என்னருமை தோழியே..!
பல நாட்கள் என்னிடம் நீங்கள் கூறியிருந்த சேதிகளை இதுவே அம்மாவின் நியதிகள் என்று பறைசாற்ற போகின்றேன்..
இன்னுயிர் தோழியே....
அன்றொரு நாள் உங்கள் வாழ்க்கை சரிதத்தை இயற்ற நான் அனுமதிகோரி நின்றபோது நீங்கள், ‘‘அதற்கான நேரம் வரும்.. நீதான் அதை எழுதுவாய்..'' என்றீர்கள்.
இதோ அந்த நேரமும் அமைந்துவிட்டது.
ஆனால்.. வாசிக்கத்தான் நீங்கள் இல்லை!
நான் கோரிய அனுமதியை அன்றே வழங்கியிருந்தால், யாரும் அறிந்திராத உங்களது மென்மையான இதயத்தினை உமக்குள் நீங்கள் ஒளிந்திருந்த.. குதூகல கோமளத்தின் சிறப்புகளை உங்கள் பார்வையிலேயே வெளிக் கொணர்ந்திருப்பேனே...!
இப்போது கூறினால் என்னாகும்?
இரும்புக்குள் ஏது மென்மை என்றல்லவோ கேட்பார்கள்?
உங்களைப் பற்றிச் சொல்கின்ற இந்த புதியவன் யார் என்கிற வினாக்களும் எழுமே...
அரசியலுக்காக உங்களைச் சுற்றியவர்கள், பொருளுக்காக உங்களைச் சுற்றியவர்கள் இன்னும் பதவி, புகழ் மற்றும் விருதுகளுக்காக உங்களைச் சுற்றியவர்களையெல்லாம் கடந்து, ‘உங்கள் மன நிம்மதிக்காகவும், ஆன்மிகத் தேடலுக்காகவும் நீங்கள் ஏற்படுத்திக்கொண்ட நட்பு நான்’ என்று என்னை நானே அறிமுகப்படுத்திக்கொள்ளும் இந்த வாய்ப்பும் நீங்கள் எனக்கு நல்கியதுதான்.
என்னருமைத் தோழியே..!
அரண்மனை அறிந்தாய், அரியணை அறிந்தாய். உன்னுள் ஒருபுறம் இருந்ததை நினைத்திட மறந்தாய். வருகின்ற வழக்குகளைத் தீர்த்து முடித்தாய். உன்மனதின் வருத்தங்களைத் தீர்க்க மறுத்தாய்.. மகள், சகோதரி, மாணவி, நாட்டியத் தாரகை, பாடகி, நடிகை, எழுத்தாளர், விமர்சகர், தலைவி, முதல்வர், அம்மா ஆகிய நிலைகளையெல்லாம் கடந்து ஏமாற்றங்களும் சோகங்களும் நிறைந்த தனிமையில் மட்டும் நீங்கள் வெளிப்படுத்திய அந்த அம்மு என்கிற குறிஞ்சி மலரைப் பற்றிப் பேச விழைகிறேன்.
உமது நினைவுகளுக்குப் பல்லாண்டு பாடுகிறேன்.
(மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் நல்ல நட்பு பாராட்டியவரும், மனம் விட்டுப் பேசிச் சிரித்துப் பழகக் கூடிய வெகு சிலரில் ஒருவராகவும் இருந்தவரின் மனதில் நிலைத்த நினைவுகள் நமது நாளிதழில் பதிவு செய்யப்படவிருக்கின்றன. இரும்புப் பெண்மணி என வர்ணிக்கப்படும் ஜெயலலிதாவுடனான அவருடைய நேரடி சந்திப்புகள், இதுவரை இந்த உலகம் கண்டிராத ஒரு ஜெயலலிதாவை உங்களுக்கு அனுபவபூர்வமாக அறிமுகப்படுத்தும் என்பது நிச்சயம்)
(நாளை முதல் சந்திப்புகள் தொடரும்)
No comments:
Post a Comment