தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதியை நீட்டிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்ட வட்டம்
By DIN | Published on : 19th September 2017 01:13 AM |
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதியை நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இது தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த திருமா மங்கள், மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 'இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் மேல் இருத்தல் ஆகாது என உச்ச நீதிமன்றம் கடந்த 1992-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு அமலில் உள்ளதால் மருத்துவக் கல்லூரியில் சேரும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் 2017-18 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் பொதுப் பிரிவின் கீழ் சேர்ந்து படிக்க உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் கே.எம். விஜயன், சிவபால முருகன் ஆஜராகினர்.
அப்போது நீதிபதிகள், 'மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏன் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தை அணுகவில்லை. இடைக்கால உத்தரவு பிறப்பித்த பிறகு ஏன் நீதிமன்றத்தை அணுகியுள்ளீர்கள். இவ்வளவு தாமதம் ஏன்? தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான கலந்தாய்வு தேதியை நீட்டிப்பதாக இல்லை' என்றனர்.
இதைத் தொடர்ந்து, வழக்குரைஞர் கே.எம். விஜயன், ' நீட் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நிலவிய பிரத்யேக சூழல் காரணமாக மருத்துவ மாணவர் சேர்க்கை செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீடித்தது. மனுதாரருக்கு செப்டம்பர் 2-ஆம் தேதிதான் அழைப்புக் கடிதம் கிடைத்தது. அதன் பிறகு காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது' என்றார். அவரது வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
No comments:
Post a Comment