தூங்கும் பெண்களின் தலைமுடி கத்தரிப்பு
பதிவு செய்த நாள்24ஜூன்
2017
01:17
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில கிராமங்களில், இரவு நேரங்களில் துாங்கும் போது, தலைமுடி வெட்டப்படுவதால், பெண்கள் அச்சம்அடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், ஜோத்பூர் மாவட்டம், திம்வரி கிராமத்தில் துாங்கிக் கொண்டிருந்த பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்டது. அதேபோல், நள்ளிரவில் வீட்டுக்கு வெளியில் படுத்திருந்த, 13 வயது சிறுமியின் தலைமுடியை மர்ம நபர்கள் வெட்டிச் சென்றனர்.ஏற்கனவே, பிகானீர் மாவட்ட கிராமங்களில், வீட்டுக்கு வெளியில் துாங்கிக் கொண்டிருந்த பெண்களின் தலைமுடி மற்றும் நகங்களை, அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டியதும், வயிற்றின் மீது பலவிதமான அடையாளங்கள் வரைந்து விட்டுச் சென்றதாகவும் கிராம மக்கள் கூறினர்.இரவு நேரங்களில், வீட்டுக்கு வெளியில் துாங்கிக் கொண்டிருக்கும் பெண்களின் தலைமுடி மற்றும் நகங்கள் வெட்டப்படுவது, மந்திர, தந்திர வேலைகளில் ஈடுபடுவோரின் செயலாக இருக்கும் என்பதால், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பிகானீர் மற்றும் ஜோத்பூர் மாவட்ட போலீசாரிடம், கிராம மக்கள், பாதுகாப்பு கோரி அளித்த புகாரைஅடுத்து, பெண்களின் தலைமுடியை வெட்டும் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
No comments:
Post a Comment