Saturday, January 14, 2017

பொங்கல் பண்டிகையைத் தவிர்க்கும் சிங்கிலிப்பட்டி கிராம மக்கள்: அசம்பாவிதம் நேர்வதைத் தவிர்க்க விநோதப் பழக்கம்

நாய் பொங்கலை சாப்பிட்டதால் ஏற்பட்ட அசம்பாவிதம் காரணமாக கடந்த 3 தலைமுறையாக பொங்கல் பண்டிகையைத் தவிர்த்து வரும் சிங்கிலிப்பட்டி கிராம மக்கள், நிகழாண்டும் பண்டிகை கொண்டாட்டத்தை வழக்கம் போல் தவிர்த்துள்ளனர். அதனால் பண்டிகைக்கு உரிய எவ்வித ஆரவாரமும் இன்றி சிங்கிலிப்பட்டி கிராமம் காட்சியளிக்கிறது.

நாமக்கல் அருகே சிங்கிலிப்பட்டி கிராமத்தில் கடந்த 3 தலைமுறைகளாக பொங்கல் பண்டிகை கொண்டாடத்தை தவிர்த்து வருகின்றனர். அதுபோல, இந்தாண்டும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் வழக்கம் போல் புறக்கணிப்பு செய்துள்ளனர்.

இதுகுறித்து சிங்கிலிப்பட்டி கிராம மக்கள் கூறியது: பொங்கல் பண்டிகை மற்ற கிராமங்களைப் போல் இக்கிராமத்திலும் கொண்டாடப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த மூன்று தலைமுறைகளாக பண்டிகை கொண்டாடுவது தவிர்க்கப்படுகிறது. மூன்று தலைமுறைக்கு முன்பு பொங்கல் பண்டிகை சமயத்தில் சுவாமிக்கு படைப்பதற்காக பானையில் பொங்கல் வைக்கப்பட்டிருந்தது. அந்த பொங்கலை ஏதேச்சையாக நாய் சாப்பிட்டது. அதையடுத்து, அதை அப்புறப்படுத்திவிட்டு மாற்றுப் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைக்கப்பட்டது. அச்சமயத்தில் கிராமத்தில் நன்றாக இருந்த பசு மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அதன்காரணமாக அந்தாண்டு பொங்கல் பண்டிகை கைவிடப்பட்டது. எனினும், அதற்கடுத்தடுத்த ஆண்டுகளிலும் பொங்கல் பண்டிகை சமயங்களில் அசம்பாவம் ஏற்படுவது தொடர் கதையாகியது.

அதனால் கிராம மக்கள் முடிவு செய்து பண்டிகை கொண்டாட்டத்தை கடந்த 3 தலைமுறையாகத் தவிர்த்து வருகிறோம். கிராம மக்களின் பயத்தைப் போக்க அதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இளங்கோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினார். அப்போது அவரது வீட்டில் இருந்த பசு இறந்தது. அதனால் பண்டிகை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டோம். நாங்கள் மட்டுமின்றி கிராமத்தில் இருந்து வெளியேறியவர்களும் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதில்லை என்றனர்.
இதுகுறித்து முன்னாள் ஊராட்சித் தலைவர் இளங்கோ கூறியது: மக்கள் மத்தியில் நிலவும் பயத்தைப் போக்க பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினேன். அப்போது மாடு இறந்தது. மாட்டின் வயிற்றில் இரும்புக் கம்பி சிக்கியதால் மாடு இறந்தது. பொங்கல் கொண்டாட்டத்துக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. இந்தாண்டு 15ஆம் தேதி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திடலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்த உள்ளேன் என்றார்.

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024