சென்னை : முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம், அ.தி.மு.க.,வின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு, இவ்வளவு பணிவு காட்ட வேண்டியதில்லை. என்னதான், அவர் பணிவு காட்டியே வளர்ந்தவர் என்றாலும், அவர் வகிக்கும் பதவி முதல்வர் பதவி. அவர், சசிகலாவின் காலில் விழுவது, ஒட்டுமொத்த தமிழகமே, சசிகலாவின் காலில் விழுவதற்கு சமமானது. எனவே, அதை உணர்ந்து பன்னீர்செல்வம் நடந்து கொள்ள வேண்டும் என, அவருக்கு நெருக்கமானவர்கள் பலரும் தொடர்ந்து அவரிடம் வலியுறுத்தி வருகின்றனர். அதை வலியுறுத்தி, பொதுமக்கள் பலரும், பன்னீர்செல்வத்துக்கு கடிதங்கள் எழுதி உள்ளதாகவும் கூறப்படுகிறது.இதையெல்லாம் நன்கு அறிந்து கொண்ட பின்னரும், பன்னீர்செல்வம், சசிகலாவிடம் பணிவு காட்டுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.
இந்த சூழலில், சமீபத்தில், பன்னீர்செல்வத்தை சந்தித்த தமிழக மூத்த அமைச்சர்கள் சிலர், நீங்கள் தமிழத்தின் முதல்வராக இருக்கிறீர்கள்; உங்கள் பணிவு எல்லோரும் அறிந்ததுதான். அதற்காக, நீங்கள் யார் காலிலும் விழ வேண்டியதில்லை என, சொல்லியிருக்கின்றனர்.அப்போது, அவர்களுக்கு விளக்கம் அளித்திருக்கிறார் பன்னீர்செல்வம். அந்த விளக்கம் வித்தியாசமாக இருக்க, அதனால்தான், அவர் அந்த இடத்தில் உட்கார்ந்திருக்கிறார் என கூறியபடியே, திரும்பியுள்ளனர் அந்த அமைச்சர்கள்.இது குறித்து, மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமான அ.தி.மு.க., பிரமுகர்கள் கூறியதாவது:நான் விருப்பப்பட்டு, எந்த பதவியிலும் அமர்ந்து கொள்ளவில்லை. முதல்வர் பதவி என்பது, என்னுடைய விசுவாசத்துக்குப் பரிசாக, மறைந்த ஜெயலலிதா அளித்தது.
அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது, நெருக்கடியான கால கட்டத்தில் மூன்றாவது முறையாக முதல்வராக்கப்பட்டுள்ளேன்.ஏற்கனவே முதல்வராக பொறுப்பேற்ற இரண்டு முறையும், என்னை விட எல்லா திறமையும்; அனுபவமும் பெற்ற மறைந்த ஜெயலலிதா, அமைச்சரவையில் இல்லாமல் விலகி இருக்க, சட்டரீதியில் நேரிட்டது. அந்த சமயத்தில், நான் தன்னிச்சையாக செயல்பட்டால், அதை அவரே கூட விரும்பாமல் போகலாம். அப்படி செயல்படும் போது ஏற்படும் நெருக்கடியைத் தவிர்ப்பது சிரமம். அவருக்கு இருக்கும் திறமைக்கு, அவர் கொடுத்த பதவியை வைத்து சவால் விடுவது போல ஆகிவிடும்.
அப்படியொரு சூழலை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. அதனால்தான், தமிழக நலன்கள் குறித்து, நான் அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அமைதியாகவே இருந்தேன். ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை.
நான் யாருக்கும் பாத்தியப்பட்டவன் இல்லை. அதனால்தான், தன்னிச்சையாக செயல்படுகிறேன்.நான் இப்படி செயல்படுவது கூட, சிலருக்குப் பிடிப்பதில்லை. என்னை, பல வழிகளிலும் செயல்படவிடக்கூடாது என முயற்சிக்கின்றனர். அதற்காக, நான் கவலைப்படுவது கிடையாது.
இப்போது கூட, என்னை தொடர்ச்சியாக முதல்வராக செயல்பட அனுமதிக்க மாட்டார்கள் என்பதுதான், கிடைத்திருக்கும் செய்தி.இந்த சூழ்நிலையில், முதல்வராக இருக்கும் நானே, அவர்களுடைய காலுக்கு கீழே என வெளியுலகிற்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே, என்னை குனிந்து வணக்கம் போடச் சொன்னவர்கள்; பின், காலில் விழச் சொன்னார்கள். விழுந்தால் பிரச்னையில்லை என்பதை உணர்ந்தேன்; விழுந்தேன்.இதனால், என் கவுரவம் குறைந்து போவதாக நான் உணரவில்லை. காலில் விழ அனுமதிப்பவர்களுக்கு எதிராகத்தான், இது செல்லும் என்பதை அறிந்துதான் அதை செய்தேன். தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஒருவர், இன்னோருவர் காலில் விழும்போது, மக்களின் வெறுப்பு முதல்வர் மீது செல்லாது; பரிதாபம்தான் ஏற்படும்.
கோபம்; வெறுப்பு எல்லாம், காலில் விழச் செய்கிறவர் மீதுதான் திரும்பும். இதையறிந்துதான், விரும்பியதை செய்து வருகிறேன். இதெல்லாம் நடக்க நடக்க, காலில் விழும்போது அதை தடுக்காததோடு, அதை விரும்பி ஏற்பவருக்கு எதிராக மக்கள் மனநிலை திரும்பும் என்பதுதான் கணக்கு.மக்கள், அவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருப்பதற்கு, இதெல்லாம் கூட ஒரு காரணம் என சொல்லி, மூத்த அமைச்சர்களிடம், சசிகலா காலில் விழுவதற்கு, காரணம் சொல்லியிருக்கிறார் பன்னீர்செல்வம். இதை கேட்ட அமைச்சர்கள், அதிர்ச்சியில் உறைந்து போய், பின் திரும்பி உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Dailyhunt
No comments:
Post a Comment