Sunday, January 1, 2017

2016-சில முக்கிய திருப்பங்கள்!

 ஏ.டி.எம் வாசல் காத்திருப்பு, வர்தா புயல் தாண்டி ‘கடந்த ஆண்டு’ நடந்த முக்கியத் திருப்பங்களின் தொகுப்பு இதோ


இந்த ஆண்டின் இறுதியில் வந்து நின்றுக்கொண்டு, 2016-ம் ஆண்டு எப்படி இருந்தது என ஒவ்வொருவரும் திரும்பி பார்க்கும் போது, சந்தோஷமான நிகழ்வுகளையே மனது நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம்! நமது இந்த இயல்பில் இருந்து சற்று விலகி, இந்த ஆண்டு நம் வாழ்வாதாரத்தை புரட்டி போட்ட சில நிகழ்வுகள், திருப்பங்கள், நம் கவனம் ஈர்த்த விஷயங்கள் குறித்த தகவல்களை இங்கே தொகுத்துள்ளோம்...


1) சென்ற ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இருந்து மீண்ட சென்னை மக்களுக்கு, சோதனை தரம் விதமாகவே, இந்த ஆண்டு ‘வர்தா’ புயல்' வந்தது. முதலில் வந்த தானே புயல் வலுவிழந்ததைக் கண்டு, இனி தொந்தரவு எதுவும் இல்லை என்று பெருமூச்சு விட்ட சென்னை வாசிகளுக்கு, வர்தா கொடுத்த பதில் மிகவும் மோசமானது. ஆம், சென்னை முழுவதும் வர்தாவின் காற்றில் சிக்கி சின்னாபின்னமானது. இந்த 'வர்தா' சென்னை மக்களின் வாழ்வியலை மட்டுமன்றி அவர்கள் ஒவ்வொருவர் வீட்டு மரங்களின் வேர்களையும் அசைத்து விட்டுச் சென்றுள்ளது. சென்னையில் மட்டும் ஏறத்தாழ 40,000 மரங்கள் விழுந்துள்ளது என தகவல் வந்துள்ளது. தற்போது ஓரளவிற்கு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவருகின்றனர்.

2) வர்தாவின் காற்றை விடவும் முதல்வரின் இறப்பு பலருக்கும் அதிர்ச்சி அலையை தந்தது. ஒரு ஞாயிற்றுகிழமை இரவில் 'முதல்வர் நிலை மிக மோசம்' என்று வெளிவந்த மருத்துவமனை அறிக்கையின் போதே பல விதமான சர்ச்சைகளும், சிக்கல்களுமாய் நகர்ந்தது தமிழகம். அதன் பின் முதல்வரின் இறப்பு குறித்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியளிக்க, அதற்குப்பின்னே இருக்கும் மருத்துவமனை ரகசியங்களை வெளியிட வலியுறுத்தி பல தரப்பிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இவை மட்டுமில்லாமல், எதிர்கட்சி தலைவரின் உடல்நல குறைவு, ஆளுங்கட்சியின் அடுத்த பொதுச்செயலாளர் என இந்த டிசம்பர் தமிழக அரசியலை ஒரு புரட்டு புரட்டி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.



3) மோடியின் கறுப்பு பண ஒழிப்பு குறித்த நடவடிக்கையான 500, 1000 ரூபாய் நோட்டு ஒழிப்பு, தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அறிவிக்கப்பட்டபோது வரவேற்கப்பட்டாலும், அடுத்தடுத்த நாட்களில் ஏற்பட்ட பண முடக்கத்தால் புறக்கணிக்கப்பட்டுவிட்டது. தினமும் ஏ.டி.எம்.மில் நின்று நின்று கடைசியில் 'பணம் தீர்ந்துவிட்டது' என்ற அறிவிப்பை மட்டுமே பார்த்தவர்கள் இங்கு உண்டு. மோடியின் 50 நாள் கெடு இன்றோடு முடிகிறது என்ற போதிலும் கூட, எங்காவது ஒரு மூலையில் இருக்கும் ஏ.டி.எம்.மில் பணம் இருக்கிறது என எங்கிருந்தோ வரும் தகவலை நம்பி, அலுவலகத்தில் அரை நாள் விடுப்பு எடுத்து செல்லும் பலரை இங்கு இன்றுவரை காணமுடிகிறது.

4) இந்த வருடத்தின் மிக முக்கியமான மற்றொரு நிகழ்வு, மூன்று பெண்களின் கொடூரமான மரணம். 'மூன்று பெண்கள், மூன்று மரணங்கள்' நமக்கு கற்றுக்கொடுத்த பாடம் ஒன்று தான். ‘பெண்ணாய் பிறப்பது சுலபம், ஆனால் இச்சமூகத்தில் வாழ்வது ரொம்பவே கஷ்டம்’ என்பது தான் அது. ஐ.டி. ஊழியர் ஸ்வாதி, போலீஸ் அதிகாரி விஷ்னுப்பிரியா, கல்லூரி மாணவி வினுப்பிரியா இவர்கள் தான் அந்த மூவர். இவர்களோடு சேர்த்து, கிறிஸ்துவ ஆலயத்திற்குள் கொலை செய்யப்பட்ட ஆசிரியர், கல்லூரி மாணவி ஒருத்தி வகுப்பறைக்குள் கொலை என இந்த பட்டியல் நீள்கிறது. ‘பெண்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை’, ‘கல்லூரிக்கு செல்ல முடியவில்லை’ என ஏனைய பெண்களையும், அவரவர்களது பெற்றோரையும் கதர வைத்தது சம்பவங்கள் இவைகள்.

5) இவர்கள் கொலையில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் மிகவும் விரைவாக செயல்பட துவங்கினர். அத்துனை அழுத்தம் அவர்களுக்கு தரப்பட்டதும் உண்மைதான். ஸ்வாதி கொலை வழக்கில் ராம்குமார் வெகுவிரைவாக கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். அதே வேகத்தில், ராம்குமாரின் மரணமும் நிகழ்ந்தது. 'சிறையில் தற்கொலை செய்து கொண்டார் ராம்குமார்' என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படடது. அது கொலையா, தற்கொலையா என பொதுமக்கள் தரப்பில் கேள்வி எழுப்ப, இன்னமும் அந்த மரணம் மர்மமாகவே உள்ளது.



6) காவிரி பிரச்னை, டெல்டா மாவட்ட விவசாயிகளை மிகவும் பாதித்தது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் இந்த பாதிப்புகள், ஆண்டுதோறும் தமிழகத்தை ஒரு புரட்டு புரட்டி போட்டு விடும். இந்த ஆண்டு, நிலைமையே வேறு. ஒரு கட்டத்தில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட முடியாது என கூறவே, தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுகூட துவங்கினர். மற்றொரு புறம், கர்நாடக மக்கள் போராட்டம் நடத்த துவங்கினர். இருவேறு புறமும் அரசு தீர்மானங்களைத் தாண்டி, இரு மாநில மக்களும் போராட்டத்தில் குதித்தனர்.

7) தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க, அதை எதிர்த்து மக்கள் போராட தொடங்கினர். விலங்குகள் நல ஆர்வலர்கள் காளைகள் துன்புறுத்தப்படுவதாக தொடர்ந்த இந்த வழக்கின் முடிவே ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்கான முக்கிய காரணம். “ஜல்லிக்கட்டு எங்கள் பாரம்பர்ய விளையாட்டு, அதனை தடை செய்யக் கூடாது” என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துக்கொண்டே உள்ளனர். ஹிப்-ஆப் தமிழாவின் ‘டக்கரு டக்கரு’ ஜல்லிகட்டின் முக்கியத்துவத்தை அடிப்படையாய் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. நெட்டிசன்களின் பலம் பொருந்திய ஆதரவில் ஜல்லிக்கட்டு தொடர்பான விமர்சனங்கள் வைரலாக பரவிவருகிறது.

8) இந்திய ராணுவத்தின் ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ மக்களுக்கு ரொம்பவே ஆச்சர்ய நிகழ்வாய் இருந்தது. இதுவரை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்றால் என்ன என்று கூட அறிந்திராதவர்களுக்கு கூட இந்த நிகழ்விற்கு பிறகு ராணுவத்தின் சில சீக்ரெட் விஷயங்கள் தெரிய வந்தது. இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே சென்று தாக்குதல் நடத்திய இச்சம்பவம், நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கின் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு நமது ராணுவம் சரியான பதிலடி கொடுத்துள்ளது என மோடியின் மத்திய அரசு பெருமைப்பட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.




9) இந்த ஆண்டு ஒலிம்பிக்ஸ் ரொம்பவே கவனிகத்தக்கது. பாரா ஒலிம்பிக் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு நடந்த விளையாட்டு துறைகளில் சாதித்தவர்களின் பட்டியல் கொஞ்சம் நீளமானது. பி.வி.சிந்து, ‘தங்கமகன்’ மாரியப்பன், சாக்‌ஷி மாலிக், தீபா கர்மகர், தேவேந்திர ஜஜாரியா என நீளுகிறது நம் பட்டியல். தன் குடும்பத்தில் ஒருவர் வாங்கினால் எப்படி பெருமைபடுவரோ அப்படி தான் இவர்களது வெற்றிக்கும் பூரித்தனர் நம் மக்கள். தீபா மாலிக், சாக்‌ஷி தன்வார், பி.வி.சிந்து போன்ற பெண்ணகளின் வெற்றிகள், வீட்டுக்குள்ளே பெண்ணை முடக்க நினைத்த ஒவ்வொருவருக்கும் சரியான பதிலடியாக இருந்தது.

10) ஒலிம்பிக்கை தாண்டி கிரிக்கெட், கபடி, ஹாக்கி முதலியவையும் நம் கவனம் ஈர்த்தது. 15 ஆண்டுகளுக்கு பின் ஜூனியர் உலக கோப்பையை ஹாக்கி அணி வென்றது. கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தை பிடித்தது முதலிய சில நிகழ்வுகள் விளையாட்டு துறையின் மீது நமக்கு சில பாசிட்டிவ் வைப்ரேஷனை அளித்தது. அஷ்வின் சிறந்த டெஸ்ட் வீரராக செலக்ட் ஆனது, கருண் நாயர் முச்சதம் என விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் எல்லா விளையாட்டுகளும் நேரடியாகவே ரீச் ஆனது. இந்த ஆண்டு விளையாட்டு துறை இந்திய மக்களுக்கு பற்பல ஆச்சர்யங்களையும் சந்தோஷங்களையும் தந்த வருடமாகவே இருந்துள்ளது இன்னும் கூடுதல் சிறப்பு.



தொகுப்பு: ஜெ.நிவேதா,
(மாணவப் பத்திரிகையாளர்)


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024