சசிகலா பதவிப் பிரமாணத்தை ஆளுநர் தவிர்க்க முடியுமா? சட்ட வல்லுநர் கருத்து
VIKATAN
தமிழக சட்டப்பேரவையின் அ.தி.மு.க. தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் ஆளுநரின் அழைப்பு இல்லாததால் அவர் முதல்வராகுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு சட்டம் என்ன சொல்கிறது என்று வழக்கறிஞர் டி.ஏ.சி. ஜெனிதா விளக்கம் அளித்தார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
ஆளுநர் வருகை தொடர்ந்து தாமதமானால் அதற்கு சட்டரீதியாக என்ன தீர்வு இருக்கிறது?
தமிழக சட்டப்பேரவை அ.தி.மு.க. தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு சசிகலா பரிந்துரைக்க வேண்டும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் தமிழகத்துக்கு ஆளுநர் (பொறுப்பு) நியமிக்கப்பட்டு இருப்பதால் அவர் இங்கு இல்லை. இதனால் முதல்வர் பதவி ஏற்பு விழாவுக்கான நடைமுறைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநர், குறிப்பிட்ட நாளுக்குள் சட்டம், முதல்வர் தேர்வு உள்ளிட்டவைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை.
கடந்த 1983ல் சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டு அதன்பரிந்துரையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு முதல்வரை தேர்வு செய்வது, சட்டங்களை இயற்றுவது தொடர்பான அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. எனவே, ஆளுநருக்கு இதுபோன்ற அதிகாரங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டதோடு அதை அமல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அதற்கு நடவடிக்கை இல்லை.
ஆளுநர் மீதான புகார் மற்றும் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் யாரிடம் இருக்கிறது?
இந்திய குடியரசுத் தலைவருக்கு உள்ளது. சில விதிமுறைகளுக்குட்பட்டு நீதிமன்றங்களுக்கும் இருக்கிறது. மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டால் இந்திய குடியரசுத் தலைவர் தலையிடலாம். ஆளுநரை நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே இருக்கிறது.
இருமாநிலங்களுக்கு ஒரே ஆளுநர் நியமிக்கப்படலாமா?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பிரிவு 153ல் குறிப்பிட்டுள்ளபடி இருமாநிலங்களுக்கு ஒரே ஆளுநரை நியமிக்கலாம்.
முதல்வராக தேர்ந்தெடுக்கப்படும் ஒருவரை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறதா?
கவுன்சில் ஆப் மினிஸ்டர்ஸ் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் முதல்வர் குறித்து ஆராய்ந்த பிறகு ஆட்சி அமைக்க சம்மதம் தெரிவிக்கப்படும். முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவோர் மீது ஆதாரத்துடன் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவரை நிராகரித்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது.
எப்போது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356ஐ ஆளுநர் பயன்படுத்துவார்?
கடந்த 1994-ல் எஸ்.ஆர்.பொம்மை Vs யூனியன் ஆப் இந்தியா என்ற வழக்கில் எந்தமாதிரியான அசாதாரண சூழ்நிலை உருவாகினால் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356ஐ பிரகடனப்படுத்த வேண்டும் என்பதை ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அளித்தத் தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில ஆட்சியில் அசாதாரண சூழ்நிலை உருவாகினால் அதற்கான ஆதாரத்துடன் 356ஐ (ஆட்சி கலைப்பு) பிரகடனப்படுத்த குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க வேண்டும். அவரது ஒப்புதலின் பேரில் ஆட்சி கலைக்கப்படும்.
-எஸ்.மகேஷ்
No comments:
Post a Comment