புதிய மந்திரிகள் யார்..? புதிய முதல்வருக்கு ஆலோசகர் யார்..? #ADMKUpdates #VikatanExclusive
சாமி வரம் தந்தும் பூசாரி தடுத்து நிற்பதுபோல், எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கடிதங்களை வாங்கிவைத்துக்கொண்டு வீட்டின் வாயிற்படியில் கவர்னர் வருகைக்காக காத்திருக்கிறது சசிகலா தரப்பு. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் பரபரப்பு சம்பவங்கள் என்னவாகயிருக்கும் என அலசுகிறது இந்த கட்டுரை...
தமிழகத்தில் கவர்னர் ஆட்சி?
தமிழக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஓ.பன்னீர்செல்வம் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்வதாக தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்துள்ளார். மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை அரசு நிர்வாகத்தை ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை கவனிக்கும் என்றும் கவர்னர் கூறியுள்ளார். ஆக, தமிழகத்தில் தற்போது எழுதப்படாத கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்து விட்டதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். அதன்படி, தற்போதுள்ள 'காபந்து' அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் வெறும் பொம்மைகள்தான். ஆட்சி லகான் கவர்னரின் கைக்குப் போய்விட்டது. இதையடுத்து, தலைமைச் செயலகத்தில் அரசின் எந்தவொரு உத்தரவானாலும் கவர்னரின் ஒப்புதலுடன்தான் வெளியாகும். இந்த நிலையில், கவர்னர் தற்போது விடுமுறையில் டெல்லி சென்றிருக்கிறார்.
கவர்னர் சென்னை திரும்பியதும் முடிவு!
தமிழகத்தின் அரசியல் நிலவரங்கள் சூடுபிடிக்கத் துவங்கியிருக்கும் நிலையில், அதுதொடர்பான தகவல்கள் கவர்னருக்கு கொண்டு செல்லப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இருப்பினும், எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாமல் தனது பயணத்தில் இருக்கிறார் கவர்னர். முதல்வர் பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட அவர், அடுத்தக்கட்டத்துக்குத் தயாராகி விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், நேற்று டெல்லியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கவர்னர், சென்னை திரும்பாமல் நேராக மும்பைக்கு விமானம் ஏறினார். நேற்று அவர் விடுமுறையில் இருந்ததாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏர்போர்ட் வட்டாரத்தில் விசாரித்தபோது, 'இன்றும் கவர்னர் சென்னை வருவதற்கான எந்த முஸ்தீபுகளும் இல்லை' என்கின்றனர். மேலும், கவர்னர் எப்போது சென்னை திரும்புவார் என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. அவர் சென்னை திரும்புவதைப் பொறுத்துதான், சசிகலா முதல்வராக பதவி ஏற்கும் வைபவம் நடக்கும் எனத் தெரிகிறது.
சென்னையில் முகாமிட்டுள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள்!
இந்த பரபரப்புக்கு இடையே அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் 135 பேரும் தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளனர். அவர்களை வெளியில் எங்கும் செல்ல வேண்டாம் என்று கட்சியின் தலைமைக்கழகத்தில் இருந்து உத்தரவு வரப்பெற்றுள்ளது. அதனால், சென்னையில் உள்ள எம்.எல்.ஏ-க்கள் விடுதி அறைகளில் அவர்கள் அனைவரும் தங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில், நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அ.தி.மு.க எம்.பி-க்கள் டெல்லிக்குக் கிளம்பினர். ஆனால், அவர்கள் அனைவரும் சென்னையில் தங்கியிருக்குமாறு உத்தரவிடப்பட்டது. டெல்லி செல்வதற்காக டிக்கெட் எடுத்து வி.ஐ.பி. லாஞ்சில் காத்திருந்த அன்வர் ராஜா உள்ளிட்ட எம்.பி-க்கள் உடனடியாக தங்களது டிக்கெட்டுகளை கேன்சல் செய்துவிட்டு திரும்பினர்.
சென்னையில் காக்கவைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் வட்டாரத்தில், “அம்மா போலவே சின்னம்மாவின் குணமும் உள்ளது. எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் ஒவ்வொருத்தர்கிட்டயும் எந்த கஷ்டமானாலும் எங்கிட்ட சொல்லுங்க....வீட்டுப் பிரச்னையோட கட்சிவேலை பார்க்காதீங்க... உங்க பிரச்னை இனி என் பிரச்னை அதையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்” என 'ஆதரவாக' சசிகலா சொன்னதை 'உற்சாக' குரலில் சிலாகித்து பேசிக்கொள்கிறார்கள்.
புது மந்திரிகள் யார்..யார்?
தமிழக முதல்வராக சசிகலா பதவி ஏற்றால், அமைச்சரவை மாற்றப்படுமென தெரிகிறது. நேற்றிரவு எம்.எல்.ஏ-க்களுடனான சந்திப்பின்போது, சசிகலா இதுதொடர்பாக சில விஷயங்களை பூடகமாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதாவது 'அமைச்சரவையில் பெரிய மாற்றம் இருக்காது. சிற்சில மாற்றங்கள் இருக்கும்' என்ற அவர், 'சபாநாயகர் தனபால் உள்ளிட்ட இருவருக்கு அமைச்சரவையில் புதிதாக வாய்ப்பு அளிக்கப்படும்' என தெரிவித்தாராம். சசிகலாவின் இந்த அறிவிப்புக்குப் பின்னர், புதிய அமைச்சர் யார் என்பதே அ.தி.மு.க. தலைமைக்கழக வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது. விசாரித்ததில், ஜெயலலிதா அனுதாபியாக இருந்து, சசிகலா பொதுச் செயலாளரானபோது பிரச்னை கிளப்புவார் என எதிர்பார்க்கப்பட்டு, ஆனால் அப்படி எதுவும் சிக்கல் ஏற்படுத்தாத ஒருவருக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே, சசிகலா தலைமையில் புதிதாக அமையப்போகும் அமைச்சரவையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். அதன்படி முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், சட்டமன்ற சபாநாயகராக்கவும், சபாநாயகர் தனபாலை அமைச்சராக்கவும் திட்டம் உள்ளதாம். முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு உயர்கல்வித்துறை, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு பள்ளிக் கல்வித்துறை, வணிக வரித்துறை அமைச்சர் வீரமணிக்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு வணிகவரித்துறை என திட்டமிடப்பட்டுள்ளதாம்.
முதல்வரின் புது ஆலோசகர் யார்? கவர்னரின் புது ஆலோசகர் யார்?
தமிழக அரசின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட்ராமன்...இருவரும் அவர்களின் பதவிக்காலம் முடிவதற்குள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். ஒருவேளை சசிகலா முதல்வரானால், ஆட்சி நிர்வாகத்துக்கு முற்றிலும் புதியவரான அவருக்கு உரிய ஆலோசனை வழங்க புது ஆலோசகர்கள் தேவை. அதிகாரம் மிக்க அந்தப் பதவியை பிடிக்க அதற்குள்ளாகவே அ.தி.மு.க ஆதரவு அதிகாரிகள் போயஸ்கார்டனில் முட்டி மோதி வருகிறார்கள். அவர்களில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பன்னீர்செல்வம், சோ. அய்யர்...இருவரது பெயர்கள் அடிபடுகின்றன. போலீஸ் துறைக்கு முன்பு ராமானுஜம் இருந்ததைப்போல, தற்போது முன்னாள் கூடுதல் டி.ஜி.பி-யான ராஜேந்திரன் பெயர் அடிபடுகிறது. இதேபோல் தமிழக ஆட்சியை தற்போது கவனிக்கும் கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், மகாராஷ்டிரா மாநில கவர்னராகவும் இருப்பதால், இருமாநிலங்களிலும் அவரால் அடிக்கடி போக முடியாது. அதனால், தமிழகத்தில் கவர்னருக்கென ஆலோசகர்கள் புதிதாக நியமிக்கப்பட இருக்கிறார்கள். இதற்காக ராஜ்பவனில் தனி அறை ஒன்று ரெடியாகி வருவதாக அதிகாரிகள் தரப்பில் பேசிக்கொள்கிறார்கள். பிரதமர் மோடிக்கு நெருக்கமாக இருக்கும் ஆடிட்டர் குருமூர்த்தியின் ஆசி பெற்ற ஒருவர், விரைவில் தமிழக கவர்னரின் ஆலோசகராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. பிரமுகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
எல்லாம் தயார், இனி கவர்னர் விமானம் பிடிக்க வேண்டியதுதான் குறை!
- ஆர்.பி.
No comments:
Post a Comment