Saturday, January 14, 2017

 தலைநகரை தவிக்கவிடும் தண்ணீர்ப் பஞ்சம்! - அதிரும் அரசின் ஆய்வு முடிவுகள்
 

பொங்கல் திருநாளை உற்சாகமாகக் கொண்டாடும் மனநிலையில் விவசாயப் பெருமக்கள் இல்லை. ' அனைவருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக, 2017 இருக்க வேண்டும்' என பரிமாறப்படும் வாழ்த்துகளில் எந்தவித உணர்வுகளும் இல்லை. ஆம், ' இந்த ஆண்டு வறட்சியான ஆண்டாக இருக்கப் போகிறது' என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
10 சதவீதம்தான் தண்ணீர்!

தென்மேற்குப் பருவமழையும் தமிழகத்துக்குப் பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில், ' வட கிழக்குப் பருவமழை காலமும் முடிவுக்கு வந்து விட்டது' என்ற அறிவிப்பை ஜனவரி 3-ம் தேதி சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டது. இயல்பாக பெய்யும் மழை அளவைவிட, 62 சதவீதம் குறைவாக வட கிழக்குப் பருவமழை பெய்திருக்கிறது என்பது உண்மையிலேயே வேதனைக்குரிய செய்திதான்.

மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள், வறண்டு போய் வெடித்துக் கிடக்கின்றன. எஞ்சியிருக்கும் ஒரு சில நீர் ஆதாரங்களிலும், சொற்ப அளவு நீரே இருப்பதைக் காண முடிகிறது. இந்தக் கோடையை சமாளிக்க இது நிச்சயம் போதுமானதாக இருக்காது. கடந்த 140 வருடங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் 2016-ம் ஆண்டு மிகக் குறைந்த அளவு மழை பெய்திருக்கிறது என்கிறது வானிலை ஆய்வு மையம். ஒரு வருடத்துக்கான சராசரி மழை அளவான 920 மில்லிமீட்டரில், சுமார் பாதி அளவே, அதாவது 543 மில்லிமீட்டரே மழைப் பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு சென்ற 1846-வது வருடம் 534 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருக்கின்றது. அப்படியானால், கடந்த 140 வருடங்களில் பார்க்காத கடுமையான தண்ணீர் பஞ்சத்தை நாம் எதிர்கொள்ளப் போகிறோம். அதற்கான அறிகுறிகளும் தொடங்கி விட்டன.

கடந்த சில நாட்களாகவே, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தின் பல பகுதிகளில் குழாய்களில் விநியோகம் செய்யப்படும் தண்ணீர் அளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 83 கோடி லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்து வந்த, சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம், இந்த அளவில் 30 சதவீதத்தைக் குறைத்துவிட்டு, ஜூன் மாதம் வரையில் நிலைமையை சமாளிக்க திட்டமிட்டுள்ளது. சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம், இரட்டை ஏரி ஆகியவற்றில் சுமார் 10 சதவிகிதம் மட்டுமே தண்ணீர் உள்ளது. சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த நான்கு ஏரிகளிலும் 9,795 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி இருந்தது. இதில், வெறும் 1626 மில்லியன் கனஅடி அளவுக்கே தண்ணீர் உள்ளது. இவை நான்கும்தான் சென்னை நகரின் 50 சதவீத தண்ணீர்த் தேவையை நிவர்த்தி செய்யும் நீர்நிலைகள். இவற்றிலேயே இந்த நிலை என்றால், வரக்கூடிய அபாயத்தை உணர்ந்து கொள்ள முடியும். கடல் நீரை குடிநீராக சுத்திகரிக்கும் நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய நிலையங்களிலும், வழக்கமான அளவை விட 30 சதவீதம் குறைவாகவே, தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. வர்தா புயல் காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளும், அடிக்கடி ஏற்படும் மின் தடையுமே இந்த உற்பத்திக் குறைவுக்குக் காரணமாகச் சொல்கின்றனர். ' இன்னும் சில தினங்களில் இந்தக் கோளாறுகள் சரிசெய்யப்பட்டு விடும்' என்கின்றனர் அதிகாரிகள்.
வறண்டு போகும் வீராணம்

வீராணம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் கிடைக்கும் தண்ணீரும் இந்த வருடம் போதிய அளவு கிடைக்கவில்லை. காவிரித் தண்ணீர் மிகச் சொற்பமான அளவே திறந்து விடப்பட்டதால், வீராணம் ஏரியும் தண்ணீர் இன்றி காட்சியளிக்கிறது. தற்போதைய நிலவரப்படி, 269 மில்லியன் கனஅடி அளவே வீராணம் ஏரியில் தண்ணீர் இருக்கிறது. சென்ற வருடம் இதே காலகட்டத்தில், 482 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. அதனால், கடலூர் முதல் பண்ருட்டி வரை அமைக்கப்பட்டுள்ள ராட்சத போர்வெல்கள் மூலம் கிடைக்கும் தண்ணீரைத் தலைநகருக்குக் கொண்டு வருவதற்கான ஆலோசனைகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. சென்னை குடிநீர் வாரியம் விநியோகிக்கும் தண்ணீர், இப்போதே பல இடங்களில் தினமும் வருவதில்லை என்பதால், பணம் கொடுத்து லாரித் தண்ணீரை வாங்கத் தொடங்கிவிட்டனர்.

 கோடைக் காலம் தொடங்க இன்னும் மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில், தற்போதுள்ள தண்ணீர் இருப்பு அச்சத்தை அதிகப்படுத்துவதாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, அடுத்த ஐந்து மாதங்களுக்கு மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால், தண்ணீர் பஞ்சத்தை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும்.


அபாயத்தை உணர்த்திய ஆய்வு

தலைநகரின் தண்ணீர்த் தேவைக்காக, அண்டை மாவட்டமான திருவள்ளூரிலிருந்து தண்ணீர் பெறப்படுகிறது. அதுவும், விவசாய நிலங்களில், ராட்சத போர்வெல்கள் போடப்பட்டு, அதன்மூலம் கடந்த சில வருடங்களாகவே தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதுநாள் வரை ஆபத்தை உணராமல் இருந்த திருவள்ளூர் மக்கள், நிலத்தடி நீர்மட்டம் ஒரேயடியாகக் குறைந்துவருவது கண்டு அதிர்ந்து போய் இருக்கிறார்கள். இருப்பினும், தண்ணீரை விற்று ருசி கண்ட போர்வெல் உரிமையாளர்களும், லாப வெறி கொண்ட லாரி உரிமையாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு தண்ணீரை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.

 சென்னையில் சராசரியாக 12 அடியாக இருக்கும் நிலத்தடி நீர்மட்டம், திருவள்ளூரில் 16 அடியாகக் குறைந்துவிட்டது என்றால், நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
தமிழகத்தின் தலைநகரத்திலும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் படு வேகமாக சரிந்து கொண்டே செல்கிறது. சென்னை நகரின் பரப்பளவான, 426 சதுர கிலோ மீட்டரில் 145 கண்காணிப்பு கிணறுகளில் குடிநீர் வாரியம் அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி, 2015 டிசம்பரில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் அளவுடன் ஒப்பிடும்போது, கடந்த டிசம்பர் நிலத்தடி நீர்மட்ட அளவு 0.75 மீட்டர் முதல் 2.92 மீட்டர் வரை சரிந்துள்ளது. வடசென்னையில் நிலத்தடி நீர்மட்டம் திகைக்க வைக்கும் வகையில் குறைந்துள்ளது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் 2 மீட்டர் முதல் 2.5 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. இதனால், வடசென்னையைப் பொறுத்தவரை, லாரிகளின் வருகைக்காக குடங்களுடன் மக்கள் திரளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செய்வீர்களா...நீங்கள் செய்வீர்களா?

பஞ்சத்தின் அபாயத்தை உணர்ந்து, ' தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யும்படி' குடிநீர் வாரியம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. ' குழாய் மூலம் விநியோகம் செய்யப்படும் தண்ணீரை குடிநீர் மற்றும் சமையல் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என்கிறார்கள். ஆனால், நம் மக்களுக்கோ இந்த அறிவிப்பின் முக்கியத்துவம் தெரியவில்லை. அடுத்த மழை வரும் வரை, அதாவது ஜூன் மாதம் வரையில், நிலத்தடி நீரின் பயன்பாடு அதிகரிக்கப் போகிறது. நிலத்தடி நீர்மட்டம் ஏற்கெனவே கணிசமாக குறைந்துள்ள நிலையில், மக்கள் போர்வெல் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுப்பது அதிகமானால், நிலத்தடி நீர்மட்டம் மேலும் குறையக்கூடும். மழை இயல்பை விடக் குறைவாகப் பெய்திருக்கிறது என்பது ஒரு புறம் இருக்க, பெய்த மழையைக் கூட சேமித்து வைப்பதன் முக்கியத்துவதை உணராதவர்களாக நாம் இருக்கிறோம்.

 மழைக்காலங்களில், நகர்ப்புற சாலைகளில், கழிவு நீரைப் போல தேங்கி நிற்கும் மழைத் தண்ணீர், நீர் நிலைகளுக்கு சென்று சேர வேண்டிய உயிர் நீர் என்பதை நாம் ஒருபோதும் உணர்ந்ததே இல்லை. இந்தத் தண்ணீர் எப்போது வற்றும், எப்போது இந்த சாலை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்ற எரிச்சலோடுதான் கடந்து செல்கிறோம்.

ஆனால், அந்த எரிச்சலும் கோபமும் மழைத்தண்ணீரை முறையாக சேமிக்கத் தெரியாத நம் மீதும், மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை முறையாக ஏற்படுத்தாத அரசாங்கத்தின் மீதும்தான் வர வேண்டும். மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை வீடுகள்தோறும் செயல்படுத்தி இருந்தால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டே போவதையும் தடுக்கலாம். இது போல சாலைகளில் நீர் தேங்கி நிற்பதையும் தவிர்க்கலாம். மக்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. நமது வீட்டு மரத்தின் கனியை யாராவது பறித்தால், பார்த்துக்கொண்டு பேசாமல் அமைதியாக இருக்கின்றோமா? அதே அக்கரையை வீட்டின் மழை நீர் சேகரிப்பிலும் காட்டியிருந்தால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கும். ஒவ்வொரு வருடமும் குறைவாக மழை பெய்யும் தருணங்களில், கோடைக்கால தண்ணீர்த் தேவையை சமாளிக்க அரசாங்கம் திணறுகிறது.

ஒவ்வொரு ஊரிலும் காலிக் குடங்களுடன் போராட்டம் நடத்தும் மக்களைப் பார்க்க முடிகிறது. தண்ணீருக்காக ஏன் வீதிகளில் இறங்கி போராடுகிறோம் என்பதை மக்களும் உணரவில்லை. அரசாங்கமும் உணரவில்லை. தண்ணீரை நாம் சேமிப்பதும் இல்லை, சிக்கனமாக பயன்படுத்துவதும் இல்லை. டெபிட் கார்டுகளுடன் பணம் எடுப்பதற்காக, ஏ.டி.எம் வாசல்களில் நிற்பது போல, தினந்தோறும் தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை ஏற்படத்தான் போகிறது.
மக்கள் மனங்களில் புரட்சி ஏற்பட்டால் மட்டுமே வறட்சியை வெல்ல முடியும்!
- ஜெனிஃபர் வில்சன்
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024