Thursday, September 14, 2017

போட்டியாளர்கள் தகுதி நீக்கத்தால் அதிரடி சிங்கப்பூர் முதல் பெண் அதிபரானார் ஹலீமா

DINAKARAN
2017-09-14@ 00:22:10




சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக ஹலீமா யாகோப் தேர்வாகியுள்ளார். எதிர்த்து போட்டியிட்டவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து ஹலீமா யாகோப்புக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. சிங்கப்பூர் அதிபராக இருந்த டோனி டான் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். சிங்கப்பூரில் அதிபராவது என்பது கெடுபிடிகள் நிறைந்தது என்ற நிலையில் தற்போது மலாய் இனத்தை சேர்ந்தவர்களே தேர்தலில் போட்டியிடலாம் எனவும் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதிபர் தேர்தலில் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரும், ஆளும் மக்கள் செயல்பாட்டு கட்சி உறுப்பினருமான ஹலீமா யாகோப்(63) உள்பட 5 பேர் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 3 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. தொழிலதிபர்கள் முகமது சலே மரிக்கான் மற்றும் பரீத் கான் ஆகிய இருவரின் மனுக்கள், தகுதிக்கு குறைந்தபட்ச தேவையான 2 விதிமுறைகளில் ஒன்றை பூர்த்தி செய்யாததால் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனால் அந்த 2 போட்டியாளர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து மலாய் இனத்தை சேர்ந்த ஹலீமா யாகோப் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தலை சந்திக்காமலே அவர் சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். இவருக்கு இன்று இஸ்தானாவில், மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நாட்டின் 8வது அதிபராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹலீமா யாகோப் தனது வெற்றி குறித்து கூறுகையில், ‘`நான் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அடைந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கடும் முயற்சி மேற்கொள்வேன்’’ என்றார். ஹலீமாவுக்கு பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024