Tuesday, January 3, 2017


தனது அறுபதாவது பிறந்தநாளையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்த ஜெயலலிதா, கோயில் யானைக்குப் பழங்கள் கொடுக்கிறார்.

Published: January 3, 2017 07:57 ISTU

என்னருமை தோழி..!


என்னருமை தோழி..!

2011-ம் ஆண்டில் நடைபெற்ற எனது தந்தை சித்ராலயா கோபுவின் சதாபிஷேகத்திற்கு உங்களை அழைக்க நான் வந்தபோது, எண்பதாம் வயதில் அடியெடுத்து வைப்பது எத்தனை உன்னதமான விஷயம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த நீங்கள், ‘’எனக்கு எண்பதாம் வயது வரும்போது எப்படி கொண்டாடப் போகிறேனோ...” என்று கற்பனையில் ஆழ்ந்தீர்களே... எப்படி அதற்குள் புறப்பட்டு விட முடிவெடுத்தீர்கள்?

வழக்கம்போல், தாங்கள் எடுத்த அதிரடி முடிவா இது?காவலர்கள் நடத்திய ‘அரெஸ்ட்’களின் போதெல்லாம் நெஞ் சுரத்துடன் தலையுயர்த்தி நடந்த நீங்கள், ‘கார்டியாக் அரெஸ்ட்’டுக்கு மட்டும் ஏன் தலை சாய்த்து விட்டீர்கள்..?

எம்.ஜி.ஆர் மரணத்தின்போது அவர் உடலின் அருகில் உங்களுக்கு இடம் தர மறுத்தவர்கள், இப்போது ராணுவ மரியாதையுடன், அவருக்கு அருகிலேயே உங்களுக்கு நிரந்தர இடம் தந்திருக்கிறார்கள். ‘முகம் துடைக்கும் கைகுட்டையையே கையில் வைத்திராமல் பின்னால் அமர்ந்திருப்பவரிடம் தரும் நாசுக்கினை கொண்ட தாங்கள், தங்கள் திருமுகத்தினை சுற்றி அந்த வெள்ளை துணிக் கட்டுடன் மக்கள் முன்பாக எப்படி உறங்கி கிடந்தீர்கள்..?’

பத்திரிகைகளில் வெளிவரும் தங்கள் புகைப்படங்களில் துளியும் பொலிவு குறையாமல் தோன்றவேண்டும் என்பதில் நீங்கள் எத்தனை கவனமாக இருப்பீர்கள்! ஒருமுறை, என்னுடன் வந்திருந்த பத்திரிகை புகைப்படக்காரர் ஒருவர், நின்று பேசிக் கொண்டிருந்த தங்களை, முழங்காலிட்டு அமர்ந்தபடி படமெடுத்தார். அதை சட்டென்று கவனித்து முகம் சிவந்த நீங்கள் அவரைக் கண்டிக்கவில்லையா?

‘இப்படி ‘லோ ஆங்கிளில்’ படமெடுக் காதீர்கள்! நான் சினிமாத் துறையிலிருந்து வந்தவள். கேமரா கோணங்கள் நன்கு தெரியும். அமர்ந்த நிலையில் படமெடுத்தால் எனது நாசி துவாரங்கள் படத்தில் தெரியும். அது நன்றாக இருக்காது’ என்று உங்களின் எதிர்ப்பினை காட்டினீர்களே.

என்னருமை தோழி..!

அப்படிப்பட்ட உங்களை ராஜாஜி அரங்கில் இப்படியா பார்க்க வேண்டும்?

உங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த மெரூன் கரை போட்ட பச்சை சேலை எனக்கு பழைய நினைவுகளை உண்டு பண்ணியது. அறுபதாவது வயதில் ஒரு கோயிலுக்கு அதே போன்ற சேலையில்தான் வந்திருந்தீர்கள். வெகுகாலமாகவே உங்களுக்குப் பிடித்தது பசுமை நிறம்!

அதுபோலவே, உங்கள் தாய் சந்தி யாவுக்குப் பிடித்த மாம்பழ நிறத்தில், பசுமை கரை போட்ட மற்றொரு பட்டு சேலையை பொக்கிஷமாக வைத்திருந்தீர்கள். உங்கள் இல்லத்தில் நடந்த ஒரு பூஜைக்கு நான் வந்தபோதும் அதைத்தான் அணிந்திருந் தீர்கள்.

உங்களைப் பாதித்த மரணங்களில் ராஜீவ் காந்தி மரணமும் ஒன்று. ராஜீவ் காந்தியின் சிதறுண்ட உடலின் படங் களைக் கண்டு எத்தனை முறை வேதனைப் பட்டிருக்கிறீர்கள். ‘இப்படி செய்து விட்டார்களே!' என்று கொதிப்போடு சொல்லியிருக்கிறீர்கள். அந்த படங்களை, ஒரு கட்டத்துக்குப் பிறகும் மீண்டும் மீண்டும் வெளியிட்ட பத்திரிகைகளையும் சினந்தி ருக்கிறீர்கள். ‘அரசியலுக்கு வந்தால் எல்லா அவமானங்களுக்கும் தயாராக வேண்டும். ஆனால் ஒருவர் அமரராகிவிட்ட பிறகுமா அவரை அவமானப்படுத்துவது?’ என்றீர்கள்.

மரணத்தைப் பற்றி நீங்கள் பேசிய முக்கியமான இன்னொரு தருணமும் எனக்கு பளிச்சென்று நினைவில் இருக்கிறது. எங்களது மூத்த பத்திரிக்கையாளர் ஜெயந்த். தங்களது சித்தி மகளின் மரண செய்தியை அறிந்ததும், அதை என்னிடம் சொல்லி, உங்களுக்குத் தெரிவிக்கச் சொன்னார். உறவினர்கள் எவருடனும் தொடர்பில்லாமல் இருந்த உங்களுக்கு சித்தி மகளின் மரணச் செய்தி வந்தடையாமலும் போயிருக்கலாம் என்பதால், நான் அதை உடனே உங்களுக்குத் தெரிவித்தேன். அதற்கு தங்களது பதில் என்னை உலுக்கி விட்டது!

‘‘ஆம்... நீங்கள் குறிப்பிட்ட அந்த சித்தியின் மகள் சிறுவயது தொட்டு எனக்கு மிக நெருங்கியவள். ஆனால், இவ்வளவு காலம் அவர்களை எல்லாம் இடையில் பிரிந்து இருந்துவிட்டு, எனது பிற்பகுதி (’ட்விலைட்’ என்ற வார்த்தையை அப்போது பயன்படுத்தினீர்கள்!) காலத்தில், எதற்கு பழைய நினைவுகளை எழுப்பி மனதைப் பாரமாக்கிகொள்ள வேண்டும்?’’ என்றீர்களே!

‘‘மரணம் குறித்து எனக்கு அனுதாபம் உண்டு. பயம் கிடையாது. என்றாவது ஒருநாள் அது வரத்தான் போகிறது. ஆனால், அது என்னை என் தாயுடன் இணைத்து வைக்கும் ஒரு நல்ல முடிவாகவே இருக்கும்..’’ என்றும் நீங்கள் சொன்னபோது உங்களது மனச்சுமையை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது.

2008-ம் வருடம், பிப்ரவரி மாதம்... தங்களுக்கு 60 வயது நிறைவு... அந்த வருடம் நிகழ்ந்த ஒரு நிகழ்வுதான், என் மீதான உங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. கிரகங்களின் பிரயாணத்தை கவனிப்பதில் எப்போதுமே ஒரு சுவாரஸ்யம் எனக்கு. அந்த வருடத்தின் துவக்கத்தில், சில கிரகங் களின் அமைப்பு ஒருவித கலக்கத்தை உண்டுபண்ணியது. அந்த இரண்டாண்டு காலங்களில், அகவை அறுபதைக் கொண் டாடும் இந்தியத் தலைவர்களில் ஒருவர் விண்ணிலிருந்து வீழ்ந்து மடியக் கூடும் என்பதாக கிரகங்களின் சஞ்சாரங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.

அப்போதுதான் அறுபது வயதான தங்களுக்கு, ‘வான் வழிப் பயணங்களைச் சிறிது காலம் தவிருங்கள்’ என்று ஒரு கடிதத்தை பிப்ரவரி 18, திங்கள்கிழமை அன்று அனுப்பினேன். கடிதம் உங்களை அடைந்ததா அல்லது அதைப் படித்து அலட்சியப்படுத்தி விட்டீர்களா என்று அப்போது நான் அறியேன்.

பிப்ரவரி 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, தாங்கள் திருக்கடையூர் செல்வதற்காக எட்டு இருக்கைகள் கொண்ட விமானத்தில் திருச்சி வரை செல்லக் கிளம்பிவிட்டீர்கள். கேள்விப்பட்டபோது, என்னால் பிரார்த் தனையை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு, தாங்கள் திரும்பிச் சென்னைக்கே வந்து விட்டீர்கள். நீங்கள் செல்ல இருந்த மற்றொரு விமானம் 40 நிமிடங்கள் தாமதம் ஆகும் எனத் தெரிந்தது. காத்திருக்க விருப்ப மின்றியோ என்னவோ... தரை வழி மார்க்கமாக காரிலேயே திருக்கடையூர் சென்றீர்கள். அந்த சம்பவத்தை நானும் மறந்தேவிட்டேன்.

அடுத்த மாதம் மார்ச் 7, வெள்ளிக் கிழமை... எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்புதான் உங்களுடன் நான் ஒரு புதிய ஆன்மீகப் பயணத்தைத் துவங்குவதற்கான கட்டியத்தைக் கூறியது.

- தொடர்வேன்...

தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in



No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...