ஞாபக மறதி நோயால் கருணாநிதி அவதி:
இயல்பு நிலைக்கு திரும்புவது எப்போது?
ஞாபதி மறதி, பேச்சு திறன் இன்மை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, 'ஸ்பீச் தெரபி' சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தி.மு.க., தலைவர் கருணாநிதி, சில மாதங்களுக்கு முன், உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க, தொண்டையில் துளையிட்டு, 'டிராக்கியோஸ்டமி' சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, அவர் கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்; மருத்துவ சிகிச்சை தொடர்கிறது. மூன்று டாக்டர்கள், செவிலியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
கருணாநிதியை பார்க்க விரும்புவோருக்கு, கண்ணாடி கதவு வழியாக பார்க்க, அனுமதி வழங்கப்படுகிறது. பார்க்க வரும் கட்சி பிரமுகர்களின் பெயர், அங்குள்ள வருகைபதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது.
'ஸ்பீச் தெரபி' சிகிச்சை
தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: வயோதிகம் காரணமாக, ஞாபக மறதி, கருணாநிதிக்கு அதிகம் உள்ளது. பேச்சும் குறைந்துள்ளது. அதனால், 'ஸ்பீச் தெரபி' சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், ஞாபக மறதியை குணப்படுத்துவதற்கான சிகிச்சையும் தரப்படுகிறது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்க பொருத்தப்பட்டிருந்த, குழாய்கள் அகற்றப்பட்டுள்ளன.
மூன்றுநாட்களுக்கு முன், அவரை மாடியிலிருந்து கீழ் தளத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது, அங்கு இருந்த குடும்ப உறுப்பினர்களை பார்த்து, கருணாநிதி சிரித்துள்ளார். ஆனால், பேச முடியவில்லை.
அவரை தனிமையில் இருக்க விடாமல், நெருக்கமானவர்களை சுற்றி இருக்க செய்துள்ளனர். பழைய நினைவுகள் குறித்தும், சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றியும், கருணாநிதியிடம் பேசினால், அவர் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என, டாக்டர்கள் கருதுகின்றனர்.
மற்றபடி அவரது உடல் நலத்தில், எந்த குறையும் இல்லை. பேச்சு திறனும், ஞாபகமும் வந்து விட்டால் போதும், அவர் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார். இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment