தமிழகத்தின் அரசியல் சூழலை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் களமிறங்கியுள்ளது பா.ஜ.க தலைமை. 'ஜெயலலிதா இல்லாத சூழலில், 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை பிரதமர் தலைமையில் வலுவாக எதிர்கொள்ளலாம்' என மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் அனுப்பிய சில குறிப்புகளை வைத்தே, திட்டமிடும் பணிகள் தொடங்கிவிட்டன' என்கின்றனர் பா.ஜ.கவினர்.
முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, கார்டன் வட்டாரத்துக்கு நெருக்கமானவர்கள் மீது வருமான வரித்துறையின் சோதனைகள் பாய்ந்தன. அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் என அடுத்தடுத்த நெருக்கடிகளால் அதிர்ந்தனர் மன்னார்குடி உறவுகள். 'கூட்டாட்சித் தத்துவத்தை சிதைக்கும் வகையில் மத்திய அரசின் ரெய்டு நடவடிக்கைகள் அமைந்துள்ளன' என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, அ.தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் போன்றவர்கள் கொந்தளித்தனர். ஆனால், இந்த ரெய்டுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் எந்தவித எதிர்ப்பும் இல்லை.
"வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனையை நிறுத்தி வைத்துள்ளனர். 'ராம மோகன ராவ் பேட்டிக்குப் பிறகு ரெய்டு நடக்கவில்லை' என்று சிலர் பேசுகிறார்கள். அது முற்றிலும் தவறானது. அடுத்தடுத்து நடத்த வேண்டிய சோதனைகள் பற்றிய விவரங்களோடு அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள். 'உறுதியான தகவல்கள் கிடைத்தால், எந்தவித தயக்கமும் இல்லாமல் சோதனைக்குச் செல்லுங்கள். யாருடைய உத்தரவுக்கும் காத்திருக்க வேண்டாம்' என நிதித்துறை அமைச்சகத்தில் இருந்து உத்தரவுகள் வந்துள்ளன. அதற்கேற்ப, வருமான வரித்துறையின் இயக்குநர் ஜெனரல் தலைமையில் தொடர்ந்து கூட்டம் போட்டு வருகின்றனர் அதிகாரிகள். எந்த நிமிடத்திலும் ரெய்டு நடவடிக்கைகள் தொடங்கும். 'தமிழகமே ஊழல் நிறைந்த மாநிலம்தான்' என்ற தோற்றம் வெளிமாநில மக்கள் மத்தியிலும் உருவாகிவிட்டது. அந்தவகையில் மத்திய அரசு நினைத்ததைச் சாதித்துவிட்டது. கூடவே, தேர்தலுக்கான வேலைகளும் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டன" என விவரித்த பா.ஜ.க சீனியர் நிர்வாகி ஒருவர் மேலும் தொடர்ந்தார்.
"வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில், தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள் பா.ஜ.கவோடு கூட்டணி வைக்க முன்வந்தன. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணிக்குள் அங்கம் வகிப்பதையே இந்தக் கட்சிகள் விரும்பவில்லை. காரணம். 12 சதவீத அளவுள்ள கிறிஸ்துவ, முஸ்லிம் ஓட்டு வங்கியை இழப்பதற்கு இவர்கள் விரும்பாததுதான். அ.தி.மு.கவில் சசிகலாவை முன்னிறுத்தி, நடராசன் போன்றவர்கள் நடத்தும் திட்டங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார் பிரதமர். 'உங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்' என்று உறுதி கொடுத்துவிட்டு, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தியோடு, கார்டன் வட்டாரம் நட்பு பாராட்டுவதை மத்திய அரசு ரசிக்கவில்லை.
அதன் விளைவாகவே, ஜெயலலிதா மரணம் குறித்து கேள்வி எழுப்புகின்றவர்களை, பா.ஜ.க தலைவர் அமித் ஷா சந்திக்கிறார். அவர்கள் கொடுக்கும் மனுக்களை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெறுகிறார். இதுதொடர்பாக, ஜனாதிபதிக்கும் புகார் மனுக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. சசிகலா உறவுகளுக்கு எதிராக வரும் சிறு மனுக்களைக்கூட மத்திய அரசு ஒதுக்கித் தள்ளுவதில்லை. ஓ.பன்னீர்செல்வம் மூலமாகவே நம்பிக்கை ஓட்டெடுப்பை நடத்துவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. 'ஓட்டெடுப்பில் வெற்றி பெற்றுவிட்டால், பன்னீர்செல்வம் வலிமையான தலைவராக மாறிவிடுவார். நமக்கான அரசாகவும் இருக்கும்' என பா.ஜ.க தலைமை திட்டமிடுகிறது. அதே சமயம் ஒருவேளை எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு சசிகலா முதல்வராகிவிட்டாலும், அடுத்தடுத்த அதிரடிகளை மத்திய அரசு நிகழ்த்தும்.
முதலமைச்சர் பதவியை நோக்கி சசிகலா நகரும்போது, ஆளுநர் மூலமாக ஆட்சிக்குச் சிக்கல் ஏற்படுத்தும் வேலைகளும் நடக்க இருக்கின்றன. அரசைக் கலைக்கும் வேலைகளும் நடக்கலாம். ஒருவேளை தேர்தல் அறிவிக்கப்பட்டால், 3 சதவீத வாக்கு வங்கியோடு இருக்கும் பா.ஜ.க, ஜெயலலிதா இல்லாத சூழலில் பத்து சதவீத வாக்கு வங்கியைப் பெறுவதற்கான வேலைகளில் இறங்கும். அதன்பிறகு, 'நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையை ஏற்று, தேர்தலை சந்திக்க பிரதான கட்சிகள் முன் வரும்' என நினைக்கிறார் பிரதமர். அதற்காகத்தான் படேல் வரிசையில் காமராஜரை முன்னிறுத்துகிறார். 'காமராஜர்ஜி இருந்திருந்தால், பண மதிப்பு நீக்க நடவடிக்கையை வரவேற்றிருப்பார்' என அவர் உரையாற்றினார். கடைசித் தேர்தலில் தோல்வியைத் தழுவும்போதும், 40 சதவீத வாக்குகளைக் கைவசம் வைத்திருந்தார் காமராஜர். அவரை முன்னிறுத்துவது தமிழகத்தில் யாரும் எதிர்பார்க்காத அரசியல் வியூகம். அதற்கெல்லாம் பலன் இருக்குமா என்பதை இப்போது கணிக்க முடியாது. ஆனால், அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தால், நாடார், முத்தரையர், கவுண்டர் உள்ளிட்ட பெரும் சமூகங்களின் வாக்குகள் பா.ஜ.கவின் பக்கம் வரும்' என மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் விரிவான குறிப்பை அனுப்பியிருக்கிறார்கள். அதையொட்டியே, அனைத்து நடவடிக்கைகளும் வேகமடைந்து வருகின்றன" என்றார் விரிவாக.
எங்கோ தேள் கொட்டினால், எங்கெங்கோ நெறி கட்டுகிறதே..!
No comments:
Post a Comment