சசிகலா சொன்னது என்னாச்சு?: பொருமும் அ.தி.மு.க., தலைகள்
சென்னை: ஜெயலலிதா மறைந்ததும், அவர் வகித்த அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் பதவியை பிடிப்பதற்காக சசிகலா தீவிரமாக களம் இறங்கிய போது, கட்சியின் மூத்த தலைவர்களான, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.பி.முனுசாமி உள்ளிட்டவர்கள், சசிகலாவை கடுமையாக எதிர்த்தனர். வாக்குறுதி: அது, பொதுக்குழுவில் பிரச்னையாக வெடிக்கலாம் என கருதிய சசிகலா உறவினர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் பலரையும் சந்தித்து சமாதானம் பேசினர்.
அப்போது, அவர்களுக்கு கட்சியிலும் ஆட்சி - அதிகாரத்திலும் முக்கியத்துவம் அளிப்பதாக உறுதிமொழி அளித்ததாகக் கூறப்படுகிறது. நினைத்த மாதிரி, சசிகலா, பொதுக் குழுவால் தேர்வாகி விட்டார். ஆனால், உறுதி மொழி அளித்தபடி, மூத்த தலைவர்கள் யாருக்கும் கட்சியிலும்; ஆட்சியிலும் எந்தப் பொறுப்பும் அளிக்கப்படவில்லை.இதற்கிடையில், சசிகலாவை கடுமையாக விமர்சித்ததோடு, அவர் தலைமையை ஏற்றெல்லாம் தன்னால் செயல்பட முடியாது என, அதிரடியாக பேசினார் கட்சியின் பேச்சாளரான நாஞ்சில் சம்பத்.
வான் கோழி மயிலாகாது என்றெல்லாம், சசிகலாவை தரைமட்டத்துக்கு கீழே இறக்கிப் பேசினார். உடனே அவரை அழைத்துப் பேசிய சசிகலா, அவருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதையறிந்ததும், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், சசிகலா மீதும், உறுதி மொழி அளித்த அவரது உறவுகள் மீதும் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, அ.தி.மு.க.,வின் மூத்த தலைவர்களோடு நெருக்கமாக இருக்கும் சிலர் கூறியதாவது: சசிகலாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த செங்கோட்டையனுக்கு, கட்சியில் பொருளாளர் பதவியும் மீண்டும் வேளாண்மைத் துறை அமைச்சர் பதவியும் தருவதாக கூறியுள்ளனர். முடிந்தால் சசிகலா அமைச்சரவையில் துணை முதல்வர் வாய்ப்பும் வழங்கப்படும் என்றெல்லாம் சொல்லி சமாதானப்படுத்தியே, அம்மாவுக்குப் பின் சின்னம்மாதான் என்று சொல்ல வைத்துள்ளனர்.
அதேபோன்ற உறுதி மொழிகளே கே.பி.முனுசாமிக்கும் அளிக்கபப்பட்டுள்ளது. கட்சியில் துணைப் பொதுச் செயலர் பதவியும் ஆட்சி - அதிகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பதவியும் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. இவர்களைப் போலவே, கட்சியில் அதிருப்தியுடன் இருந்து வரும் மூத்த தலைவர்கள் பலரையும் அழைத்து, சசிகலாவுக்கு ஆதரவாக இருக்கக் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்காக, நிறைய பேரிடம் வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டது.
ஆனால், சொன்னபடி யாருக்கும் எதுவும் செய்யப்படவில்லை. அதேநேரம், சசிகலாவை கடுமையாக எதிர்த்தார்; விமர்சித்துப் பேசினார் என்பதற்காக, நாஞ்சில் சம்பத்தை அழைத்து பேசி, எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளனர். அதையும் நினைத்து முத்த தலைவர்கள் கொந்தளிக்கின்றனர். இதனால், மீண்டும் சசிகலாவுக்கு எதிர்ப்பான நிலையை மேற்கொள்ளலாமா என, அவர்கள் ஆலோசிக்கத் துவங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவரது அரசியல் எதிர்காலம் கடும் சிக்கலுக்குள்ளாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Dailyhunt
No comments:
Post a Comment