டியர் யூத்ஸ்.. உங்க உடம்ப பத்திரமா பாத்துக்க சில டிப்ஸ்!
‘மெய்ப்’பொருள் காப்பது அறிவு
இளமையில் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்தாமல் பணம் சம்பாதித்து வாழ்க்கையில் செட்டில் ஆவதே குறியாக இருக்க வேண்டியது. பிறகு, வயதான காலத்தில் சம்பாதித்த பணம் முழுவதையும் மருத்துவமனைகளுக்கு அழுவது. இதைத்தான் வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள். ஆனால், நாம் நலமுடன் இருக்கும்போதே சற்றே கவனமாக இருந்தால் இந்த வாழ்க்கை எனும் வட்டத்தை அழகான ஆரோக்கியமான ஹார்டீனாக மாற்றலாம். இப்போது நாம் பார்க்க போகும் விஷயங்களை பின்பற்ற உங்கள் நேரமோ, பணமோ சிறிதுகூட விரயமாகாது. உங்கள் அன்றாட வாழ்வின் செயல்களினூடாக இதையெல்லாம் செய்தாலே போதும். இதோ அதற்கான டிப்ஸ்...
பிளாஸ்டிக் வேணாம் ப்ளீஸ்!
எளிதாக கிடைக்கும், அதிக விலை இல்லை, எளிதில் உடைந்து போகாது. இப்படி பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் உடல் நலத்திற்கு தீங்கை மட்டுமே அளிக்கும். எனவே பள்ளிகளுக்கு குழந்தைகள் எடுத்துச்செல்லும் தண்ணீர் பாட்டில்கள் (அதுவும் கூட போதுமான தடிமன் கொண்ட பாட்டில்கள் மட்டுமே) தவிர மற்ற இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துவதைத் தவர்த்து விடுங்கள். ஏனெனில், நாள்பட்ட பயன்பாடுகளில் பிளாஸ்டிக் தன் வேலையைக் காட்டிவிடும். மேலும், கண்ணாடி பாட்டில்களில் பாக்டீரியா தொற்றும் சுத்தமாக இருக்காது.
விளம்பர இடைவேளைகள் நல்லது!
உங்களுக்கு பிடித்த ஒரு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துகொண்டிருக்கிறீர்கள். திடீரென விளம்பர இடைவேளை வந்து விட்டது. செம்ம காண்டாவீர்கள் இல்லையா? இனி அப்படியெல்லாம் கோபப்படாதீர்கள் இடைவேளை வந்தவுடன் சின்னதாக உடம்பை வளைத்து நெளித்து ஒரு சிம்பிள் ‛ஸ்ட்ரெச்’ செய்யுங்கள். ஓய்வில் உள்ள உங்கள் உடல் உறுப்புகளை புத்துணர்வாக்கும். அதேபோல், அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவராக இருந்தால் இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை இருபது வினாடிகள், இருபது அடிகள் தொலைவில் உள்ள பொருள் ஒன்றினை பார்த்துப் பழகுங்கள்.
மேக் இட் சின்னது!
உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இல்லையென்றால் நாம் என்னதான், எவ்வளவுதான் முயன்றாலும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியாது. பெரும்பாலும் நம்முடைய ஃபிட்னஸ் ஆசையில் ‘கொழுப்பை’ அள்ளிப் போட்டது நம்ம ஃபேவரைட் உணவாகத்தான் இருக்கும். என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் போலவே, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதும் ரொம்ப முக்கியம். முதலில் உங்கள் வீட்டில் உள்ள பெரிய சைஸ் உணவு தட்டுகளை எடுத்து ஒளித்து வைத்து விடுங்கள். அதற்கு பதிலாக அளவில் சிறிய தட்டுகளை பயன் படுத்துங்கள். சிறிய தட்டுகளை குறைந்த அளவிலான உணவே அதிகமாக தெரியும். சோ, நம்மை அறியாமலே நம் உணவின் அளவும் குறையும்.
தெரிந்து உண்ணுங்கள்
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் என்னென்ன பொருட்கள் உள்ளன என்பது நமக்கு நிச்சயமாய் தெரிந்து இருக்காது. வீட்டில் சமைக்கும் உணவாக இருந்தால் என்னென்ன சேர்க்கிறோம் என்பது தெரியும். அதேபோல், பாக்கெட்டுக்குள் அடைக்கப்பட்ட உணவுகளில் என்னென்ன மூலப்பொருட்கள் எந்த விகிதத்தில் கலந்துள்ளது என்பதை அதன் ‘இன்கிரிடியன்ஸ்’ லிஸ்டில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை அதை எல்லாம் தெரிந்து கொண்டால், நீங்களே அதை எல்லாம் உண்பதை குறைத்துக் கொள்வீர்கள். அல்லது அதற்கு ஈடான உடற்பயிற்சி செய்யப் பழகுவீர்கள்.
கருப்பு சாக்லேட்டும் கலரில்லாத தண்ணீரும்
இது நமக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். காலையில் எழுந்தவுடன் ஒரு குவளை வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவது சாலச்சிறந்தது. பிறகு, சாதாரண சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட சாக்லேட்டுகளுக்கு பதிலாக கருப்பு சாக்லேட்டுகளை எடுத்து கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேற்கூறிய இரண்டு விஷயங்களையும் செய்தாலே போதும் உங்கள் உடல் எடையில் ஆச்சர்யப்படுமளவிற்கு மாற்றம் தெரியும்.
ஏறுங்கள், இறங்குங்கள்
ஒன்று அல்லது இரண்டு மாடிகள் மட்டுமே ஏற வேண்டும் என்னும் போது லிஃப்ட் பயன்படுத்துவதை (சோர்வாக இருக்கும் போதோ அல்லது நேரம் இல்லாத போத தவிர) தவிர்த்து விடுங்கள். மற்ற பொது இடங்களிலும் எஸ்கலேட்டரை பயன்படுதத்துவதை தவிர்த்து படிகளை பயன் படுத்துங்கள். அதே போல் உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள கடைகளுக்கு செல்லும் பொது நடந்தே செல்ல பழகுங்கள்.
கடித்து சாப்பிடுங்கள்
எப்போதும் சாப்பிடும் போது நன்றாக மென்று சாப்பிட வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும். இங்கே நாம் பழங்களை சாப்பிடுவதை பற்றி பார்ப்போம். பழங்கள் என்பவை கடித்துச் சாப்பிட வேண்டியவை. எனவே பழங்களை ஜூஸாக குடிப்பதை குறைத்துக் கொண்டு பழங்களாகவே கடித்து சாப்பிடத் தொடங்குங்கள். அதேபோல் பசித்த பின், உண்ணும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள். பொழுதுபோக்கிற்காக உண்பதை தவிர்த்து விடுங்கள்.
இரவு தூக்கம், காலை உணவு
இரவு தூக்கம் என்பதை கொஞ்சம் சீரியசாக எடுத்து கொள்ளுங்கள். நாம் எவ்வளவு ஓய்வை நம் உடலுக்கு கொடுக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். நல்ல தூக்கம் இதய நோய் சதவீதத்தையும் குறைக்கிறது. அதே போல் காலை உணவு என்பது மிக மிக முக்கியம். இரவு முழுதும் கிட்டத்தட்ட பனிரெண்டு மணி நேரம் பட்டினி இருந்த நாம் கண்டிப்பாக காலை உணவு எடுத்து கொள்ள வேண்டும். காலை உணவை தவிர்ப்பது மூளையின் செயல் திறனை பாதிக்கும்.
இதையெல்லாம் பின்பற்றினாலே நம் வாழ்க்கையில் நாம் சம்பாதிக்கும் பணத்தை நாம் விரும்பிய வழிகளில் செலவழிக்கலாம்.
No comments:
Post a Comment