Saturday, January 14, 2017


காலையில் சிக்கனம் பிடிக்க வேண்டியது நேரத்திலா... வேலையிலா...


வழக்கமாக, காலையில் மொபைலில் அலாரம் அடித்ததும் எடுத்து அணைத்துவிட்டு தூங்கிவிடுபவர்கள்தான் அதிகம். என்றாவது ஒருநாள் கண் விழித்துப் பார்த்தால் ஒரு மணிநேரம் முன்பே எழுந்திருப்போம். உடனே, இனிமேல் தினமும், முன்கூட்டியே எழுந்துவிட வேண்டும் எனும் சபதம் எல்லாம் எடுப்போம். சரி... ரொம்பவே சீக்கிரம் எழுந்தாச்சு. எல்லா வேலைகளையும் மெதுவாக, நிதானமாக செய்யலாம் என மனதுக்குள் ஒரு குரல் கேட்கும்.

அது சாத்தானின் குரல். உடனே அதை 'அப்பாலே போ' எனத் துரத்தி விட வேண்டும். இல்லையெனில் நீங்கள் சீக்கிரம் எழுந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.

சீக்கிரமே எழுந்து விட்டதால், நியூஸ் பேப்பர் படிப்பது தொடங்கி, அலுவலகத்திற்கு புறப்படுவது வரை எல்லாவற்றிலும் சோம்பல் படர்ந்து விடும். எந்தெந்த விஷயங்களை சோம்பல் அமர்ந்து, உங்களின் நேரத்தை தின்னும், அதை எப்படி சரி செய்யலாம் எனப் பார்ப்போமா?

பல் துலக்குவதில் எத்தனை விதமான டெக்னிக்ஸ் இருக்கு என ட்ரை பண்ணுவோம். அப்படியே வாட்ஸ்அப்பில் என்னதான் வந்திருக்கு எனப் பார்க்க ஆரம்பிப்போம். வழக்கமான நாள் என்றால் GM, GD MG என விதவிதமான (!) குட் மார்னிங் மெசேஜ்களைக் கண்டுகொள்ளாமல் கடந்துவிடுவோம். ஆனால் இன்றுதான் சீக்கிரமே எழுந்தாச்சே என ஒவ்வொன்றாக பார்த்து, சிலருக்கு பதிலும் அனுப்புவோம். அவரும் பதிலுக்கு ஏதேனும் அனுப்பினால், மாற்றி மாற்றி மெசேஜ் அனுப்ப... நிமிடங்கள் கரைந்துவிடும். அதனால், முக்கியமான மெசேஜ்களுக்கு மட்டும் பதில் அளிப்பதையே தொடருங்கள்.

பிறகு, நியூஸ் பேப்பர். வழக்கமாக தலைப்புச் செய்திகளிலேயே அவசரம் காட்டும் நாம், 'என்னது... இன்னைக்கு பேப்பர் 16 பக்கங்கள்தானா?' எனக் கேட்கும் அளவுக்கு வரி விளம்பரம் வரை படிப்போம். தேவையான, ஆர்வமான செய்திகளை மட்டுமே படித்தாலே நேரம் மிச்சமாகும்.

அடுத்தது, சமையல். வழக்கமான நாள் என்றால் வெங்காயமும் தக்காளியும் 'இன்றைக்காவது எங்களை விட்டுவிடேன்' எனக் கெஞ்சும். இன்றோ சீக்கிரம் எழுந்த மமதையில் ஃப்ரிட்ஜில் இரண்டு முட்டைகள் இருக்கே! அதை வைத்து வித்தியாசமாக ஏதாவது செய்யலாமா இல்லை, காலி ஃப்ளவர் பக்கோடா போட்டுப் பார்க்கலாமா... என ஆசைகள் எழும். அதில் ஒன்றை முயற்சி செய்தாலும் அரை மணிக்கும் மேலே நேரம் போயே போச்சு. அதனால், தினந்தோறும் செய்யும் சமையலில், நேரம் அதிகம் எடுத்துக்கொள்ளாத சின்னதாக ஏதேனும் ஸ்பெஷல் மட்டுமே போதும்.


நெக்ஸ்ட். குளியல். இன்னைக்குத்தான் நேரமிருக்கே என நமக்குள் இருக்கும் பாத்ரூம் சிங்கரை அழைத்துவிடுவோம். அவரும் சுவாரஸ்யமாக பாடிக்கொண்டே இருக்க, நீரோடு நேரமும் வழிந்தோடி விடும். அதனால் சிங்கருக்கு ஒரு பாட்டுக்கு மட்டுமே அனுமதி கொடுங்கள் போதும்.

அதிகாலையில் எழுந்தால் மனம் சந்தோஷமாக இருப்பதுபோல, குழந்தைகள் மீது அன்பும் அதிகமாகி விடும். அதனால் அவர்களோடு விளையாட ஆரம்பித்து, ஜாலியாக நேரம் நீண்டுக்கொண்டே போனால், குழந்தைகள் குளிப்பதற்கு முன்பே, வாசலில் ஸ்கூல் வேன் ஹாரன் கேட்கும். அன்புக்கு சின்னதாக அலாரம் வைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு, துணிகளை அயர்ன் செய்யும்போது, நேரமிருக்கே என இன்னும் சில துணிகளைச் சேர்த்து அயர்ன் செய்வது, மேக்கப்-ல் இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்வது என ஒவ்வொன்றும் பத்து நிமிடங்களை எடுத்துக்கொள்ள, தினமும் பிடிக்கும் 8:50 பேருந்தைப் பிடிக்க முடியாமல் போய்விடும்.

எனவே, இன்றைக்கு ஒரு மணிநேரம் முன்கூட்டியே எழுந்திருக்கிறோம். அதனால் வழக்கமான வேலைகளை நிதானமாக செய்யத் திட்டமிட்டாலே பதட்டமில்லாத காலை பொழுது வாய்க்கும்.
- புதியவள்
Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024