Tuesday, February 7, 2017

குடும்ப அட்டையில் திருத்தப் பணிகள்: இணையத்தில் மேற்கொள்ளுமாறு திடீர் அறிவிப்பு!


குடும்ப அட்டையில் பெயர் சேர்ப்பு, நீக்கல் போன்ற பணிகள் அனைத்தும் ஆன்-லைன் முறையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்ற சைதாப்பேட்டை மண்டல உணவுப் பொருள் வழங்கல் அலுவலகம் திடீரென வாய்மொழியாக அறித்துள்ளது. இதனால், நுகர்வோர் பெரிதும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைக்குப் பதிலாக பயோ-மெட்ரிக் அடிப்படையிலான அட்டையை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் அடங்கிய ஆதார் விவரங்கள், தமிழக அரசின் பொது விநியோகத் திட்ட தகவல்களுடன் இணைக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 5,64,16,362 பேரின் ஆதார் பதிவுகளும், 1,69,20,195 குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசி எண்களும் பெறப்பட்டுள்ளன. இதன்மூலம், பயோ-மெட்ரிக் குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

திடீர் அறிவிப்பால் குழப்பம்: இந்த நிலையில், குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல் போன்ற பணிகளை சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஆன்-லைனிலேயே
(https:tnpds.com) மேற்கொள்ள வேண்டும் என சென்னை சைதாப்பேட்டை மண்டல உணவுப் பொருள் வழங்கல் துறையினர் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால், சாதாரண மக்களும், இணையதளத்தை கையாளத் தெரியாதவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுநாள் வரை எழுத்துப்பூர்வமாக நுகர்வோர் விண்ணப்பித்து வந்த நிலையில், அரசு உத்தரவு இல்லாமல் திடீரென அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஏழை-எளிய குடும்பங்களைச் சேர்ந்தோர், தொழிலாளர்கள் இணையவசதி குறித்த விழிப்புணர்வோ- தகவலோ யாரிடம் விண்ணப்பிப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்களோ இல்லாமல் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, ஈஸ்வரமூர்த்தி கூறுகையில்:- கடந்த ஒரு வாரமாக பெயர் மாற்றம் செய்து தரக் கோரி வருகிறேன். ஆனால், ஆன்-லைனிலேயே மேற்கொள்ளும்படி கூறுகிறார்கள் என்றார்.

இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, "ஆன்-லைன் முறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையில் இதனை நடைமுறைப்படுத்துகிறோம். தமிழக அரசு சுற்றறிக்கையோ அல்லது அரசு உத்தரவையோ தனியாக பிறப்பிக்கவில்லை என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024