Wednesday, September 20, 2017

தேசிய செய்திகள்

அரசு இலவச புடவைகளை சண்டை போட்டு வாங்கிய பெண்கள்! தரையை சுத்தம் செய்யக்கூட உதவாது என கோபம்


அரசு வழங்கிய இலவச புடவைகளை பெண்கள் சண்டை போட்டு வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செப்டம்பர் 18, 2017, 09:49 PM
ஐதராபாத்,

தெலுங்கானாவில் தசரா பண்டிகையை ஒட்டி அரசு சார்பில் ஏழை பெண்களுக்கு இலவசமாக புடவைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்காக அரசு தரப்பில் சூரத் மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலே புடவைகள் கொள்முதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் அரசு இலவச வேட்டி - புடவை வழங்குவது போன்று தெலுங்கானாவிலும் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியினர் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் புடவைகளை வழங்கினர். சில பகுதிகளில் பெரும் சண்டை வெடித்தது.

தெலுங்கானாவில் பெண்களுக்கு வழங்குவதற்கு என்று 500 வகையான புடவைகள் கொண்டுவரப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

சில இடங்களில் புடவைகளை வாங்க வரிசையில் நின்ற பெண்கள் ஆக்ரோஷமாக சண்டை போட்ட காட்சியும் உள்ளூர் மீடியாக்களில் ஒளிபரப்பானது. பெண்கள் மொத்தமாக முடியை பிடித்து இழுப்பதும், அடித்துக் கொள்வதுமாக காணப்பட்டது. ஐதராபாத்தில் அரசின் திட்டம் கடைசியில் பெரும் அடிதடியில் முடிந்தது. போலீசார் பெரும் பாடுபட்டு அவர்களுடைய சண்டையை முடிவுக்கு கொண்டுவந்தனர். இதற்கிடையே சமூக வலைதளங்களில் பெண்கள் குழுவாக அரசு வழங்கிய புடவைகளை எரிக்கும் வீடியோவும் வெளியாகிஉள்ளது.

புடவைகள் மிகவும் மோசமாக உள்ளது என்றும் தரையை சுத்தம் செய்யக்கூட உதவாது எனவும் அவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. முதல் மந்திரி சந்திரசேகர ராவை விமர்சனம் செய்யும் விதமாகவும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

இதுபோன்ற புடவையை கட்டிக்கொண்டு சந்திரசேகர ராவின் மகள் கவிதா தசரா விழாவில் நடனம் ஆடுவாரா? என கேள்வியும் எழுப்பி உள்ளார்கள் இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சந்திரசேகர ராவின் அரசை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளனர். மக்களின் வரிப்பணம் தான் தேவையில்லாமல் செலவு செய்யப்பட்டு உள்ளது என விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. புடவைகளை சாலையில் வைத்து எரிக்கும் சம்பவமும் அரங்கேறிஉள்ளது. இச்சம்பவங்கள் ஆளும் கட்சிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலும் விவசாய பெண்களுக்கு வழங்க திட்டம் தொடங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இவ்வளவு மோசமான புடவையை கொடுத்து எங்களை அவமதிக்கிறார்கள் என விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பெண் ஒருவர் பேசுகையில், இன்றைய வேலையை விட்டுவிட்டு வந்தோம். எங்களுக்கு ரூ. 400 நஷ்டம். நாங்கள் கடைக்கு சென்றுயிருந்தால் கூட நல்ல புடவையை எடுத்து இருப்போம். இவ்வளவு நேரம் வரிசையில் இன்று மோசமான புடவையை கொடுத்து உள்ளனர். மிகவும் மோசமான புடவைகள். ரூ. 50க்கு கூட புடவைகள் தேறாது. தரையை சுத்தம் செய்யக்கூட உதவாது. எங்களை அவமதிப்பதற்கு பதிலாக இந்த திட்டத்தை செயல்படுத்தாமலே இருந்து இருக்கலாம், என கோபமாக கூறிஉள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024