ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டுமா?- பிரபல தடயவியல் நிபுணர் ப.சந்திரசேகரன் விரிவான விளக்கம்
THE HINDU TAMIL
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப் படுகிறது. கேள்வி எழுப்பப் படுவதாலேயே, அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார் பிரபல தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் ப.சந்திரசேகரன்.
பேராசிரியர் பக்கிரிசாமி சந்திர சேகரன், நாட்டின் தலைசிறந்த தடயவியல் துறை நிபுணர். ராஜீவ்காந்தி படுகொலையின்போது, தனு என்ற பெண்ணால் பெல்ட்பாம் முறையில்தான் அவர் கொல்லப்பட்டார் என்பதை உலகுக்கு எடுத்துக் கூறியவர் அவர். மத்திய அரசின் மிக உயரிய ‘பத்மபூஷண்’ விருது பெற்றவர்.
தமிழகத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த தடயவியல் துறையை தனியாகப் பிரித்து சுதந்திரமாக இயங்க வழிவகுத்து, அதன் தலைவராகப் பணியாற்றினார். ஜெய்ப்பூர் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் பணியாற்றியவர். இவர் எழுதிய ‘உலகின் முதல் மனித வெடிகுண்டு’ நூல், பல்வேறு நாடுகளில் காவல்துறையினரின் பாடப் புத்தகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தடயவியல் துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் கொண்ட அவர், ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து எழும் சந்தேகங்கள் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
*
ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறதே..
‘ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது’ என்று அவரது நெருங்கிய உறவினர்கள் ஆதாரத் துடன் புகார் செய்தால் மட்டுமே, இது சம்பந்தமாக மாஜிஸ்திரேட் உத்தரவிட முடியும். நீதிமன்ற ஆணையின் மீதும் இதைச் செய்யலாம். ஆனால், இது அவசியமா என்று ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது அவசியம். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்ய இயலாது. இது தேவையில்லை என்பதே என் கருத்து.
*
ஒருவேளை, அதுபோல மாஜிஸ்திரேட் உத்தரவிட்டால் என்ன நடக்கும்?
முறையாகச் செய்யவேண்டும் என்றால், வெளி மாநில தடயவியல் நிபுணர் தலைமையில் 2 மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்வார்கள். அதன்மூலம், மரணம் எப்படி ஏற்பட்டது என்பதை துல்லியமாக கூறமுடியும். மண்டை ஓட்டை ஆராய்ந்தால், தலையில் ஏதாவது பலத்த காயம் ஏற்பட்டதா என்று கண்டுபிடிக்க முடியும். உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனை செய்து, பிறகு மீண்டும் உடலை அடக்கம் செய்துவிடுவார்கள்.
*
அவர் இறந்து சுமார் ஒரு மாதம் ஆகும் நிலையில், உடல் எந்த நிலையில் இருக்கும்?
சதை அழுகிப் போயிருக்கலாம். உடல் வற்றிப் போயிருக்கக்கூடும். ஆனால், சந்தனப்பேழையில் இருப்பதால் உடல் அதிக அளவு அரிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. உடலை மிகவும் கவனமாக வெளியே எடுக்க வேண் டும். திறமை வாய்ந்தவர்கள்தான் இதைக் கையாள வேண்டும். பின்னர் பரி சோதனை நடத்தினால், இறந்த தேதியைக்கூட துல்லியமாக கண்டு பிடித்துவிட முடியும்.
*
உடலைப் பதப்படுத்தும் ‘எம்பாமிங்’ செய்யப்பட்டதால், அவர் இறந்து பல நாட்கள் ஆகியிருக்குமோ என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறதே?
‘எம்பாமிங்’ என்பது மேலை நாடுகளில் சர்வ சாதாரணமான நிகழ்வு. பொது இடத்தில் மக்கள் பார்வைக்காக வைக் கப்பட வேண்டியிருப்பதால், எம்பாமிங் அவசியம். எதையோ மறைக்கத்தான் எம்பாமிங் செய்யப்பட்டுள்ளது என்று கூறுவது அர்த்தமற்ற வாதம்.
*
அவரது கால்கள் நீக்கப்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுவது பற்றி..
ஜெயலலிதா பல ஆண்டுகளாக நீரிழிவு நோய் முற்றி சிகிச்சை பெற்று வந்தார் என்பதை அறிவோம். இந்த நோய் முற்றினால் ‘கேங்கரின்’ எனும் நிலை ஏற்பட்டு, கால்களின் ஒரு பகுதியை அகற்ற நேரிடலாம். அப்படி எடுக்கவில்லை என்றால், உயிருக்கே ஆபத்து என்று மருத்துவர்கள் முடிவு செய்திருக்கலாம். இதுவரை வெளியாகியுள்ள புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தெல்லாம் அதைக் கண்டுபிடிக்க முடியாது.
ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்தால், எந்தவொரு மருத்துவமனை யும் கிளினிக்கல் போஸ்ட் மார்ட்டம் என்ற பிரேதப் பரிசோதனை செய்தே, நோயாளி இறந்துவிட்டார் என்று இறப்புச் சான்றிதழ் வழங்குவார்கள். இதை ஒப் பிட்டுப் பார்த்து கண்டுபிடிக்க முடியும்.
*
ஒரு நோயாளி இறந்து ஒரு மாதம் வரையில் உயிருடன் இருப்பதாக ‘செட்டப்’ செய்து, அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருக்க இயலுமா?
இது ஒரு கற்பனை. மைனஸ் 4 டிகிரி குளிரூட்டப்பட்ட இடத்தில் உடல் இருந்தால்தான் கெடாமல் வைத்திருக்க முடியும். அவசர சிகிச்சைப் பிரிவில் அதுபோன்ற கோல்டு ஸ்டோரேஜ் (Cold Storage) வசதியை எப்படி செய்ய முடியும்? பல்வேறு மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட ஒரு மருத்துவமனையில் இவை எல்லாம் ரகசியமாக நடக்க சாத்தியம் இல்லை. அப்படி இருந்தால், எரியூட்டும்போதோ, புதைக்கும்போதோ அந்த தடயங்களை மக்கள் கண்டுபிடித்துவிட முடியும். சினிமாவில்தான், உயிரிழந்த உடலுக்கு சிகிச்சை அளிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெறும். அதன் பின்விளைவுகள் அதிகம் என்பதால், மருத்துவர்கள் பயப்படுவார்கள்.
*
பிரபல தலைவர்களின் உடலைத் தோண்டி எடுத்து, இறப்பின் காரணம் கணிக்கப்பட்டதற்கு முன்னுதாரணம் இருக்கிறதா?
மாமன்னன் நெப்போலியன் உடல் புதைக்கப்பட்ட பிறகு, அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அறிஞர்கள் விவாதித்தார்கள். செயின்ட் ஹெலனா எனும் தீவில்தான் நெப் போலியன் சிறைவைக்கப்பட்டிருந்தார். அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தபோது, முதலில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 2 மி.மீ. நீளம் உள்ள அவரது தலைமுடியை ஆராய்ந்தபோது, அதில் ஆர்சனிக் என்னும் கொடிய விஷம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நிபுணர்கள் சிறைக்குச் சென்று சோதனையிட்டபோது, அவர் சங்கி லியால் கட்டப்பட்டு சுவர் ஓரமாக நாற்காலியில் உட்கார வைக்கப் பட்டிருந்தார் என்று தெரியவந்தது. சுவரில் அவர் தலையைச் சாய்க்கும் இடத்தில் ஒரு காகிதம் ஒட்டப்பட்டிருந்தது. அது கொடிய விஷம் தடவப்பட்ட காகிதம். சுவரில் அவர் தலையைச் சாய்க்கும் போது, அந்த விஷம் சிறிது சிறிதாக அவரது தலைமுடியில் இறங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் அறிவியல் ரீதியான சோதனையில் இதைக் கண்டுபிடித்தனர்.
என் அனுபவத்தில், கடலூரில் விருப்பலிங்கம் என்பவர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில்தான் இறந்தாரா என்று சந்தேகம் எழுந்தபோது, அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. என் தலைமையில் 2 மருத்துவர்கள் மறு உடல்கூறு ஆய்வு செய்து, பல உண்மைகளைக் கண்டறிந்தோம்.
இவ்வாறு சந்திரசேகரன் கூறினார்.
- பிரகாஷ் எம்.ஸ்வாமி, மூத்த பத்திரிகையாளர்
No comments:
Post a Comment