Sunday, January 1, 2017

தித்திப்பான தெய்வமகள் முதல்...திகிலான நாகினி வரை...2016ன் ஹிட் லிஸ்ட் சீரியல்கள்! #2016Rewind

2014...2015...2016னு வருடங்கள் நிற்காம ஓடி 2017ம் ஆண்டும் பிறந்துவிட்டது. ஆனால், ’சின்னத்திரை’ எனப்படும் டிவி உலகின் சீரியல்களுக்கு வருஷக் கணக்கெல்லாம் இல்லவே இல்லை. அந்த வகையில் 2016 ஆம் ஆண்டில் சீரியல் ரசிகர்களின் மத்தியில் சக்கை போடு போட்ட சில ஹிட் சீரியல்களின் ஒரு சிறு பார்வை இங்கே உங்களுக்காக!

தெய்வமகள்:



’சத்யா - பிரகாஷ்’ ரசிகர் மன்றம் ஆரம்பிக்கும் அளவிற்கு சன் டி.வியின் இந்த சீரியலின் ரீல் ஜோடிக்கு பட்டிதொட்டியெங்கும் ஃபேன்ஸ் அதிகம். அதைவிட முக்கியமாக ஜெய்ஹிந்த் விலாஸ் குடும்பத்தினரின் கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டும் வில்லியான காயத்ரிக்கோ அதிரிபுதிரி எதிரிகள் எக்கச்சக்கம். ‘எனக்கு பெண் குழந்தை பிறந்தா பேர் சத்யாதான்’ என ரசிகர்கள் உறுதியெடுக்கும் அளவிற்கு அன்பே உருவான சத்யப்பிரியா, பட்டென்று கோபப்பட்டாலும் புத்திசாலியான பிரகாஷ், அமைச்சரையே மிரட்டி அட்ராசிட்டி செய்யும் காயத்ரி என 1000 எபிசோட்களைத் தாண்டி சீரியல் உலகில் வெற்றிகரமாக டிராவல் செய்து கொண்டிருக்கிறது ‘தெய்வமகள்’.

ப்ரியமானவள்:



அம்மாக்களே அன்பானவர்கள்தான். அதிலும், மாமியாரும் அம்மாவுக்கு மேல் அன்பானவராக அமைந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அப்படி ஒரு மாமியார்தான் சன் டி.வி-யின் ’ப்ரியமானவள்’ உமா. ஆரம்பித்த நாளில் இருந்து சற்றுகூட தொய்வில்லாமல் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் தொடர் இது. உமாவாக மலையாள நடிகை ப்ரவீணா, தமிழ் சீரியல் ரசிகர்கள் மனதினைக் கொள்ளைக் கொண்டுள்ளார். 2016ம் ஆண்டின் சிறந்த சீரியல்களில் இதுவும் ஒன்று.

வாணி ராணி:



இதுவும் சன் டிவிதான். 2016ம் ஆண்டின் ‘டூயல் ரோல்’ வெற்றி சீரியல் என்றால் அது ‘வாணி ராணி’தான். லாயரான வாணி, அப்பாவியான ராணி என்று நடிகை ராதிகா இரட்டை குதிரையில் வெற்றிச்சவாரி செய்யும் சீரியல் இது. அதுவும் அக்கா அடக்கி வாசிக்கும்போது, தங்கை சீறுவதும், தங்கை அமைதியாகும்போது அக்கா டாப் கியர் எடுப்பதும் என்று டெம்போ இறங்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். ராதிகா சீரியல் என்றாலே குடும்ப உறுப்பினர்களுக்குப் பஞ்சமிருக்காது. அந்த மெகாதொடர் தெரபி இதிலும் மாறவில்லை. அலட்டலில்லாத திரைக்கதை வடிவமைப்பு, அலட்டலான வில்லி நீலிமா ராணி என்று வாணி ராணியும் சீரியல்கள் ஹிட் லிஸ்ட்டில் டாப்.

கல்யாணம் முதல் காதல் வரை:



கேரளாவிலிருந்து தமிழகக் கரையோரம் வீசிய தென்றல் காற்றான ப்ரியா என்னும் பல் மருத்துவருக்கும், ஏற்கனவே திருமணமாகி மனைவியைப் பிரிந்து, பெண் குழந்தையுடன் தனித்திருக்கும் அர்ஜூன் என்னும் ஆறடி அழகு பிசினஸ் மேனுக்குமான காதலும், சுட்டித்தனமும், புத்திசாலித்தனமும் கொண்ட அர்ஜூனின் குழந்தையான பூஜாவிற்கும், ப்ரியாவிற்கும் இடையிலான ஆழமான அன்பும்தான் இந்த சீரியல். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலுக்கு ரீல் - ரியல் ஹீரோயின் ப்ரியாவிற்காகவே ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கம். வருட இறுதியில் ஹீரோயின் மாற்றம் நடைபெற்றிருந்தாலும் இன்னும் கூட ரசிகர்களிடம் தனக்கான இடத்தை விட்டுக் கொடுக்காமல் 2016ம் ஆண்டின் டாப் 10 சீரியல்களில் இடம் பிடித்திருக்கிறது ‘கமுகாவ’..அதாங்க ‘கல்யாணம் முதல் காதல் வரை’.

தலையணைப் பூக்கள்:



எழுத்தாளர் பாலகுமாரனின் நல்லாசியோடு ஜீ தமிழ் சேனலில் தொடங்கப்பட்ட புத்தம்புது சீரியல் இது. 2016ல் டாப் கியரில் பயணிக்க ஆரம்பித்த ஜீ தமிழ் சீரியல்களில் டாப் லிஸ்ட்டில் ஆரம்பித்த குறுகிய காலகட்டத்திலேயே இடம் பிடித்த மெகா தொடர் என்றால் அது ‘தலையணைப் பூக்கள்’தான். பெண்களே இல்லாத வீட்டிற்கு மருமகள்களாக வருகின்ற பெண்களைச் சுற்றி, பிண்ணிப் பிணைந்து இழையோடும் பாசம், பொறாமை, போட்டி, அன்பு, காதல் ஆகிய உணர்வுகளின் கலவை ‘தலையணைப் பூக்கள்’. நிஷா கணேஷ்வெங்கட்ராம், சாண்ட்ரா, ஸ்ரீ என்று இதிலும் இளைஞர்கள் பட்டாளம் அதிகம். டாப் சீரியல் லிஸ்ட்டில் இடம் பிடிப்பதற்கான தகுதிகளோடு ரசிகர்களை கவர்ந்துள்ளது தலையணைப் பூக்கள்.

கைராசிக் குடும்பம்:



முழுக்க, முழுக்க பெண்களே ஆதிக்கம் புரியும் சீரியல் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் ‘கைராசிக் குடும்பம்’. தந்தையில்லாத குடும்பத்தின் மகன்களும், அவர்களுக்கு மனைவியாக வருகின்ற பெண்களும், அவர்களுடைய குணங்கள், குடும்பச் சூழல், தலைமகனின் மனைவியாக வரும் பெண்ணின் அன்பு, அரவணைப்பு இவைதான் கைராசிக் குடும்பத்தின் கதை. டி.ஆர்.பியில் தாறுமாறாய் எகிறி அடிக்கும் சீரியல்களுக்கு நடுவில் கைராசிக் குடும்பத்திற்கும் ரசிகர்களின் ராசி ஜாஸ்தி.

குலதெய்வம்:



அலமேலு என்கிற பழமையான பேருக்கும் மவுசு ஜாஸ்தியானதற்கு முக்கிய காரணம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குலதெய்வம்’ சீரியல். நகைச்சுவைக்கு பேர் போன மெளலி, உணர்வுகளை முகங்களில் காட்டுவதில் திறமைசாலியான வடிவுக்கரசி, மெட்டி ஒலிக்க ஒலிக்க நடனமாடிய சாந்தி என்று குலதெய்வத்தில் நடிகர்கள் பட்டாளமே உண்டு. திருமுருகனின் குலதெய்வம் அருளோ என்னவோ அவருடைய சீரியல்களுக்கு எல்லா வருடங்களிலும் சீரியல் ரசிகர்களிடம் டாப் தொடர் அங்கீகாரம் உண்டு. அது ‘குலதெய்வம்’ சீரியலுக்கு மட்டும் இல்லாமல் போகுமா என்ன?

லட்சுமி வந்தாச்சு:



சின்னத்திரை நடிகை வாணி போஜன் ஒருபக்கம் சத்யப்ரியாவாக கலக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், லட்சுமியாகவும் மறுபக்கம் ஸ்கோர் செய்யும் சீரியல் ஜீ டிவியின் ‘லட்சுமி வந்தாச்சு’. எதிர்பாராதவிதமாக ஒரு அறிமுகமில்லாத குடும்பத்தில் லட்சுமி என்ற பெயரில் மருமகளாகும் ஹீரோயின், நிஜமாகவே லட்சுமியாக மாறிப் போய், அந்தக் குடும்பத்தின் குலவிளக்கு, குத்துவிளக்காக ஜொலிப்பதுதான் கதை. தன்மேல் பொறாமை, கோபம் கொண்ட பெண்ணைக் கூட அக்கா...அக்கா என்று பின்னால் அன்புடன் சுத்த வைக்கும் இந்த லட்சுமிக்கு ரசிகர்களிடையே ஸ்கோர் 100.

நாகினி:



தமிழ் ரசிகர்களுக்கு மற்ற மொழி நாடகங்களும் பிடிக்கும் என்பதை நிரூபித்தது சன் டிவியின் ’நாகினி’ சீரியல். இந்தியிலிருந்து டப் செய்யப்பட்டு, இரவு 10 மணிக்கு ஒலிபரப்பான இந்த சீரியலின் கதாநாயகி ஷிவன்யாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அப்பப்பா... 2016ல் டி.ஆர்.பி ஸ்பீட் ரைஸ் செய்ய சன் டிவி எடுத்த முயற்சியில் ஜெயித்தது ‘நாகினி’ பாம்புதான்.

மாப்பிள்ளை:



ஆண்டின் கடைசியில் விஜய் டிவியில் சரவணன் - மீனாட்சி புகழ் ‘செந்தில்-ஸ்ரீஜா’ ஜோடியின் செகண்ட் இன்னிங்ஸாக ஆரம்பித்த ‘மாப்பிள்ளை’ சீரியல், டாப் லிஸ்ட்டில், டாப் கியரில் இடம்பிடித்துக் கொண்டது. செந்திலுக்கு ஹேண்டசம் லுக் கூடியிருக்கிறது என்றால், ஜெயாவாக நடிக்கும் ஸ்ரீஜாவுக்கோ அழகு இரட்டிப்பாகியிருக்கிறது. இவர்களது ஆடைகளுக்காகவே ஒரு கூட்டம் மாப்பிள்ளை சீரியலைப் பார்க்கிறதென்றால், நமக்கும் இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்கமாட்டாரா என்று ரசிகைகள் கூட்டமும் இந்த சீரியலை டாப் சீரியலாக்கிவிட்டனர்.

இதுக்கும் மேல...இன்னும் கூட நிறைய சீரியல்கள் டிவி உலகின் டான் ரசிகர்களிடம் டாப் இடங்களைப் பிடித்துள்ளன. ஆனாலும், இங்கே பட்டியலிடப்பட்டுள்ள இந்த சீரியல்கள் டாப் இடங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்த ஆண்டில் இவற்றில் என்னென்ன சீரியல்கள் டிஆர்பி-யில் பரமபதம் ஆடப்போகிறது என்று பார்க்கலாம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024