Thursday, January 12, 2017

'கையாலாகாத கவர்மென்ட்!' ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் மனக்குமுறல்

ந்த  ஞாயிறு ஒரு புதுமையான விடியலாக இருந்தது மெரினா கடற்கரைக்கு மட்டும் அல்ல தமிழகம் முழுமைக்கும் தான். வழக்கமாக வாக்கிங்  வருபவர்களைத் தாண்டி, வேட்டி கட்டிய இளைஞர்கள் பட்டாளம் கையில் பதாகைகளுடன் மெரினாவைச் சுற்றி வந்தனர். பார்த்தவர்கள் ஏதோ அரசியல்  கட்சிக் கூட்டம் என்று தான் முதலில் நினைத்தனர். ஆனால் வேட்டிகளில் கட்சிக் கரைகள் இல்லை. சாராய வாடை இல்லை, மீடியாவுக்கான நாடகத்தனம்  எவர் முகத்திலும் இல்லை. யாருக்கும்  காத்து  இருக்காமல் அந்த  கூட்டம் நடக்கத் துவங்கியதும்  அது பேரணியாக  மாறியது. ஒன்றும் புரியாமல்  வெலவெலத்துப் போனது  உளவுத்துறை.  செய்வதறியாமல் கைகட்டி நின்றனர் காவல்  துறையினர். ''மத்திய அரசே, ஜல்லிக்கட்டுக்கான  தடையை  நீக்கு'' என்கிற  கோஷம் வங்காள  கடலில் கலந்த போதுதான் தமிழக  அரசியல் கட்சிகள் மீது இளைஞர்கள்  எந்த  அளவுக்கு நம்பிக்கை இழந்துள்ளனர்  என்று  உணர்த்தியுள்ளது. நாடகத்தனமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கட்சிகளுக்கு மாணவர்கள் எதை  உணர்த்த  விரும்புகின்றனர்?
தகரும் நம்பிக்கைகள் 
கடந்த  இரண்டு  மாதங்களாக பல்வேறு  அரசியல் காரணங்களால் உலையில் வைத்த நீராய் மக்கள்  கொதித்துக்கொண்டு  இருக்கின்றனர். அரசியல் கட்சிகளோ  சோற்றுச்சட்டிகள் போல் எந்தச்  சலனமும்  இல்லாமல் இருக்கின்றன. நிலைமை  கைமீறும் போது  எல்லாம் தட்டுகளைக் கொண்டு கொதி  நீரைப் பானைக்குள் தள்ளும்  வேலையை  மட்டும்  செய்து வருகின்றன. ஒரு பிரச்னை  அதற்கான  தீர்வை அதுவே  சென்று  அடையும்போது, அதன்மீது கருத்துக்களை  சொல்லி, இருப்பைத்  தக்கவைத்துக்கொள்ளும்  முறையைத்தான்  இதுவரை தமிழக  அரசியல் கட்சிகள் செய்து வருகின்றன. மூன்று வருடம் ஆகிறது ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதித்து. ஆனால்  பொங்கலுக்கு ஒருவாரத்திற்கு  முன்பு தான்  அதுபற்றிப் பேசுவார்கள். பொங்கல் முடிந்ததும் அடுத்த வேலைக்குக் கிளம்பி விடுவார்கள். இதுபோலத் தான் எல்லா பிரச்னைகளிலும். கடந்த  இரண்டு மாதமாக ரூபாய் நோட்டுப்  பிரச்னையால் தவித்து வரும் மக்களுக்கு ஆதரவாக எந்த அரசியல் கட்சியும் முனைப்பான  போராட்டத்தை நடத்தி இருக்கிறார்களா? ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்து  எந்தக்  கேள்வியும்  எழுப்ப மறுப்பது, சசிகலா  பொதுச்செயலாளர் ஆனது  குறித்துகூட கருத்து கூறாமல் இருப்பது, என்று மக்கள்  கோபம் கொண்டுள்ள கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லாமல், வேறு வழியில் அரசியல் கட்சிகள் பயணத்தை ஆரம்பித்து இருப்பது, அந்தக் கட்சிகள் மீதான நம்பிக்கையை இழக்கச்செய்து, கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதன் ஆரம்பம்தான் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எந்த அரசியல் கட்சியையும் நம்பாமல் இளைஞர்கள் போராட்டத்தில்  இறங்கியது.
ஜெயலலிதா மரணம் 
அரசியல் கட்சிகளுக்கு எதிராக இளைஞர்கள் இருப்பது ஒன்றும் புது விஷயம் இல்லை. அது இந்த காலகட்டங்களில் அதிகம் ஆவதற்கு காரணம் ஜெயலலிதா  மரணத்தில் உள்ள சந்தேகம். ஜெயலலிதா இருந்த போது அவரை  வெறுத்தவர்களுக்குக் கூட அவரது மரணம் உருகச் செய்தது. அதில் அரசியல் கட்சிகள் காட்டிய  கள்ள மௌனம், அவர்கள் மீதான நம்பிக்கை  உடைய முதல் காரணம். தமிழகத்தில் இருந்த எதிர்க்கட்சிகள் முதல் துக்கடா கட்சிகள் வரை அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் அப்போலோ வாசலில் பேட்டி கொடுத்தனர். ஆனால் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு மக்களுக்கு எழுந்த சந்தேகங்களுக்கு எந்தக் கட்சியும் சரியான பதிலை வாங்கிக் கொடுக்கவில்லை.
பணப் பிரச்னை 
பழைய 500 மற்றும்1000 ரூபாய்  நோட்டுகள்  செல்லாது  என்று மத்திய  அரசு அறிவித்து  2 மாதத்திற்கு  மேல்  ஆகிறது. மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி  வருகின்றனர். ஆனால்  பேருக்கு ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு ஒதுங்கிக்  கொண்டன  அரசியல்  கட்சிகள். தமிழக அரசோ  இது பற்றி  இதுவரை எந்த  அக்கறையும் இல்லாமல் தங்கள்  கட்சிக்கு பொதுச்செயலாளரைத் தேர்ந்து எடுக்கும் வேலையில் மும்மரமாக இருந்தது. இது இந்த குறுகிய காலத்தில் நம்பிக்கையை  இழக்க இரண்டாவது காரணம் 
சசிகலா பொதுச் செயலாளர் 
ஜெயலலிதா மரணத்தில் உள்ள  மர்மங்களை சசிகலா சொல்ல வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆளுநரையே அப்போலோ வாசலில் நிறுத்தியவர்  மக்களின் கேள்விகளை  வீதியில்  நிறுத்திவிட்டு கட்சியின்  பொதுச்செயலாளர்  ஆகி விட்டார். அடுத்து முதல்வராகப் போகிறார். தங்கள்  எண்ணங்களுக்கு  எதிராக ஒரு செயல் வெற்றிபெற்றுக்கொண்டே  செல்வது மக்களிடம்  ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு  எதிராக  யாராவது கேள்வி  கேட்க  மாட்டார்களா  என்று காத்து  இருந்தனர். ஆனால் எதிர்க்கட்சிகளோ  அது  உள் கட்சி  விவகாரம்  நாங்கள்  தலையிட  முடியாது  என்று ஒதுங்கிக்கொண்டனர். ஜெயலலிதா  மரணத்திலும் சசிகலா பொதுச்செயலாளர்  ஆன விஷயத்திலும் அரசியல்  கட்சிகள்  செய்ய வேண்டிய அரசியலை,  செய்யாமல்  ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது நம்பிக்கை  இழக்க  மூன்றாவது  காரணம்.
ஜல்லிகட்டு அரசியல் 
காவிரி தீர்ப்பில் உச்ச  நீதிமன்றத்திற்கு எதிராக கர்நாடக அரசியல்  கட்சிகள்  எல்லாம் பேசுகின்றன. முல்லை பெரியாருக்காக கேரள  அரசியல்  கட்சிகள் உச்சநீதிமன்றத்தை எதிர்க்கின்றன. ஆனால் தமிழகத்தின்  நிலைமையோ ஊழல் வழக்கில் சிறைசென்ற போது தீர்ப்பு சொன்ன நீதிபதி உருவ பொம்மையை எரித்து வீரம் காட்டியவர்கள், தீர்மானம் நிறைவேற்றியர்வர்கள் எல்லாம் காவிரி, முல்லை பெரியார், ஜல்லிக்கட்டு என்று வருகிறபோது ஒழுக்க சீலர்களாக மாறி, சட்டத்தைப் பின்பற்றுவது வேடிக்கை  தான்.  மூன்று வருடங்களாக ஜல்லிக்கட்டுக்கான நாடகத்தை நடத்துகின்றனர் அரசியல்  கட்சிகள்.  ஆனால், ஒரு முன்னேற்றமும் இல்லை. பொறுத்துப்பொறுத்து பார்த்த இளைஞர்கள், இனிமேலும் இவர்களை நம்பினால் எதுவும் நடக்காது என்று புரிந்து கொண்டுதான்  தன்  எழுச்சியாக மெரினாவில் கூடினர். இது  தற்போது அரசியல்  கட்சிகளுக்குப் பெரிய அழுத்தத்தைக்  கொடுத்துள்ளது.
இளைஞர்கள் எழுச்சி  
ஃபேஸ்புக் மூலமாக ஒருங்கிணைத்து ஒரு 250 பேர் வருவார்கள் என்று எதிர்பார்த்த மெரினா பேரணிக்கு ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் வந்தது, ஒரு சாதாரண  நிகழ்வு கிடையாது. அதைத் தொடர்ந்து மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்  என்று தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ள எழுச்சிக்குக் காரணம், தமிழக அரசியல் கட்சிகள்தான். இதற்கு முன்னர்,  ஈழப்போரின்போது இதேபோன்ற எழுச்சி, மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டது. தற்போது  மீண்டும் அதேபோன்ற ஒரு  நிலைமை தமிழகத்தில் உருவாகி உள்ளது. ஒரு இயக்கம்  மீண்டும்  மீண்டும்  தன்னைப் புதுப்பித்துக்கொள்ள இளைஞர்கள் சக்தி  அவசியம். இளைஞர்களின்  நம்பிக்கையை இழந்துஉள்ள  அரசியல் கட்சிகள்  இந்த  புது  ரத்தத்தைப்  பெற தங்களை மாற்றித் தான் ஆகவேண்டும். ஏன்  என்றால் வரலாற்றில் பெரிய நிகழ்வுகளுக்கு  எல்லாம்  சின்ன  தொடக்கம்  தான் காரணமாக  இருந்துள்ளதை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது. உணர்ந்து செயல்படுவார்களா?.
- பிரம்மா

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024