Thursday, February 23, 2017


தினசரி வருமானம் 2,500 ரூபாய்...வறட்சி பூமியில் வளமான விவசாயம்!



தர்மபுரி மாவட்டம், வறட்சியான மாவட்டங்களுள் இதுவும் ஒன்று. ஆனால் அந்த மாவட்டத்திலும் தற்போது பரவலாக விவசாயம் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள சோமனஅள்ளி கிராமத்திற்கு சென்றிருந்தபோது இங்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மாதுளை கிடைக்கும் என விளம்பரப்பலகை வைக்கப்பட்டு இருந்தது. பண்ணைக்கு உள்ளே சென்று இயற்கை விவசாயி நீலகண்டனை சந்தித்தோம். மாதுளை பறித்துக் கொண்டிருந்தவர் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் முகமலர்ச்சியுடன் பேச ஆரம்பித்தார்.



"எனக்கு சொந்த ஊர் இந்த சோமனவள்ளி கிராமம்தான். விவசாயம் செய்து பொருட்களை மக்களுக்கு குறைவான விலையில்தான் விற்பனை செய்கிறோம். மக்களுடைய ஆரோக்கியத்திற்கு பயனுள்ள வகையில் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இயற்கை முறையில் மாதுளை சாகுபடி செய்ய முடிவு செய்தேன். பகுவா ரக ஒரு மாத வளர்ப்பு செடிகளை, ஒரு செடி 35 ரூபாய்க்கு விலைக்கு வாங்கினோம். இரண்டு ஏக்கர் நிலத்தில், மொத்தமாக 750 செடிகளை நடவு செய்தேன். எனது உறவினர் ஒருவர் திருச்செங்கோட்டில் இயற்கை முறையில் மாதுளை தோட்டத்தை அமைத்து நல்ல முறையில் லாபம் ஈட்டி வருகிறார். அவரை பார்த்து தான் எனக்கு அதே போல மாதுளை தோட்டம் அமைக்க வேண்டும் என்ற ஆவல் வந்தது என்றவர், நடவு முறைகளை பற்றி பகிர்ந்து கொண்டார்.

"செடிகளை நடுவதற்கு முன்பு இரண்டுக்கு இரண்டு அடி என்ற அளவில் குழி எடுக்கவேண்டும். ஒவ்வொரு செடிக்கும் 10 அடி இடைவெளியில் செடி நடவு செய்து அதன் பிறகு மாட்டு சாணம், வேப்பம் புண்ணாக்குடன் செடிகளை நட்டேன். 25 ஆயிரம் ரூபாய் தண்ணீர்க்குழாய்களை வாங்க செலவு செய்தேன். குழாய்களின் மூலம் செடிகளுக்கு இணைப்பு கொடுத்து சொட்டு நீர் பாசனம் அமைத்தேன். அதன்படி ஒரு நாளைக்கு 1/2 மணி நேர வீதம் ஒரு செடிக்கு 8 லிட்டர் தண்ணீர் பாய்ச்சினேன். முதலில் செடி காய்ப்பிற்கு வரும் வரை 1/2 மணி நேரமும் அதன் பிறகு செடி நன்கு வளர்ந்த பிறகு 1/4 மணி நேரமும் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. பஞ்ச காவ்யத்தை வாங்கி செடிகளுக்கு தெளித்தேன். பஞ்சகவ்யாவை நாமே தயாரித்தால் செலவினம் குறைவாக இருக்கும்.




ஒரு நாளைக்கு 1/4 மணி நேரம் மட்டும் நீர் பாய்ச்சினால் காய்ப்பு சரியாக வரவில்லை என்றால் அரை மணி நேரம் அல்லது முக்கால் மணிநேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். காய்ப்பு அதிகமாக இருந்தால், குறைவான தண்ணீரே போதுமானது. தண்ணீர் அதிகமாக பாய்ச்சினால் மரங்களில் அதிகமாக இலை பிடிக்கும், அதனால் அதிகமாக வரும் இலைகளையும், பக்க கிளைகளையும் கவாத்து செய்து விடுவேன். மாதுளையை பொறுத்த வரையிலும் பட்டம், காலநேரம் பார்க்கத் தேவையில்லை. இதனால் காய்ப்புக்கு வருவதில் சிக்கல் இருக்காது, எப்போதும் மகசூலை கொடுக்கக் கூடியது. 2015-ல் மாதுளை செடி வைத்தேன். மாதுளையில் ரெட் ரூபி, காபூல் என்று ரகம் பிரபலம். பகுவா ரக மாதுளையை காய்ப்புக்கு வரும் 15 வது மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் செடிகளை பராமரிக்க, களை எடுப்பது மற்றும் கவாத்து கூடுதல் செலவுகளை ஏற்படுத்தும். மாதுளைக்கு சொட்டு நீர் பாசனம்தான் சிறந்தது. மழை பெய்யும் காலங்களில் பத்து நாளைக்கு தண்ணீர் விட வேண்டிய தேவை இல்லை" என்றவர், வருமானம் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

"தோட்டம் முழுமையாக அமைக்க குறைந்தபட்சம் ஐந்துலட்சம் வரை செலவாகும். கால்நடைகளால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க தோட்டத்தை சுற்றிலும் வேலி அமைத்து இருக்கிறேன். கிளிகள், அணில், முயல் போன்றவை மட்டும் தோட்டத்திற்குள் வந்து விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் உரமாக அமைவதால் அதற்கு நாங்கள் எந்த தொந்தரவும் தருவதில்லை. தோட்டத்திற்கு நடுவே ஒரு சிறிய கண்காணிப்பு கோபுரம் அமைத்து இருக்கிறேன். அதில் ஏறி பார்த்தால் தோட்டத்தை எளிதாக கண்காணிக்கலாம். இரவு நேரங்களில் அந்த கோபுரத்திலே படுத்து கொள்வேன். எனது மனைவி கார்த்திகாவும் விவசாயத்தில் எனக்கு துணையாக இருக்கிறார். டிசம்பர் 15 முதல் பிப்ரவரி 15 வரை இரண்டு மாதங்களில் ஒரு நாளைக்கு நூறு கிலோ வரைகூட அறுவடை செய்யலாம். ஒரு கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். நான் யாருக்கும் வெளியே கொண்டு போய் விற்பதில்லை. பழங்கள் தேவைப்படும் பொதுமக்களும் வியாபாரிகளும் தோட்டத்திற்கு நேரடியாக வந்து வாங்கி கொள்கிறார்கள். தினசரி வருமானமாக 20 முதல் 25 கிலோ வரை மகசூல் கிடைக்கிறது. இதன் மூலம் கிலோ 100 ரூபாய் என வைத்துக்கொண்டால், தினமும் எனக்கு 2,500 ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. மாதுளைச்செடி பத்து முதல் 12 வருடங்களுக்கு மகசூல் தரும். நாம் செடிகளை பராமரிப்பதை பொறுத்துதான் விளைச்சலும் இருக்கும், அதனால் மாதுளையில் வருமானத்தை பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை" என்றபடி விடைகொடுத்தார்.

- அ.பா.சரவண குமார்,

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024