Monday, February 6, 2017

சசிகலாவுக்கு, டி.ராஜேந்தர் சரமாரி கேள்வி!


தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு, லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, 75 நாள் சிகிச்சைக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். அன்று இரவே முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். புதிய அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

பின்னர், நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.

இதனிடையே, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, அ.தி.மு.க சட்டப்பேரவை தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், முதல்வராக சசிகலா பதவியேற்பது உறுதியானது. இதையடுத்து, முதல்வர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தார். இதன் கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைத்தார். அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக ஆளுநர் இன்று அறிவித்தார். சசிகலா முதல்வராக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய லட்சிய தி.மு.க தலைவர் டி.ராஜேந்தர், அவசர அவசரமாக சசிகலா முதல்வராவதற்கான அவசியம் என்ன என கேள்வி எழுப்பினார்.

சசிகலா மீது சிலர் வெறுப்பு கொள்ளும் நிலை இருக்கிறது என்றும், ஜனநாயகத்திற்கு விரோதமாக சசிகலா முதல்வராவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கூறினார்.

மேலும், சசிகலா முதல்வராவதை ஜெயலலிதாவின் ஆன்மாகூட ஏற்காது என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

படம்: ஜெரோம்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024