சென்னையில் எப்படியிருக்கிறது சட்டம்-ஒழுங்கு? : போலீஸின் பலமும்-பலவீனமும்!
சென்னையில் சட்டம்- ஒழுங்கு எப்படியிருக்கிறது என்று யாரையாவது பிடித்து நிறுத்திக் கேட்டால், ''ஏதோ இருக்குதுங்க" என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். சென்னை பாதுகாப்பாகத்தான் இருக்கிறதா என்று கேட்டாலும் இதே பதில்தான் கிடைக்கும். ஜெயலலிதா முதல் மந்திரியாக இருந்தால் சட்டம்-ஒழுங்கு சிறப்பான முறையில் இருக்கும் என்ற பொதுவான இமேஜ், 2011 - 16 - ம் கால கட்ட அ.தி.மு.க ஆட்சி காலத்தின்போதே உடைந்து போனது. அதன்பின்னர் ஜெ. மறைவு, கட்சி - ஆட்சியில் தலைமை மாற்றம் ஏற்பட்டது. இப்போது தங்களின் அன்றாட வாழ்க்கைக்கான பாதுகாப்பை முழுமையாக்கப் போவது யார்? என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
முதல் மந்திரியாக ஓ.பி.எஸ் நீடிப்பாரா அல்லது அந்த இடத்துக்கு வேறொருவர் வரப் போகிறாரா என்ற கேள்வியும் நடுவில் புகுந்து பொதுமக்களை திணறலில் வைத்துள்ளது. இந்தக் குழப்பத்துக்கு இடையே போலீஸார் நிலையோ இன்னும் மோசம்.
டெக்னாலஜி போலீஸ் கமிஷனர்...
2016-ல் சென்னை போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் 3-வது முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வரலாற்றில் 3 முறை கமிஷனர் பதவி வகித்தவர் ஜார்ஜ்தான். சென்னை போலீசாரால், 'டெக்னாலஜி கமிஷனர்' என்று அழைக்கப்படும் ஜார்ஜ், முதல்முறை கமிஷனராகப் பொறுப்பேற்றதுமே, கமிஷனர் அலுவலகத்தில் 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.
கேமராக்கள் அனைத்துமே புயல், மழை என எந்த சீதோஷ்ண நிலையிலும் துல்லியமாக செயல்படும் தன்மை கொண்டவை.
செயற்கைக் கோள் இணைப்புடன் செயல்படும் இந்த கேமராக்களின் பதிவுகளை, போலீஸ் கமிஷனர் தன்னுடைய செல்போனில் எங்கிருந்தும் பார்க்கும்படி கட்டமைக்கப்பட்டிருந்தது.போலீசார் ஷிப்டு முறையில் இந்த கேமரா காட்சிகளைப் பார்த்து நடவடிக்கை எடுக்கும் விதமாக பிரத்யேகமான 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையும் உள்ளது.
என்ன சொல்கிறார் ஜார்ஜ் ?
மூன்றாவது முறையாக சென்னையின் போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்ற ஜார்ஜ் அன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, "சென்னையில் ஏற்கெனவே அமலில் உள்ள 3 வகையான சிறப்புத் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த உள்ளோம்.
ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லையும், 3 செக்டார்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செக்டாரிலும் 3 போலீசார் வீதம் 9 போலீசார் ரோந்து பணியில் இருப்பார்கள்.
இந்த ரோந்துப்பணி 3 'ஷிப்ட்'களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு 'ஷிப்டிலும்' 8 மணி நேரம் வீதம் ரோந்து போலீசார் பணியாற்றுவார்கள். 380 கார்கள் மற்றும் 503 மோட்டார் சைக்கிள் வாகனங்கள் சென்னை போலீஸ் செயல்பாட்டில் உள்ளன. முதியோர் உதவி மையத்துக்காக 1253 என்ற இலவச தொலைபேசி இணைப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. (ஜனவரி 12, 2017 இரவு 12.17-க்கு நாம் இந்த எண்ணை தொடர்புகொண்ட போது, "என்ன உதவி வேண்டும்?" என்று தூக்கக் கலக்கம் இல்லாத பெண் காவலர் குரல் கம்பீரமாகக் கேட்டது) இந்த இலவச தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினால் போலீசார் தேவையான உதவிகளை தேடி வந்து செய்வார்கள். வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரர்களின் விவரங்களை புகைப்படத்துடன் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் தாமாக முன்வந்து பதிவுசெய்ய வேண்டும். இது வீட்டு உரிமையாளர்களுக்கும் நல்லது.
வெளிமாநிலங்களிலிருந்து சென்னைக்கு வேலை தேடி தினமும் ஆட்கள் வருகிறார்கள். இவர்களுக்கு வேலை கொடுப்பவர்கள் இவர்களின் பெயர் விவரம் மற்றும் முகவரி, புகைப்படம் போன்றவற்றை சேகரித்து வைத்திருக்க வேண்டும். முதியோர் பாதுகாப்பு, ஒவ்வொரு 'ஷிப்டிலும்' 8 மணி நேர ரோந்து, வாடகைதாரர்கள் மற்றும் வெளி மாநில கூலித் தொழிலாளிகளின் பெயர் விவரங்களை போலீசாருக்கு அளித்தல் ஆகிய நடைமுறையில் உள்ள மூன்று திட்டங்களும் மேலும் வலுவாகக் கொண்டு செல்லப்படும்." என்றார்.
திணறும் போலீசார், பின்னணி இதுதான்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த எஸ்.ஜார்ஜ், எம்.ஈ., எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.பில் பட்டங்களைப் பெற்றவர். 1984-ம் ஆண்டு பேட்ஜ் (வரிசைப்பிரிவு) ஐ.பி.எஸ். அதிகாரி. 'அட்வான்ஸ்டு கமிஷனர்' என்ற பெயரை போலீசாரிடம் ஜார்ஜ் பொதுவாகப் பெற்றிருந்தாலும் பொதுமக்களிடமும், கீழ் பணியாற்றும் போலீசாரிடமும் அது முழுதாக எடுபடவில்லை. காரணம்.... அனைவரிடமும் ஜார்ஜ் கடைப்பிடிக்கும் இடைவெளிதான்.
ரெவ்யூ மீட்டிங்கே இல்லை...
மாதாந்திர க்ரைம் ரிவ்யூ மீட்டிங் என்பது போலீசில் கட்டாயமான ஒன்று. ஆனால், தற்போதைய நிலையில், 'அப்படி ஒரு மீட்டிங் காவல் துறையில் இருக்கிறதா?' என்றுதான் இப்போது புதிதாகப் பணிக்கு வந்த போலீசார் கேட்கிறார்கள். அந்த அளவுக்கு ஆண்டுக் கணக்கில் க்ரைம் ரிவ்யூ மீட்டிங் என்பதே நடக்காமல் இருக்கிறது.
ராதாகிருஷ்ணனின் 3 மணிநேர மீட்டிங்...
சென்னை போலீஸ் கமிஷனராக ராதாகிருஷ்ணன் இருந்தபோது, மாதம் தவறாமல் இப்படிப்பட்ட ரிவ்யூ மீட்டிங் நடந்தே தீரும். அந்த மீட்டிங்கில், கமிஷனருக்கு அடுத்த கீழ்நிலை அதிகாரிகளான கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள் கண்டிப்பாக ஆஜராகியே தீரவேண்டும்.
ரிவ்யூ மீட்டிங் பலன் என்ன ?
நிலுவையில் உள்ள எஃப்.ஐ.ஆர்., பொதுமக்களின் புகார் மீதான நடவடிக்கை பட்டியல், க்ரைம் ரேட் விகிதாச்சாரம், ஆர்.டி.ஐ கேள்வி - பதில்கள், முடிக்கப் பட்ட வழக்குகள், நிலுவை வழக்குகள், ரவுடிகளின் பட்டியல் சரிபார்ப்பு, போலீசார் நலன், காவலர் குடியிருப்பு இடமாற்ற மனுக்கள்... இப்படி பல விஷயங்கள் அங்கே விவாதிக்கப்படும்.
முடிக்காத வழக்குகளின் பின்னணி என்ன... வழக்கில் என்ன சிக்கல், யார் தலையீடு போன்றவைகளை போலீஸ் கமிஷனர் சம்பந்தப்பட்ட உதவி கமிஷனரிடம் நேரடியாகவே அந்த மீட்டிங்கில் கேட்பதும், அதற்கு உதவி கமிஷனர் பதில் அளிப்பதும் சாதாரணமான ஒரு நிகழ்வு.
பல நேரங்களில் குறிப்பிட்ட வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டரையே கமிஷனர் கூப்பிட்டு, 'வழக்கின் தன்மையைச் சொல்லுங்கள்' என்று கேட்பார்.
'அந்த வழக்கில் இப்படிச் செய்வதில் சிக்கல் என்றால் இந்த மாதிரிச் செய்யுங்கள்' என்று கமிஷனரே இன்ஸ்பெக்டர் லெவலில் உள்ள கீழ்நிலை அதிகாரிக்கு ஆலோசனை சொல்லும் காட்சிகளும் அங்கே அரங்கேறும்.
போலீஸ் கமிஷனரே நம்மிடம் பேசி ஆலோசனையும் வழங்குகிறாரே என்ற உற்சாகத்தில் காக்கிகள் இன்னும் விறைப்பாய் பணியில் கவனம் செலுத்துவார்கள்.
கமிஷனரின் அதிரடியான கேள்விக்கு பதில் சொல்ல தயாராக இருக்க வேண்டுமே என்பதற்காகவே ரிவ்யூ மீட்டிங்கில் கலந்துகொள்ள உதவி கமிஷனர்கள் போகும்போது, தங்கள் லிமிட் இன்ஸ்பெக்டரையும் அங்கே வரச் சொல்லிவிடுவார்கள். இன்ஸ்பெக்டர்களும் மீட்டிங் ஹால் வெளியே காத்திருப்பார்கள்.
கமிஷனரின் கேள்வியைப் பொறுத்து இன்ஸ்பெக்டர்கள் உள்ளே போய் விளக்கம் கொடுக்க வேண்டிய சூழலும் அங்கே இருக்கும். அப்படிப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ரிவ்யூ மீட்டிங் என்பதே தற்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது. சிட்டி போலீஸ் கமிஷனர் - போலீசார் இடையே நெருக்கமான உறவை வளர்த்தெடுத்தது இந்த ரிவ்யூ மீட்டிங்குகள்தான்.
அப்படிப்பட்ட மீட்டிங்குகள் இதுவரையில் நடத்தாமலே இருப்பதுதான் தகவல் பரிமாற்றக் கப்பலில் விழுந்திருக்கும் மிகப் பெரிய ஓட்டை. அந்த ஓட்டையின் வழியாகத்தான் பொதுமக்களின் நிம்மதியைக் கெடுக்கும் குற்றங்கள் நுழைந்து விடுகின்றன.
சென்னை போலீசாரின் பலம் தெரியுமா?
சென்னையில் சட்டம் -ஒழுங்கைக் காப்பாற்ற 134 சட்டம் -ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. 128 குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன. மொத்தம் 262 இன்ஸ்பெக்டர்கள் இந்தக் காவல் நிலையங்களை வழிநடத்துகின்றனர்.
பெண்கள் தொடர்பான புகார்களைப் பெற 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் சென்னையில் இயங்குகின்றன. 35 பெண் இன்ஸ்பெக்டர்கள் பணியில் உள்ளனர்.
போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவுக்கு 80 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவின் 10 பிரிவுக்கும் தலா ஒரு உதவி கமிஷனர் ஒவ்வொரு பிரிவுக்கும் 3 முதல் 6 வரையிலான இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றுகின்றனர்.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு நான்கு மண்டலங்களில் நான்கு கூடுதல் துணை கமிஷனர்கள் ஒரு மண்டலத்துக்கு தலா ஐந்து இன்ஸ்பெக்டர்கள், பத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியாற்றுகின்றனர்.
சென்னையின் சட்டம்- ஒழுங்கைக் காப்பாற்ற 5கூடுதல் கமிஷனர்கள், 12 துணை கமிஷனர்கள், 40 உதவி கமிஷனர்கள், தலைமையக, ஆயுதப்படை கமிஷனர், உளவுப்பிரிவு, க்ரைம், மத்தியக் குற்றப்பிரிவு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகவும் சில பிரிவுகளில் கூடுதலாகவும் துணை கமிஷனர்கள் பணியில் இருக்கிறார்கள்.
ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு உளவுப் போலீஸ், 'லெவல்-டூ' எனப்படும் கூடுதல் கமிஷனரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வரும் மண்டல உளவுப் போலீசார் ஆகியோரும் தனியாக சுற்றிச்சுழல்கின்றனர்.
காவல் துறையில் உள்ள இத்தனை அதிகாரிகளும் சொல்வதை அப்படியே ஏற்று கடமையாற்ற சென்னையில் (ஆயுதப்படை- குதிரைப்படை சேர்த்து) 21, 500 போலீசார் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள்
.
என்னதான் முடிவு, சொல்லுங்கள் கமிஷனரே?
இத்தனை வசதிகள் இருந்தும் சட்டம் - ஒழுங்கில் 100 சதவிகித சாதனை இலக்கை எட்ட முடியாமல் திண்டாடுகிறது காவல்துறை. திட்டமிட்டு நடைபெறும் ஆதாயப் படுகொலைகளின் எண்ணிக்கை வருடம்தோறும் கூடிக் கொண்டே போகிறது.
தொடர் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 'உலகளாவிய புகழ்பெற்ற தமிழ்நாட்டுப் போலீசாரின் புலனாய்வுத் திறமைக்கு இப்படியான தொய்வுநிலை சிலகாலம் இருந்தது' என்றுகூட வரலாற்றில் வந்து விடக்கூடாது.
விரைந்து ஒரு முடிவெடுங்கள் மிஸ்டர் ஜார்ஜ்!
- ந.பா.சேதுராமன்
Dailyhunt
No comments:
Post a Comment