சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க 10 டிப்ஸ்!
#ControlDiabetes
ஏதோ
ஓர் உடல்நலக் கோளாறு. மருத்துவரிடம் செல்கிறார் ஒருவர். அவருக்கு வயது
40-ஐத் தாண்டியிருந்தால், மருத்துவர் கேட்கும் முதல் கேள்வி... 'சுகர் இருக்கா?’ என்பதுதான்.
இன்றைக்கு 35 வயதைக் கடந்துவிட்டாலே சர்க்கரைநோய் இருக்குமோ என்கிற
சந்தேகம் பரவலாகிவருகிறது. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. மாறிவரும்
வாழ்க்கை முறை, முறைப்படுத்தப்படாத உணவு முறை, மன அழுத்தம்... என எத்தனையோ
காரணங்களை அடுக்கலாம். இதுவே சர்க்கரைநோய்க்கு ஆளானவர்களாக இருந்தால்,
'பால் சேர்க்காதீங்க... பழம் சாப்பிடாதீங்க’ என உடன் இருப்பவர்களிடம்
இருந்து அசால்ட்டாக வந்துவிழும் அட்வைஸ் மழை! ஆரம்பகட்ட நிலையில்
இருந்தாலும் சரி, காலையில் பல்துலக்கும் காரியம்போல இன்சுலின் ஊசியைப்
போட்டுக்கொள்ளும் அபாயகரமான நிலையில் இருப்பவராக இருந்தாலும் சரி...
சிலவற்றைச் சாப்பிடுவதன் மூலமாகவே சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தலாம்.
அதற்கு சாப்பிடவேண்டிய உணவுப் பொருட்கள், மூலிகைகள், உணவுகள் 10 இங்கே...
1. வெந்தயம்
ரத்தத்தில்
உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். கல்லீரலைச் சுறுசுறுப்பாக்கி,
பித்தத்தை முறிக்கும். இரவில் ஊறவைத்த வெந்தயத்தை, காலையில் நீருடன்
சேர்த்து குடிக்கலாம். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை ஒரு டம்ளர் நீர் ஊற்றிக்
கொதிக்கவைத்து, ஆறிய பின்னர் அந்தக நீரை குடிக்கலாம். முளைக்கட்டிய
வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.
2. நெல்லிக்காய்
ரத்தத்தில்
கலக்கும் இன்சுலினை, சிறந்த முறையில் கிரகிக்க நெல்லிக்காய் உதவுகிறது.
நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது, உடலின் நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ஒரு
டீஸ்பூன் நெல்லிக்காய் சாற்றை, அதைவிட நான்கு மடங்கு நீருடன் சேர்த்து
அருந்தலாம்; ஆனால், வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது.
3. பட்டை
டைப்
2 சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்து. இன்சுலின் உடலில் சீராகச் சுரக்க
உதவும். சர்க்கரையின் அளவைக் குறைக்கும். ஒரு டீஸ்பூன் பொடியைத் தண்ணீரில்
கலந்து, இரண்டு வேளை உட்கொண்டு வரலாம். அரை டீஸ்பூன் பட்டை தூளை ஒன்றரை
கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவைத்து, அந்த நீரை ஆறிய பின்னர்
குடிக்கலாம்.
4. நாவல்பழம்
நாவல்பழத்தில்
உள்ள துவர்ப்புத் தன்மை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
கணையத்தைச் சீராக்கிப் பாதுகாக்கும். பித்தத்தைத் தணிக்கும். நாவல் விதைப்
பொடியை ஒரு டீஸ்பூன் தண்ணீரில் கலந்து இரண்டு வேளை குடிக்கலாம். நாவல்
பழத்தின் சாற்றை தினசரி குடிக்கலாம். தொடர்ந்து நாவல் பழங்களைச் சாப்பிட்டு
வந்தால் குடல், இரைப்பை, இதயத்தின் தசைகள் வலுவாகும்.
5. பாகற்காய்
சர்க்கரைநோய்க்கு
பாகற்காய் சிறந்த மருந்து. இது, கணையத்தில் உள்ள பீட்டா செல்களை
புத்துயிர் பெறச் செய்கிறது. பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும்
ஆன்டிஆக்ஸிடன்ட், கண்நோய் வராமல் காக்கும். தினசரி
பாகற்காய்ச் சாற்றை வெறும் வயிற்றில் அருந்தலாம். அவ்வப்போது உணவில்
சேர்த்துக்கொள்ளலாம். ஒரு கப் பாகற்காய் சூப், அதில் ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு
வந்தால் ரத்தம் சுத்தமாகி, தோல் பளபளப்பாகும்.
6. வேம்பு
சிறந்த
கிருமி நாசினி; பூச்சிக்கொல்லி; பக்க விளைவு இல்லாத சர்க்கரைநோய் மருந்து.
தேவையான இன்சுலினைச் சுரக்க உதவும். வேப்பம் பூவை உணவுடன் சேர்த்துக்
கொள்ளலாம். வாரம் ஒருமுறை வேப்பம் பூ ரசம் சாப்பிடுவது நல்லது. பித்தத்தை
குணப்படுத்தும்.
7. துளசி
துளசியில்
உள்ள துவர்ப்பு, சர்க்கரைநோய்க்கு சிறந்த மருந்து. இது கணையத்தில் உள்ள
பீட்டா செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கும். மேலும், இன்சுலின் சுரப்பைச்
சீராக்கும். தினமும் 10-15 துளசி இலைகளைச் சாப்பிடலாம்.
8. ஆவாரை
ஆவாரை
ஒரு சிறந்த ஆன்டிபயாட்டிக். தினசரி ஐந்து ஆவாரம் பூவை மென்று சாப்பிட்டு
வர, சர்க்கரையின் அளவு குறையும். ஆவாரைப் பொடியை பால் அல்லது நீருடன்
சேர்த்துக் குடிக்கலாம். ஆவாரம் பூக்களையும், கொழுந்தையும் சேர்த்து
வெயிலில் காயவைத்து தூள் செய்து, அதில் நீர் ஊற்றி, கஷாயம் செய்ய வேண்டும்.
கஷாயத்தைப் பாலுடன் சேர்த்துப் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
9. மஞ்சள்
மஞ்சள், சிறந்த ஆன்டிபயாட்டிக். இதில் உள்ள குர்குமின் காயத்தை ஆற்றும். இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். புற்றுநோயைத் தடுக்கும். இரண்டு சிட்டிகை மஞ்சள் தூளை, சூடான நீர் அல்லது பாலுடன் கலந்து கொதிக்கவைத்துக் குடிக்கவும்.
10. அத்திப்பழம்
அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது இன்சுலின் சுரப்பைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. ரத்த விருத்தியை அதிகரிக்கும். உடலுக்குத்
தேவையான எனர்ஜியைத் தரும். தினசரி அத்திப் பழப் பொடியை ஒரு டீஸ்பூன்
சாப்பிட்டுவர, ரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம்.
கவனிக்க...
இந்த மூலிகைகளை தினசரி எவ்வளவு எடுக்கலாம் என சித்த மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, பின்பற்ற வேண்டியது அவசியம்.
மூலிகைகளை உணவாக காலையும் இரவும் சாப்பிட்டுவர சர்க்கரைநோயால் ஏற்படும் பக்க விளைவுக்கான வாய்ப்பு குறையும்
சர்க்கரை
அளவு குறைந்துவிட்டது என்று, சர்க்கரை நோய் மருத்துவர் பரிந்துரைத்த
மருந்துகளை எடுப்பதை நிறுத்த வேண்டாம். மருத்துவர் ஆலோசனையிபடி மட்டுமே
சர்க்கரை நோய்க்கான மருந்துகளை குறைப்பது அல்லது நிறுத்துவதை மேற்கொள்ள
வேண்டும்.
- ச.மோகனப்பிரியா
No comments:
Post a Comment