்பன ஒருபுறம் இருக்க, அதைவிடக் குறிப்பிடத்தக்க ஒன்று, காலத்துக்கு ஏற்ப செய்யப்பட்டிருக்கும் விதிமுறை மாறுதல்கள். மாறிவிட்டிருக்கும் சமூகப் பொருளாதாரச் சூழலை மனதில் கொண்டு செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள், சாமானிய மக்கள் கடவுச்சீட்டுப் பெற நடத்தும் பகீரதப் பிரயத்தனங்களுக்கு முடிவு கட்டும்.
ஆள் மாறாட்டம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், கடவுச்சீட்டு தவறாக பயன்படுத்தப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் பல கடுமையான விதிமுறைகள் கையாளப்பட்டன. ஒரு காலத்தில் அதற்கான தேவை இருந்திருக்கலாம். ஆனால் அதுவே நிர்வாகத் தடைகளை ஏற்படுத்தி உண்மையான விண்ணப்பதாரர்களைப் பெரும் சோதனைக்கு உள்ளாக்கின.
இனிமேல், பிறந்த தேதியை மாற்றுவது எளிதாக்கப்படுகிறது. அதேபோல எண்மக் கையொப்பமுள்ள (டிஜிட்டல் சிக்னேச்சர்) திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் போன்றவை ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது.
இந்தியாவில் பிறந்த தேதிச் சான்றாகப் பல ஆவணங்கள் இருக்கின்றன. ஜனன, மரணப் பதிவாளர்தான் முழு அதிகாரம் படைத்தவர் என்றாலும்கூட, பள்ளி இறுதி வகுப்பு ஆவணம், ஆதார் அட்டை, வருமான வரித் துறையின் நிரந்தர கணக்கு எண் (பான் அட்டை), குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை என்று எதை வேண்டுமானாலும் இனிமேல் பிறப்புச் சான்றுக்கு ஆவணமாகத் தர முடியும்.
அதேபோலத் தவறான பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தால் அதை மாற்றுவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். அதற்கான விண்ணப்பத்தையும் கடவுச் சீட்டு பெறப்பட்ட ஐந்து ஆண்டு
களுக்குள் கொடுத்து, சரியான பிறந்த தேதியைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யத் தவறினால், சம்பந்தப்பட்டவரின் கடவுச்சீட்டை முடக்கவும், அபராதம் விதிக்கவும் கடவுச்சீட்டு அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. இனிமேல், காலவரம்பு அகற்றப்பட்டிருப்பதுடன், விண்ணப்பதாரரின் விளக்கத்தின் அடிப்படையில் பிறந்த தேதியை அதிகாரிகள் மாற்றிக் கொடுக்கலாம்.
அரசின் இப்போதைய முடிவால் மிக அதிகமாக பயனடையப் போவது மகளிரும், குழந்தைகளும்தான். விவாகரத்து பெற்ற அல்லது கணவரிடமிருந்து பிரிந்து வாழும் மகளிர் கடவுச்சீட்டுப் பெற எதிர்கொண்ட பிரச்னைகளைச் சொல்லி முடியாது. கடவுச்சீட்டை மாற்றமே இல்லாமல் புதுப்பித்தல், குழந்தைகள் பெயரில் கடவுச்சீட்டுப் பெறுதல் போன்றவைகூடக் கடுமையான மனஉளைச்சலை அந்தப் பெண்களுக்கு அளித்து வந்தது.
கணவரிடமிருந்து பிரிந்து வாழும் மகளிர் கடவுச்சீட்டுப் பெற விவாகரத்துச் சான்றிதழை இணைத்தாக வேண்டும். விவாகரத்துப் பெறும்வரை அவர்களால் கடவுச்சீட்டுப் பெற முடியாது. ஆனால் இது ஆண்களுக்குப் பொருந்தாது. கணவரிடமிருந்து பிரிந்து வாழும் மகளிர் அவர்களது குழந்தைகளுக்குக் கடவுச்சீட்டுப் பெற வேண்டுமானால், குழந்தையின் தந்தையிடமிருந்து அனுமதி பெற்றாக வேண்டும். இப்போதைய முடிவால் இந்தத் தொந்தரவுகள் அகற்றப்பட்டிருக்கின்றன.
வெளியுறவுத் துறை, மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை உயர் அதிகாரிகள் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கும் முக்கியமான மாறுதல், குழந்தைகளுக்கான கடவுச்சீட்டில் தாய் அல்லது தந்தை என்று ஏதாவது ஒரு பெற்றோரின் பெயர் இருந்தாலே போதுமானது. திருமணச் சான்றிதழ், விவாகரத்துச் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் என்கிற விதிமுறை அகற்றப்பட்டு விட்டிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், எல்லா ஆவணங்களும் நீதிபதிகள், காப்புறுதி அலுவலர் (நோட்டரி) ஆகியோரால் உறுதிப்படுத்தப்படும் முறை கைவிடப்பட்டு, அவரவர் உறுதிப்பத்திரம் தந்தாலே போதுமானது என்று மாற்றப்பட்டிருக்கிறது. அதேபோல, அனாதைக் குழந்தைகளுக்கும், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் எந்தவித ஆவணமும் இல்லாவிட்டாலும் சுய உறுதிமொழியின் அடிப்படையில் கடவுச்சீட்டு வழங்கலாம் என்று விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளன.
விரைவாகவும், அதிகச் சிக்கல் இல்லாமலும் கடவுச்சீட்டுக்களை வழங்க வழிகோலும் மத்திய அரசின் இந்த முடிவால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அவனுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற வழிகோலப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சாமானிய குடிமகனை சிரமப்படுத்தும் ஏனைய பல விதிமுறைகளும் எளிமைப்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்போமாக!
No comments:
Post a Comment