Wednesday, January 4, 2017

வான்கோழி ஒரே நாளில் மயில் ஆகிவிட்டதாம்...! சசிகலா தலைமைக்கு குட்பை சொன்ன நாஞ்சில் சம்பத்


அ.தி.மு.க மேடைகளில் இதுவரை ஜெயலலிதா புராணம் பாடி வந்த நாஞ்சில் சம்பத்... இப்போது, 'சசிகலா புகழ்பாட தயாராக இல்லை' என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். அ.தி.மு.க-வுக்கு குட்பை சொன்ன அவர் இனி எங்கே செல்வார்?

தி.மு.க மேடைகளில் முழங்கி வந்த நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க என்றொரு கட்சியை வைகோ தொடங்கியபோது அவரோடு சென்று அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ஊர் ஊராகச் சுற்றி வந்தார். 19 ஆண்டுகள் வைகோவின் நிழலாக வலம் வந்து கொண்டு இருந்த நாஞ்சில் சம்பத், 2012-ம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து வெளியேறினார்.

அப்போது அ.தி.மு.க தரப்பில் இருந்து நாஞ்சில் சம்பத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தி.மு.க.விலும் பேசினார்கள். ‘அரசியல் மேடையே வேண்டாம். இலக்கியம் பேசி இனி இருக்கும் எஞ்சிய நாட்களை கழிக்கப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு நிறைய பட்டிமன்ற கூட்டங்களில் பிஸியானார். ஆனால், ஆளும்கட்சியாக இருந்த அ.தி.மு.க அவருக்கு தூது மேல் தூதுவிட்டது. ஜெயலலிதாவே போன் போட்டு அவரை அழைத்தார். மறுப்பு சொல்ல முடியாமல் அந்தக் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த அன்றே அவருக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி தரப்பட்டது.

அ.தி.மு.க வரலாற்றிலேயே இல்லாத வகையில், தமிழகம் முழுவதும் நாஞ்சில் சம்பத் கழகப்பணியாற்ற வசதியாக இனோவா கார் ஒன்றையும் கொடுத்தார் ஜெயலலிதா. கூடவே, காருக்கான எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவையும் ஒவ்வொரு மாதமும் தலைமைக் கழகமே கொடுத்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.



இதையடுத்து மீண்டும் சுறுசுறுப்பானார் நாஞ்சில் சம்பத். அ.தி.மு.க மேடைகளில் முழங்கினார். ஜெயலலிதா புகழ்பாடினார். 2015-ம் ஆண்டு, ஜெயலலிதா கைதாகி விடுதலை ஆன பிறகு நடந்த பொதுக்குழு கூட்டம் குறித்து தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘எறும்புகள் சாகிறதே என்று யானைகள் நடக்காமல் இருக்க முடியாது’’ என்று அவர் கூறியது விவாதப்பொருளானது. இதையடுத்து கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதன்பின்னர், சில மாதங்களில் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியை கொடுத்தார் ஜெயலலிதா. மீண்டும் மேடைகளில் அ.தி.மு.க பிரசார பீரங்கியாக வலம் வந்தார் சம்பத்.

ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த நாஞ்சில் சம்பத், ஜெ. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கறுப்பு சட்டை அணிந்து வந்து ஜெயலலிதா உடல் முன்பு விழுந்து வணங்கி கதறி அழுது தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார். இறுதி ஊர்வலத்தின் போது கூட்டத்தோடு கூட்டமாக வாலாஜா சாலையில் நின்று ஜெயலலிதாவுக்கு விடைகொடுத்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தின் ஈரம் காய்வதற்குள்ளேயே மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், சைதை துரைசாமி போன்றவர்கள் போயஸ் கார்டன் சென்று, கட்சிக்கு தலைமை ஏற்க வருமாறு சசிகலாவுக்கு அழைப்பு விடுத்தனர். அந்தக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் தலையைக் காணவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, ‘‘அ.தி.மு.க பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா அம்மையாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். சசிகலாவுக்கு மட்டுமே தலைமை தாங்கத் தகுதி உள்ளது என்று முடிவெடுத்துவிட்டார்கள். அவரை ஏற்றுக் கொள்வதற்கான எந்த தகுதியும் எனக்கு இல்லை. விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்!’’ என்று கூறினார்.

தற்போது நாஞ்சில் சம்பத் அ.தி.மு.கவில் இருந்து வெளியேறிவிட்டார். ஜெயலலிதா கொடுத்த காரையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். இனி எங்கே செல்வார் நாஞ்சில் சம்பத்? தி.மு.க பொதுக்குழு ஜனவரி 4-ம் தேதி கூடுகிறது. அங்கே பார்க்கலாமா?

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024