Thursday, February 2, 2017

பிரேக்ஃபாஸ்ட் மிஸ் பண்ணவே கூடாது... ஏன் தெரியுமா? #BreakfastYMust


காலைப் பொழுது, இன்று நம் கையில் இல்லை. கடிகார முள் நகர நகர, ஒவ்வொருவருக்கும் கூடுகிறது பிரஷர். பணியிடம், கல்விக்கூடம், வியாபாரத்தலம்... என்பதை நோக்கி விரைகிற அவசர தருணம் அது. ஒவ்வொருவருக்கும் அவரவர்பாடு, அவரவர் வாழ்க்கை. இதில் பெரும்பாலானவர்களுக்கு நிறுத்தி, நிதானமாகச் சாப்பிட நேரம் இருப்பதில்லை... அதாவது பிரேக்ஃபாஸ்ட். இருக்கிற உணவை ருசி, பசி அறியாமல் வாய்க்குள் அடைத்துக்கொண்டு, வீட்டைவிட்டுக் கிளம்பி ஓடுவது ஒன்றே குறிக்கோள் என்பதுபோல அப்படி ஒரு ஓட்டம். அப்படிப்பட்டவர்கள் கவனத்துக்காக ஒரு செய்தி!

பிரேக்ஃபாஸ்ட்... இரவில் சாப்பிட்டுவிட்டு, அதன்பிறகு எடுத்திருந்த நீண்ட நேர இடைவெளிக்கு உணவு உட்கொள்வதன் மூலம் தடை போடுவதுதான் பிரேக் ஃபாஸ்ட். உங்களுக்குத் தெரியுமா..? காலை உணவைத் தவிர்ப்பது மிக மோசமான பக்கவிளைவுகளை நமக்கு ஏற்படுத்திவிடும். நாம் உயிர் வாழ, நம் உடல் இயங்கத் தேவையான சக்தியைத் தருவது உணவு. அதிலும் காலையில் நாம் சாப்பிடும் உணவில், கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புச்சத்து மற்றும் கால்சியம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் இருக்கவேண்டியது அவசியம். இவையெல்லாம் இருந்தால்தான், அன்றைக்கு முழுவதற்குமான சக்தி நம் உடலுக்குக் கிடைக்கும்.

பிரேக்ஃபாஸ்ட் ஏன் முக்கியம்?

இரவு உணவு சாப்பிடுகிறோம். அதற்குப் பின் ஆறில் இருந்து பத்து மணி நேரங்கள் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம். இந்த இடைவெளியில், இரவில் உடலும் மூளையும் ஓய்வுநிலையில் இருக்கும். மறுநாள் காலையில் இரண்டுக்கும் சக்தி தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடும் உணவு, மூளையில் இருக்கும் நியூரோடிரான்ஸ்மிட்டர்களை சிறப்பாகச் செயல்பட வைத்து, நினைவுத்திறன் அதிகரிக்க உதவுகிறது. அதோடு, உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.







பிரேக்ஃபாஸ்ட் தொடர்ந்து சாப்பிடவில்லை என்றால்...

குழந்தைகளுக்கு...

பகல் பொழுதிலேயே தூக்கம் வரும்; படிப்பில் கவனமின்மை, நாள் முழுவதும் சோர்வு, நினைவாற்றல் இழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இளம் வயதினர்களுக்கு...

முடி உதிர்தல், உடல் வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பு, சோர்வு, தலைசுற்றல், குமட்டல், உடல் எனர்ஜி குறைதல், அல்சர், சர்க்கரைநோய் டைப்-2, நினைவாற்றல் இழப்பு, உடல் எடைக் குறைவு போன்றவற்றை ஏற்படும்.

வயதானவர்களுக்கு...

நாள் முழுக்க உடல் மற்றும் மனச்சோர்வு, இதய நோய்கள், சர்க்கரைநோய், தலைசுற்றல், வயிற்று எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும்.





பிரேக்ஃபாஸ்ட்: யாருக்கு... எப்போது... எவ்வளவு?

காலை உணவு 7-9 மணிக்குள் சாப்பிட்டுவிட வேண்டும்.

நைட் ஷிஃப்டுக்குச் செல்பவர்கள், கண்டிப்பாக காலை உணவை சாப்பிட்ட பிறகுதான் ஓய்வு எடுக்க வேண்டும். நீண்ட நேரம் தூங்கும்போது, இரைப்பையில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் நன்கு சுரக்கும். காலை உணவைத் தவிர்த்தால், வயிற்றில் புண் தோன்றி, அமிலம் உணவுக்குழாய்க்குச் சென்று நடுக்காதை அடையும். மேலும், ஒற்றைத் தலைவலியையும் ஏற்படுத்திவிடும்.

காலை உணவாக ஏதாவது ஒரு பழம், லேசாக புளித்த மாவு கொண்டு தயார் செய்யப்பட்ட எளிதில் செரிமானம் ஆகும் உணவைச் சாப்பிட வேண்டும். கொழுப்புச்சத்தும் அவசியம். அதற்காக அதிக கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வேண்டாம். சரிவிகித உணவாகச் சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு, நன்றாக காய்ச்சிய பாலை அருந்தக் கொடுக்கலாம். பால் குடிக்காதவர்கள், கடலை போன்ற பருப்பு வகைகளைச் சாப்பிடலாம். அவித்த முட்டை, ஆம்லெட் சாப்பிடலாம்.





கேரட், தக்காளி, வெங்காயம், வெள்ளரி ஆகியவை அடங்கிய வெஜ் சாண்ட்விச் செய்து சாப்பிடலாம்.

இளம் வயதினர், பச்சை இலைக் காய்கறிகள், வேரில் விளையக்கூடிய கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வெங்காயம், கிழங்குகள், சிறுதானியங்கள், நார்ச்சத்து மிகுத்த வெள்ளரி, பீன்ஸ், பயறு வகைகள், முளைகட்டிய பயறு வகைகளைச் சாப்பிடலாம்.

வயதானவர்களுக்கு... கேழ்வரகு இட்லி, இட்லி, தோசை - சாம்பார், ஆப்பம், சாம்பாருடன் இடியாப்பம், தக்காளி-பட்டாணி சாதம், வரகரிசி-தக்காளி சாதம், கேழ்வரகு ஸ்டஃப்டு இட்லி, வெங்காயப் பொடி தோசை, உளுந்து கஞ்சி, ஓட்ஸ் உப்புமா, ராகி உப்புமா, கேழ்வரகுக் கூழ் போன்ற எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளாக இருக்க வேண்டும்.







சரியான நேரத்தில் பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டால்...

* நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் புத்துணர்வுடனும் செயல்படத் தேவையான சக்தி கிடைக்கும்.

* மூளை மற்றும் தசைகளுக்குத் தேவையான ஊட்டத்தை காலை உணவு அளிக்கும்.

* இதயம், செரிமான மண்டலம், எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க உதவும்.

* அல்சர் மற்றும் வயிற்று எரிச்சல் வராமல் தடுக்கும்.

ஆக, என்ன அவசரமானாலும், காலை உணவை ஆற, அமர மென்று, நிதானமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்காதீர்கள். என்றென்றும் ஆரோக்கியம்... நிச்சயம்!


- ச.மோகனப்பிரியா

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024