Wednesday, February 1, 2017

திமுக எம்எல்ஏவை புகழும் ஓபிஎஸ்; பேரவைத் தலைவரை பாராட்டும் ஸ்டாலின்: சட்டப்பேரவையில் அரசியல் நாகரிகம் தொடருமா? எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்


தமிழக சட்டப்பேரவையில் கடந்த 23-ம் தேதி தொடங்கிய 2017-ம் ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளும் அதிமுகவும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் நடந்துகொண்ட விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் - பாஜக எம்பிக்கள் கடுமையாக மோதிக் கொள்வார்கள். ஆனால், சற்றுநேரத்தில் நாடாளுமன்ற உணவகத்தில் ஒன்றாக அமர்ந்து உணவருந்துவார்கள். அரசு நிகழ்ச்சிகளிலும், திருமணம் போன்ற நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு நட்பை வெளிப்படுத்துவார்கள். மற்ற மாநிலங்களிலும் இதேநிலைதான்.

ஆனால் தமிழக அரசியல் களத்தில் எதிரெதிராக இருக்கும் திமுக, அதிமுக வைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறை யிலும் எதிரிகளைப் போல நடந்து கொள்வார்கள். சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் போன்ற அரசு அலுவலகங்கள், பொது நிகழ்ச்சிகளில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டா லும் பேசிக்கொள்ள மாட்டார்கள்.

அதிமுகவினரின் குடும்ப நிகழ்ச்சிகளில் திமுகவினரும், திமுகவினரின் குடும்ப நிகழ்ச்சிகளில் அதிமுகவினரும் கலந்து கொண்டாலோ, அதிமுக - திமுக பிரமுகர்கள் பேசிக் கொண்டாலோ அதுதான் மறுநாள் தமிழக பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வரும். இதுதான் தமிழக அரசியல் கலாச்சாரமாக இருந்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளில் சட்டப்பேரவை உணவகத்தில் கூட அதிமுக - திமுக எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாக தேநீர் அருந்தியதையோ, சாப்பிட்டதையோ யாரும் பார்த்திருக்க முடியாது. ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறி தமிழகத்திலும் அரசியல் நாகரிகம் துளிர்க்க ஆரம்பித்துள்ளது.

2017-ம் ஆண்டுக்கான பேரவையின் முதல் கூட்டத் தொடர் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவின் உரையுடன் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. எப்போதும் இல்லாத வழக்கமாக பேரவை உள் வளாகத்திலும், உணவகத்திலும் அதிமுக - திமுக எம்.எல்.ஏ.க்கள் சகஜமாக பேசிக் கொள்வதைக் காண முடிந்தது.

24-ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதாவின் துணிவைப் பாராட்டி பேசினார். மீண்டும் 27-ம் தேதி சட்டப்பேரவை கூடியது. கேள்வி நேரம், பூஜ்ய நேரம், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களில் அதிமுக - திமுக எம்.எல்.ஏ.க்கள் நடந்துகொண்ட விதம் அரசியல் நாகரிகத்துக்கு வித்திடுவதாகவே இருந்தது.
முன்பெல்லாம் கேள்வி நேரத்தின் போது கூட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவைச் சீண்டுவார்கள். திமுக தலைவர் கருணாநிதியை மறைமுகமாக தாக்குவார்கள். திமுகவினர் எதிர்த்தால் யாருடைய பெயரையும் உறுப்பினர் குறிப்பிடவில்லையே என அமைச்சர்கள் சமாளிப்பார்கள். பதிலுக்கு திமுகவினரும் சீண்டுவார்கள்.

பூஜ்ய நேரம் என்பது முக்கியப் பிரச்சினைகளையும், கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு தீர்மானங்களை எழுப்பும் நேரம் என்பதால் எப்போதும் அனல் பறக்கும். கடந்த 5 ஆண்டுகளில் பூஜ்ய நேரத்தில் வெளிநடப்புகள் இல்லாமல் இருந்ததில்லை. விவாதங்களின்போது திமுக தலைவரின் குடும்பத்தை அதிமுகவினரும், அதிமுக தலைவரின் குடும்பத்தை திமுகவினரும் விமர்சிப்பார்கள்.
ஆனால், இந்தக் கூட்டத் தொடரில் தனிப்பட்ட தாக்குதல்கள், சீண்டுதல்கள் இல்லை. பேரவைத் தலைவரை அடிக்கடி ஸ்டாலின் பாராட்டுவதைப் பார்க்க முடிகிறது. திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேசினால் அது கூச்சல் குழப்பத்தில்தான் முடியும். பலமுறை அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஆனால், கடந்த 27-ம் தேதி ஜெ.அன்பழகன் பேச்சை கேட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “மிகுந்த பொறுப்புடன் அமைதியாக சொல்ல வேண்டியதைப் பதிவு செய்தார். நாம் எதிர்பார்த்தது போலவே சட்டப்பேரவை நடந்து வருகிறது'' என பாராட்டினார். முன்பெல்லாம் இதனை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

சென்னை கடல் பகுதியில் கச்சா எண்ணெய் கலந்து மீன்கள் செத்து மிதப்பது குறித்து திமுக உறுப்பினர் கே.பி.பி.சாமி கேள்வி எழுப்பினார். அவரை முழுமையாக பேச வேண்டும் திமுகவினர் கோஷமிட்டனர். அப்போது குறுக்கிட்ட ஸ்டாலின், பூஜ்ய நேரத்தில் திமுக உறுப்பினர்கள் 3 பேருக்கு வாய்ப்பளித்த பேரவைத் தலைவருக்கு நன்றி என்றார். அதனைத் தொடர்ந்து அப்பிரச்சினை குறித்து விளக்கமாக பேச ஸ்டாலினுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
சட்டப்பேரவை இப்படி இணக்கமாக சென்று கொண்டிருப்பதை மூத்த பத்திரிகையாளர்கள் ஆச்சரியத்துடனும், மகிழ்வுடனும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் இதற்கு வேட்டு வைப்பதுபோல நேற்று ஸ்டாலின் பேசும்போது, திமுக உறுப்பினர்களும், அமைச்சர்களும் மோதிக் கொண்டனர். இதனால் மீண்டும் துளிர்த்த அரசியல் நாகரிகம் தொடருமா என்ற கேள்வியும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக எம்.ஜி.ஆர். காலத்தில் அமைச்சராக இருந்த எச்.வி.ஹண்டேவிடம் கேட்டபோது, “கடந்த சில நாட்களாக சட்டப்பேரவை நிகழ்வுகளைப் பார்க்கும்போது காமராஜர், அண்ணா காலத்தை நினைவுபடுத்துகிறது. இது மகிழ்ச்சியாக இருக்கிறது. சில நேரங்களில் காரசாரமான விவாதங்கள் இருந்தாலும் காழ்ப்புணர்ச்சி இல்லாமல், விரும்பத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் பேசுகின்றனர். இந்த ஆரோக்கியமான போக்கு எப்போதும் தொடர வேண்டும்'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024