மாசில்லாத போகியைப் போல காசில்லாத பொங்கலா? களைகட்டாத பண்டிகை
By DIN | Published on : 13th January 2017 12:23 PM
சென்னை: மாசில்லாத போகிப் பண்டிகையைக் கொண்டாட வலியுறுத்தி வந்த நிலையில், காசில்லாத பொங்கல் பண்டிகையைக் கொண்டாடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
போதிய மழையின்மை, வறட்சி, விவசாயிகளின் மரணங்கள் மற்றும் ஜல்லிக்கட்டுக்குத் தடை போன்ற காரணங்கள், பொங்கல் பண்டிகையை தித்திக்க விடாமல் செய்து விட்டன.
எப்போதும் போல பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்வோர் பேருந்துகளிலும், ரயில்களிலும் இடம் பிடித்தாலும், ஏதோ ஒரு குறை, அவர்களது மனங்களில் உற்சாகம் இடம் பிடிக்காமல்செய்து விட்டது.
ஊருக்கே படியளக்கும் விவசாயிகள் நாளைய பொங்கலை எவ்வாறு கொண்டாடுவது என்று கலங்கி உள்ளனர். வறட்சி கோரத் தாண்டவமாடும் விவசாயிகள், பொங்கல் கொண்டாடும் சூழலே இந்த ஆண்டு இல்லை என்று மனம் வெதும்பியுள்ளனர்.
நகரப் பகுதிகளில் ஒரு சில ஆண்டுகளாகவே, பொங்கல் பண்டிகை அதற்குண்டான களையை இழந்து, தொலைக்காட்சி முன்பு தொலைந்து கொண்டே போகிறது. அதையும் தாண்டி, போதிய மழையும் இல்லாமல் வறட்சி காரணமாக இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை களை கட்டவில்லை என்றே தோன்றுகிறது.
கடந்த ஆண்டுகளில் இருந்ததை விடவும், இந்த ஆண்டு கரும்பு விற்பனை சரிந்திருப்பதாகவே வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். போகிப் பண்டிகை வரை மிகக் குறைவான கரும்புகளே விற்பனையாகியிருப்பதாக மொத்த வியாபாரிகள் கூறியுள்ளனர்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், மக்கள் கையில் பண நடமாட்டம் குறைந்ததும், இந்த பொங்கல் பண்டிகை களைகட்டாமல் போகக் காரணமாக இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகிறது.
No comments:
Post a Comment