Tuesday, January 3, 2017

யாகாவார் ஆயினும்...

By பழ. நெடுமாறன் | Published on : 03rd January 2017 01:06 AM |

மேய்ப்பவன் சிறிது அயர்ந்தால் வெள்ளாடுகள் வேலியைத் தாண்டி வயலுக்குள் புகுந்து பயிர்களை மேய்ந்துவிடும். இப்போது தமிழகத்தில் இதுதான் நடந்துள்ளது.

மணல் கொள்ளையில் தொடர்புடைய சேகர் ரெட்டி என்பவர் வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் தங்கக் கட்டிகள், கட்டு கட்டாகப் பணம் மற்றும் ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த இராம்மோகன்ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை யிட்டிருக்கிறார்கள்.
மேலும் அவரது மகன் வீடு மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரின் வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டு பல இலட்சம் ரூபாய் மதிப்பிற்குப் புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள், பல கோடி ரொக்கம், தங்க நகைகள், தங்க கட்டிகள், சொத்து ஆவணங்கள், அரசு டெண்டர் பணிகளை முறைகேடாகப் பெற்றதற்கான ஆவணங்கள் ஆகியவை சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தனது வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை செய்யப்பட்டது தவறு என இராம் மோகன் ராவ் கருதினால் அவர் சட்டரீதியான பரிகாரம் தேடியிருக்க வேண்டுமே தவிர, செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டி ஆத்திரமாக வார்த்தைகளை அள்ளிக் கொட்டியிருப்பது அவர் வகித்தப் பதவிக்கு அழகல்ல.
மறைந்த முதல்வரின் அனுமதியுடன் தான் செயல்பட்டதாக அவர் பெயரை தேவையே இல்லாமல் இழுத்துப் பேசியிருப்பது எந்த விதத்திலும் அவர் வகித்தப் பதவிக்குப் பொருத்தமற்றதாகும். சட்டத்திற்குப் புறம்பான முறையில் செயற்பட்டவர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததா இல்லையா என்பதுதான் இப்போதுள்ள கேள்வியாகும்.
இதற்குரிய பதிலை அளிக்காமல் யாருடைய பெயரையும் இழுத்து அவர் பேசினாலும் அதனால் பயன் இல்லை என்பதை அவர் கொஞ்சமும் உணரவில்லை.

செய்தியாளர்களிடம் அவர் கூறியவற்றில் சில செய்திகளை மறுநாளே மறுத்துமிருக்கிறார். தலைமை செயலாளராகப் பொறுப்பு வகித்தவர், முன்பின் யோசிக்காமலும் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமலும் வார்த்தைகளைக் கொட்டியிருப்பது அப்பதவிக்கு அவர் தகுதியற்றவர் என்பதையே காட்டுகிறது.
ஆட்சிகள் மாறலாம். அமைச்சர்கள் மாறலாம். ஆனால், அரசு என்பது தலைமைச் செயலாளரை மையமாக வைத்துத்தான் செயல்படுகிறது.
அவரின் கீழ் உள்ள அனைத்து அதிகாரிகளின் செயல்பாட்டிற்கும் வழிகாட்டியாகத் திகழ்ந்து நிர்வாகத்தைச் செம்மையாக நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு தலைமைச் செயலாளரின் தோள்களிலேயே சுமத்தப்பட்டிருக்கிறது.

தலைமைச் செயலாளர் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரி அதிகாரிகள் சோதனை போட வேண்டுமானால் மத்திய நிதியமைச்சரின் ஒப்புதலில்லாமல் சோதனை போட முடியாது. மாநில அரசிற்கும் இந்த நடவடிக்கை குறித்துத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. இவற்றையெல்லாம் அவர் சிறிதும் எண்ணிப்பார்க்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

மிகமிகப் பொறுப்பு வாய்ந்த ஒரு தலைமைப் பதவியில் இருந்தவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுமானால் அவர் அதை அதற்குரிய தீர்ப்பாயம் அல்லது உயர்நீதிமன்றம் ஆகிய எதிலாவது முறையிட்டுப் பரிகாரம் காணவேண்டும். தான் ஒரு நேர்மையாளன் என்பதை நிரூபித்திருக்க வேண்டும். இவ்வாறு சட்டரீதியில் செயல்பட பல வழிகள் இருக்கும்போது அதற்கு மாறாக செயல்பட்டிருப்பது ஏன்? இவ்வாறு பொறுப்பற்ற வகையில் செய்தியாளர்கள் முன் வார்த்தைகளை அள்ளிக்கொட்டியதற்காகவே அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

சிவில் நிர்வாகத்தில் கட்டுப்பாடு, நேர்மை மற்றும் அரசியல் நடுநிலைமை ஆகியவற்றைக் கட்டிக்காப்பதற்காக மத்திய சிவில் நிர்வாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவற்றை அரசு ஊழியர்கள் மதித்துப் பின்பற்றியாக வேண்டும். அரசு ஊழியர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுமானால் விசாரணை நடத்தி அவர்களுக்குத் தண்டனை விதிப்பதற்கான வழிமுறைகள் இவ்விதிகளில் கூறப்பட்டுள்ளன.

மேலும் ஐ.ஏ,எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்காக அகில இந்திய அளவில் சங்கமும் அதற்கு மாநிலங்களில் கிளைகளும் உள்ளன. அதிகாரிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க தனிதீர்ப்பாயங்கள் உள்ளன. இவற்றின் தீர்ப்புக்கெதிராக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் முறையிட உரிமை உண்டு.

மேலும், மத்திய சிவில் நிர்வாக விதிகளின்படி, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களாக நடுநிலையுடன் அதிகாரிகள் செயல்படவேண்டும் எனக் குறிப்பிடும் (ஈ) பிரிவு தெளிவாகப் பின்வருமாறு கூறுகிறது:
"அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் ஊடகங்களிலோ அல்லது பத்திரிகைகளிலோ புனைப்பெயராலோ, தன்னுடைய பெயராலோ அல்லது மற்றொருவர் பெயராலோ மத்திய - மாநில அரசுகள் குறித்து எத்தகைய விமர்சனமும் செய்யக்கூடாது. மேலும் மத்திய-மாநில அரசுகளுக்கிடையே உள்ள உறவுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையிலும் எதுவும் கூறக்கூடாது' எனத் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

தலைமைச் செயலாளர் பொறுப்பு வகித்த ஒருவர் இந்த விதிமுறைகளை அறியாமல் இருக்க முடியாது. அப்படியிருந்தும் பத்திரிகையாளர்களைக் கூட்டி அவர் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள், மேலே கண்ட விதிமுறைகளை அப்பட்டமாக மீறியதாகும்.

யாருடைய தூண்டுதலால் அவர் இவ்வாறு செய்தார், அல்லது யாரை மிரட்டுவதற்காக இவ்வாறு அறைகூவல் விடுத்தார் என்று எழுந்துள்ள கேள்விகளுக்கு விடைகாணப்பட வேண்டியது அவசியமாகும்.
மறைந்த முதல்வரின் சாவில் சந்தேகங்கள் இருப்பதாக அரசியல் தலைவர்களில் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இக்கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகள் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை, தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், இலண்டன் மருத்துவர் ஆகியோரைச் சாரும்.

ஆனால், உயர்நீதிமன்றத்தில் யாரோ ஒருவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விடுமுறைக் கால நீதிபதிகளான இருவர் விசாரித்துள்ளனர். அவர்களில் ஒருவரான நீதிபதி எஸ். வைத்தியநாதன் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆகியோருக்கு முன்னறிவிப்புக் கொடுத்து அவர்களின் பதில்களைப் பெற்று பிறகு இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களையும் கேட்டு தனது கருத்தையோ தீர்ப்பையோ வழங்கியிருக்க வேண்டும்.

பொதுநல வழக்குகளை அனுமதிப்பது சம்பந்தமாக உச்சநீதிமன்றம் வழிகாட்டும் விதிமுறைகளை வகுத்துள்ளது. அவ்விதிமுறைகளை நீதிபதி வைத்தியநாதன் அப்பட்டமாக மீறியிருக்கிறார்.

நீதிமன்றத்தில் அவர் பகிரங்கமாக பேசிய முறை நீதித்துறை இதுவரை சந்தித்திராத ஒன்றாகும். மறைந்த முதலமைச்சரின் சாவில் தனக்கே பல சந்தேகங்கள் இருப்பதாகவும் அவர் உயிரோடு இருக்கும் போதும் இறந்த பின்னரும் எத்தகைய உண்மையையும் வெளியில் சொல்லவில்லை என்று கூறிவிட்டு, "இந்த வழக்கு பொதுநல வழக்காக இருப்பதால் தலைமை நீதிபதி தலைமையில் உள்ள அமர்வுதான் விசாரிக்க வேண்டும். ஒருவேளை இந்த வழக்கை நானே விசாரித்தால் கண்டிப்பாக ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்துப் பரிசோதனை செய்ய உத்தரவிடுவேன்' என்று கூறியிருப்பது அவர் வகிக்கும் பதவியின் மாண்பையும் பெருமையையும் சிதைப்பதாகும்.

அதுமட்டுமல்ல "மறைந்த முதல்வரின் உடலைத் தோண்டி எடுத்து, சோதனைச் செய்ய உத்தரவிடுவேன்' என்று கூறியிருப்பது, மறைந்த முதல்வருக்கு இழைக்கப்படும் அவமதிப்பு என்பதைச் சற்றும் உணராமல் பேசியிருக்கிறார். மறைந்த முதல்வரை மதித்துப்போற்றும் மக்களின் உள்ளங்களில் இது எவ்வளவு வேதனையையும், கொதிப்பையும் ஏற்படுத்தியிருக்கும் என்பதைக்கூட அவர் எண்ணிப்பார்க்கவில்லை.
நீதிபதியான இவருக்கு ஒரு கருத்து இருக்கலாம். ஆனால், சொந்தக் கருத்துகளை வெளியிடுவதற்கு ஏற்ற இடம் நீதிமன்றம் அல்ல. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் நடுநிலை தவறாமல் நின்று நீதியை நிலைநிறுத்த வேண்டியவர் இப்படி தடுமாறலாமா? கடும் சொற்களை வாரிக்கொட்டலாமா? மனம் போன போக்கில் பேசலாமா? இத்தகைய கருத்தோட்டம் கொண்டவர், அந்த வழக்கில் தீர்ப்பளிக்க நேர்ந்தால் முடிவு எப்படி இருக்கும் என்பது அம்பலமாகியிருக்கிறது.

மறைந்த முதலமைச்சரின் சாவில் மர்மம் இருக்கிறது என்று சொன்னால் அதை சட்ட வரம்பிற்கு உட்பட்டு முழுமையாக விசாரித்து உண்மையை கண்டறியவேண்டுமே தவிர மனம் போன போக்கில் எல்லாம் நீதிபதியாக இருக்கக்கூடியவரே பேசக்கூடாது.

தலைமைச் செயலாளர் பொறுப்பு வகித்தவர், தன்மீது எழுந்துள்ள புகாருக்கு உரிய இடத்தில் முறையிட்டு தனது நேர்மையை நிலைநாட்டவேண்டுமே தவிர பகிரங்கமாக எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற முறையில் பேசுவது மிகமிகப் பொறுப்பற்றதாகும்.

இராம்மோகன்ராவ், நீதிபதி வைத்தியநாதன் ஆகிய இருவரும் வள்ளுவர் கூறிய "யாகாவாராயினும் நாகாக்க' என்ற அறிவுரையை மதிக்காமல் பேசியிருக்கிறார்கள். இத்தகையப் போக்கு நிர்வாகத்திற்கும், நீதித்துறைக்கும் பெருங்கேடு விளைவிப்பதாகும்.

கட்டுரையாளர்:
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

No comments:

Post a Comment

C’garh HC: Pension is earned property right, not a bounty

C’garh HC: Pension is earned property right, not a bounty  Orders Govt To Refund Pension Deducted To Heirs Within 45 Days Partha.Behera@time...